சி.ஏ.ஜி. அதிகாரிகள் இடமாற்றம்: ‘பரிசுத்த ஆவி’யாகிவிட்டது மோடி அரசு!

ஹிண்டன்பர்க் அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை போன்றவை வெளியாகியே மோடி அரசை நாம் நெருக்கடிக்குள்ளாக்க முடியாமல் போயிருக்கும் சூழலில், இனி மோடி அரசின் ஊழல்களை சட்டபூர்வமாக அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிவிட்டது.

டந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்த  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒன்றிய  அரசின் திட்டங்கள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்தது இந்திய தலைமை தணிக்கை அமைப்பு (சி.ஏ.ஜி).  இந்த அறிக்கைகளானது, பாசிச மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு நாடகத்தை நாடு தழுவிய அளவில் அம்பலப்படுத்தியது. “மக்கள்நலத் திட்டங்களா? ஊழலுக்கான திட்டங்களா?” என முதலாளித்துவ ஊடகங்களே எள்ளி நகையாடும் அளவிற்கு, கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் மோடி தொடங்கி வைத்த  7 முக்கிய திட்டங்களில் 7.5 லட்சம் ரூபாய் அளவிற்கு  ஊழல் நடைபெற்றிருக்கிறது.

பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் மோடி அரசின் இந்த இமாலய ஊழல் அம்பலப்பட்டு, விவாதப் பொருளாகியவுடன், வெகுண்டெழுந்த மோடி அரசு, இந்த அறிக்கையை வெளியிட்ட மூன்று உயரதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது. குறிப்பாக, துவாரக எட்டுவழிச்சாலைத் திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்ட கி.மீ.க்கு 18.20 கோடி ரூபாய்க்குப் பதிலாக, கி.மீ.க்கு 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், மருத்துவமனையில் இருந்து குணமாகிச் சென்றவர்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லி ஊழல் செய்திருப்பதையும் அம்பலப்படுத்திய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

படிக்க : திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

குறிப்பாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்த சி.ஏ.ஜி. உள்கட்டமைப்பு பிரிவின் முதன்மை இயக்குநர் அதுவா சின்ஹா, திருவனந்தபுரத்தின் அக்கவுண்ட்டெண்ட் ஜெனரலாக மாற்றப்பட்டுள்ளார்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொணர்ந்த சி.ஏ.ஜி.யின் மத்திய செலவினங்கள் பிரிவின் தலைமை இயக்குநர் சூர்யகாந்த சிர்ஷாத், சி.ஏ.ஜி.யின் சட்ட இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்; ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார் என்பதற்காக சி.ஏ.ஜி.யின் வடக்குமண்டல இயக்குநரான அசோக் சின்ஹா சி.ஏ.ஜி அலுவல் மொழி இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரிகளின் இடமாற்றத்திற்கு எதிராக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. ஒன்றிய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தி, மோடி கும்பலின் ஊழல் ஒழிப்பு முகமூடியை கிழித்ததற்காகவே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது. ‘ஊழலை ஒழித்த மோடி அரசு’ என்று கேலிசெய்து சமூக ஊடகங்களில் மீம்கள் பகிரப்பட்டன. அந்தளவிற்கு  இந்த விவகாரம் நாறியிருக்கிறது. ஆனால், சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியான விவகாரம். இதில் அரசியல் ரீதியான உள்நோக்கம் கற்பிப்பது தவறு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சுயேச்சையான அமைப்புகள் என்று சொல்லப்படுகிற, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவை அனைத்தும் பாசிச மோடி அரசின் அங்கமாகவே மாறியிருக்கின்றன. தற்போது இந்தப் பட்டியலில் சி.ஏ.ஜி.யும் இணைந்திருக்கிறது. ஆனால், இதை வெறும் இடமாற்றம் என்றோ, மோடியின் ஆட்சியில் நடப்பது சகஜம்தான் என்றோ கடந்து சென்றுவிட முடியாது.

படிக்க : சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்

மற்ற ‘சுயேச்சையான’ அமைப்புகள் போலன்றி, சி.ஏ.ஜி. போன்ற அமைப்புகளோ அரசின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் நிறுவனங்களாகும். இந்த சி.ஏ.ஜி.யின் உயரதிகாரிகளை இடமாற்றம் செய்திருப்பதானது, இனி, மோடி அரசை பரிசுத்த ஆவியாகக் காட்டுவதற்கான அடிப்படையை உருவாக்கியிருப்பது மட்டுமின்றி, அரசுக் கட்டமைப்பை ஆர்.எஸ்.எஸ்.மயமாக்குவது ஒரு புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஹிண்டன்பர்க் அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை போன்றவை வெளியாகியே மோடி அரசை நாம் நெருக்கடிக்குள்ளாக்க முடியாமல் போயிருக்கும் சூழலில், இனி மோடி அரசின் ஊழல்களை சட்டபூர்வமாக அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்ற நிலைமையை மோடி அரசு உருவாக்கிவிட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.மயமாக்கப்பட்டு வருகின்ற இந்த அரசுக் கட்டமைப்பின் சந்து பொந்துகளில் நின்று கொண்டு, மோடி அரசை தேர்தலில் வீழ்த்திவிடலாம் என்று கருதுவது பகல்கனவே.

வாகைசூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க