சிவப்பின் அடையாளம் சாம்பவான் ஓடை சிவராமன்

போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம்.

“தன் பெண்டு தன் பிள்ளை சோறுவீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன் !”

என்ற பாரதிதாசனின் வரிகள் மனதைத் தொட்டு செல்லும். இவ்வரிகளுக்கு ஏற்ப பலர் வாழ்ந்துக்கொண்டு இருந்தாலும் சேற்றில் முளைத்த செந்தாமரை போல தஞ்சை சாம்பவான் ஓடையில் உதித்து சிவப்பின் அடையாளமாகத் திகழ்ந்தவர் தான் சிவராமன்.

பண்ணையாளர்களின் அடக்குமுறை, பண்ணைத் தொழிலாளிகளின் அடிமைமுறை அதிகம் நிலவியதும், கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டதும் தஞ்சையில் தான். இதனை எதிர்த்து போராடியவர்களில் சாம்பவான் ஓடை சிவராமன், வாட்டாக்குடி இரணியன். இருவரும் 1940 களில் பொதுப்பணியில் ஈடுபடுகின்றனர். மனிதனில் ஏது மேல், கீழ், ஏன் இந்த வேற்றுமை, ஏன் இவ்வளவு அடிமை முறைகள் என்று பண்ணையடிமை முறைக்கு எதிராக போராடினர். இருவரும் ஒரே ஆண்டில்(1950 மே 3 சிவராமன், மே 5 இரணியன்) காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்..

படிக்க : திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

1940 களில் கீழத் தஞ்சையில் முதன்முதலாக விவசாயச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாகப் பயந்து பயந்தே வாழ்ந்த பண்ணை அடிமைகளுக்கு சீனிவாச ராவ், சிவராமன், இரணியன் போன்றோர் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தனர்.

இதில் குறிப்பாக சிவராமனின் வாழ்க்கை ஒரு போராட்ட களம் அதில் சிவராமன் விதைக்கப்பட்டிருக்கிறான். வாழ்பவர்கள் மனங்களில் மறைந்தவர்கள் வாழ்வது தான் தியாகத்தின் வெளிப்பாடு, அப்படிப்பட்ட தியாகத்தினால் என்றுமே சாம்பவான் ஓடை சிவராமனை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

செல்வமிக்க குடும்பத்திலும், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள குடும்பத்திலும் பிறந்தவன் சிவராமன். சிவராமனின் நோக்கம் சாதியப் படிநிலைகளை ஒழிக்க வேண்டும், உழைக்கும் மக்களை ஓர் அணியாக ஒன்றுதிரட்டி ஆதிக்கத்திற்கு எதிராக போராடுவதுமாகும். கம்யூனிஸ்ட் தோழர்களை சந்திப்பதற்கு முன் சாதிய அடக்குமுறைகளை செய்தவன் தான்  சிவராமன். தோழர்களின் டீ கடை விவாதங்களுக்கு பிறகு சாதிய ஆதிக்கத்தையும், அடிமைமுறைகளையும் அதன் அட்டூழியங்களையும் கண்டபிறகு கொதித்தெழுந்தான். இந்த சாதியப் படிநிலையை ஒழிப்பதற்கு தன்னையே அர்பணித்துக்கொண்டான்.

சுந்தரராசு, சுப்ரமணியம் மற்றும் பல தோழர்கள் சிவராமன் எனும் கம்யூனிஸ்ட் உருவாவதற்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தார்கள். சிவராமன் அதிகமாக படிக்காவிட்டாலும் நிறைய புத்தகங்களை படித்தான் தோழர்கள் மூலம் பல தகவல்களை தெரிந்துக்கொண்டான்.

திக்கித் திக்கி பேசும் சிவராமனுக்கு அந்தத் திக்குகள் ஒரு தித்திப்பை ஏற்படுத்துபவையாக இருந்தது. சீனிவாச ராவ் போன்ற தோழர்களால் பட்டைதீட்டப்பட்டு மெருகேற்றப்பட்டான். பல ரகசியக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு நாட்டின் நலன் பற்றியும் சேரி மக்களின் மேன்மை பற்றியும் சிந்திக்க தொடங்கினான். முழுமையாக கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்றுக்கொண்டு செயல்பட்டான்.

சிவப்பின் தாக்கம்

நாட்டில் திருடன் கூட வெளிப்படையாக நடமாட முடியும், ஆனால் ஒரு கம்யூனிசக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டவனால் சுதந்திரமாக நடமாட முடியாது. இதில் சிவராமன் விதிவிலக்கல்ல. தன் மனைவி, தன் குழந்தை என்று தன் குடும்பத்தை இழந்த பிறகும் தான் எடுத்துக்கொண்டக் கொள்கை நெறியில் சிறிதும் விலகாமல் உறுதியாக நின்றான்.

சகமனிதனை உயர்வு தாழ்வு என்றும், எப்போதும் வேறுபாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிண்ணப்பட்ட சிலந்திவலை தான் சாதி. இந்த சாதியென்னும் சாக்கடையை ஒழிக்க, பண்ணையார்களின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடி சேரிகளின் நலனை காத்து சேரிமக்களை தலைநிமிர செய்தான்.

