கோவை: பள்ளி மாணவி மீது முஸ்லீம் வெறுப்பு – மதவெறி பிடித்த ஆசிரியர்களை கைதுசெய்!

முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறையில் சம்பந்தப்பட்ட அபிநயா, இராஜேஸ்வரி, இராஜ்குமார் போன்ற மதவெறிப்பிடித்த ஆசிரியர்கள்  நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கோவை : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் வெறுப்பு பிரச்சாராத்திற்கு பலியாகும் பள்ளிக் கூடாரங்கள்: இஸ்லாமிய மாணவி மீது ஆசிரியர்கள் மதவெறுப்புணர்வு தாக்குதல்!

கோவை மாவட்டம், துடியலுர் பகுதி அசோகபுரத்தில் அரசுப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் அபிநயா என்கிறப் பயிற்சி ஆசிரியை ஏழாம் வகுப்பு பயிலும் இஸ்லாமிய மாணவிக்கு வகுப்பெடுத்து வந்துள்ளார். அம்மாணவி குறிப்புகளை சக மாணவிகளிடம் நோட்டைப் பெற்று எழுதுவதைக் கண்டித்துள்ளார் அபிநயா. அம்மாணவியிடம் “உனது அப்பா என்ன வேலை செய்கிறார்” என்று கேட்டுள்ளார். அதற்கு,  “அப்பா மாட்டிறைச்சி கடையில் வேலை செய்கிறார்” என்று கூறியதற்கு “மாட்டுக்கறி தின்ற உனக்கெல்லாம் இந்த திமிரு இருக்கத்தான் செய்யும்” என்று மாணவியிடம் அபிநயா முஸ்லீம்வெறுப்பை கக்கியுள்ளார்.

இச்சம்வத்தை மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். அதை அவர் பெரிதுபடுத்தாமல் அலட்சியப்படுத்தி வந்துள்ளார். அதன்பிறகும் அபிநயா, அம்மாணவியிடம் தொடர்ந்து முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறைகளை செய்து வந்துள்ளார்.

தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காததால் போலீசு நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் பெற்றோர்கள். பின்னர், போலீசு அதிகாரி இருதரப்பிற்கும் சமரசம் செய்துவைத்துள்ளார். ஆனால், அப்பள்ளி தலைமையாசிரியை, பயிற்சி ஆசிரியை ஆகியோர் தனது முஸ்லீம் வெறுப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை.

படிக்க : கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

அதன்பிறகு, மாணவி பள்ளிக்கு வழக்கம்போல் சென்றுள்ளார். அடுத்த நாள், காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தலைமையாசிரியர் இராஜேஸ்வரி பேசியப் போது “இஸ்லாமிய பெண் ஒருவர் நமது பள்ளியின் பெயரைக் கெடுக்கும் விதமாக நடந்துள்ளார்” என முஸ்லீம் வெறுப்பு வன்மத்தைக் கக்கியுள்ளார். பேசி முடித்து வகுப்பறைக்கு சென்றவுடன், ஆங்கில ஆசிரியர் ராஜ்குமார் என்பவன் தேர்வு நடந்துக் கொண்டிருக்கும்போது ”திமிரு புடிச்சவளே இங்க வாடி” என்ற பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து வினாத்தாள்களை விநியோகிக்க செய்துள்ளான். வினாத்தாள் விநியோகிக்கும்போது “உன்னையெல்லாம் புர்கா போட அனுமதிப்பதே தவறு, புர்காவால எல்லாத்து சூவையும் தொட” என்று கூறியுள்ளான். அம்மாணவி புர்காவை கழட்டாமல் கைக்குட்டை வைத்து நான்கு மாணவிகளின் சூவைத் துடைத்துள்ளார். இச்சம்பவங்களை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத அம்மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

அதன்பின், மாணவியின் பெற்றோர் முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி மற்றும் சாய்பாபா காலனி உதவி ஆணையாளர் சந்திரசேகர் முன்னிலையில் பள்ளியில் விசாரணை நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை ராஜேஸ்வரி, சம்பந்தபட்ட ஆசிரியர்கள் தவறை ஒப்புக்கொள்ளவில்லை. இதுவரை சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று (22-11-2023) நடந்த விசாரணையின்போது எந்தவொரு மாணவியிடம் விசாரிக்காமல் வெறும் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், சக ஆசிரியர்களை மட்டும் விசாரித்துவிட்டு சென்றுள்ளனர் அதிகாரிகள். இந்த விசாரணை பெற்றோர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மாணவிகளிடமும் விசாரிக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.  மீண்டும் நாளை(23.11.23) விசாரித்து முடிவு எடுக்கப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

விசாரணை மேற்கொண்டிருந்தப்போது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கோட்ட பொறுப்பாளர் உரிவை பாலன், பொது செயலாளர் தியாகராஜன், கார்த்திக், சுதாகர் ஆகியோர் பள்ளியின் முன் கூடி “ஆசிரியர்கள் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர். மாணவியின் பொற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போலீஸிடம் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி புகார் கொடுக்க விரும்பினால் போலீசு நிலையத்தில் கொடுங்கள் என்று உதவி ஆணையாளர் கூறினார்.

பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவி மீதும், அவரது பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லும் இந்துமதவெறி பீடித்துள்ள இந்து முன்னணி அமைப்பை வன்மையாக கண்டிக்கிறோம். அப்பகுதியில் தீவிர மதவெறுப்புணர்வு பிரச்சாரம் செய்து சிறுபான்மை மக்களை அச்சத்தில் வைத்திருக்கும் பாசிச இந்து முன்னணி கும்பல், அங்கு செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.யின் இந்து முன்னணி, வி.எச்.பி ஆகிய இந்துமதவெறி அமைப்புகளின் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதிதான் துடியலூர். 2016-ஆம் ஆண்டு இந்து முன்னணியை சேர்ந்த சசிக்குமார் இறந்தபோது இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியிலுள்ள மாட்டிறைச்சி கடைகளும், இஸ்லாமியர்கள் வீடுகளும் சூறையாடப்பட்டன. அதனால், அப்பகுதியில் இசுலாமிய மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஞாயிறு(19.11.23) அன்று துடியலூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைப்பெற்றுள்ளது. இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பல் கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியை மையப்படுத்தி வேலைகளை செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை வைத்து தாக்க செய்தார். அதேபோல, கல்விநிலையங்கள் பாசிச கும்பலின் மதவெறுப்பு நிறைந்த இடமாக மாறி வருகின்றன.

கோவையில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலை எதிர்த்து யாரும் வாயை திறக்க முடியாத சூழலை உருவாக்கப்பட்டு வருகிறது.

படிக்க : சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!

உத்தரபிரதேசத்தை போன்று கோவையை மாற்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டுமானால் இச்சம்பவத்தை எளிதாக கடந்து செல்ல கூடாது. இக்கும்பலின் தொடர்ச்சியான மதவெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக களத்தில் போராட வேண்டும். கோவையில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சி நடைபெற்றது அம்பலமாகி உள்ளது. அவற்றை முழுமையாக தடுப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

முஸ்லீம் வெறுப்பு ஒடுக்குமுறையில் சம்பந்தப்பட்ட அபிநயா, இராஜேஸ்வரி, இராஜ்குமார் போன்ற மதவெறிப்பிடித்த ஆசிரியர்கள்  நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற சிறுபான்மையினருக்கு எதிரான மத வெறுப்புணர்வூட்டும் செயல்பாடுகள் அப்பள்ளியில் தொடர்ச்சியாக நடக்கிறதா எனும் நோக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பள்ளியில் ஆ.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் செயல்பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.

தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
9488902202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க