மே தினத்தில் பண்ணையாரின் வீட்டிலிருந்து நெல்மூட்டைகளை எடுத்து சேரிமக்களுக்கு கொடுத்தது, குத்தகைதாரர்களுக்கு அதிக நெல் வழங்க வேண்டும், பண்ணைத் தொழிலாளிகளின் மீதான அடக்குமுறைகள் நிறுத்த வேண்டும் என்று சேரிமக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினான்.

புதிய தளம் கம்யூனிசம்

மனிதன் மனிதனாக உணர்வது சகமனிதனை நேசிக்கும் போது தான், அதை கம்யூனிசக் கொள்கை சிவராமனுக்கு கற்றுக்கொடுத்தது. சமூக மாற்றத்திற்காகப் பயணிக்க அமைத்த தளமாக இருந்தது. இங்கு சாதி மறந்து அனைவரும் “தோழர்” என்னும் சொல்லில் ஒன்றிணைந்தனர். இதுவெல்லாம் சிவராமனை வேறு உலகிற்கு அழைத்து சென்றது. உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தம், உயர்வு, தாழ்வு இல்லை போன்ற சிந்தனைகள் தோன்றிய தளமாக கம்யூனிசக் கொள்கை இருந்தது.

மார்க்ஸ், லெனின் என்று கம்யூனிஸ்ட்களை தெரிந்துப் புது மனிதனாக உருவெடுத்தான்.  “கம்யூனிஸ்ட்கள் சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றுமே செய்யவில்லை” என்று கூறிக்கொண்டு திரியும் கூட்டத்திற்கு சிவராமன், வாட்டாக்குடி இரணியன், களப்பால் குப்பு, சீனிவாச ராவ், ஆறுமுகம் போன்றவர்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர்கள் சாதியை ஒழிக்க போராடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது தான். ஆனால் அதையும் தாண்டி மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பொதுவுடமை கருத்தை மக்களிடையே விதைத்தவர்கள். சேரிமக்களின் நலனுக்காகவும் பொதுவுடமை மலர்வதற்காகவும் தன்னை அர்பணித்தத் தோழர்களில் சிவராமனும் ஒருவன். வீழவில்லை வாழ்கிறான்

“புரட்சியாளன் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறான்”

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், பண்ணையடிமை முறைக்கு எதிராகவும் போராடியவன். சிவராமனை நினைக்கும் போது பகத்சிங் நினைவிற்கு வருகிறார். பகத்சிங் தூக்கிலிடப்படும் நிலையில் அவரை வெளியே கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது பகத்சிங்கிடம் “நீங்கள் சரி என்று கூறுங்கள் நாம் வெளியே தப்பித்துப் போய் விடலாம்” என்று கூறப்பட்டது. ஆனால் பகத்சிங் “நான் வெளியே வந்தால் ஒரு பகத்சிங். நான் தூக்குக்கயிறை முத்தமிட்டால் லட்சக்கணக்கான பகத்சிங் வருவார்கள்” என்றார். அதுபோல தான் சிவராமனும் தனக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உருவாவார்கள் என்று உயிரையும் நீத்தார்.

எப்போது நாம் பிறருக்காக வாழ்கிறோமோ அப்போது நம் எரிந்துப் போன சாம்பலின் மீது சூடானக் கண்ணீர் துளிகள் சிந்திக்கொண்டே இருக்கும். இந்த வரம் சிவராமனுக்கு கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில், இவன் சேரியின் மேன்மைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்டான் பொதுவுடமைக் கொள்கைக்குத் தன்னையே ஒப்படைத்தான். ஆதலால், அவனது சாம்பல் என்றுமே சூடாகத் தான் இருக்கும்.

இதுவா மக்களுக்கான அரசு?

அன்று சமூக மாற்றத்திற்காக பயணித்த இந்தப் படகைத் துளையிட்டு நீரில் மூழ்கடித்தது யார் தெரியுமா? இவன் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடியவன் தான் ஆனால், அப்போது இவன் கொல்லப்படவில்லை. 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம்(அதிகார மாற்றம்) பெற்றது என்று சொல்லி கொள்கிறோமே, எந்த நாட்டை குடியரசு நாடு என்று சொல்கிறோமோ அங்கு அனைவரும் சமம் என்று நாம் சொல்கிற நாடு தான் அன்று பண்ணையார்களுக்கு சேவகம் செய்யும் நாடாகவும் இருந்தது.

படிக்க :உ.பி இல்லை! தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறுப்பு! | வீடியோ

இதை தட்டிக்கேட்டான் சிவராமன். அவன் உடலை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தது, ஆம் இந்நாட்டின் விடுதலைக்காக யாரெல்லாம் போராடுகிறார்களோ அதுவும் இந்த கட்டமைப்பையே மாற்றியமைக்க வேண்டும் என்று போராடுபவர்களுக்கு நிச்சயம் துப்பாக்கி குண்டுகள் காத்திருக்கிறது என்பதை தான் ஒவ்வொரு போராளிகளின் வாழ்க்கையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. உரிமைகளுக்காகப் போராடும், போராடக் கூடிய மக்களை நசுக்கும் இந்த அரசு யாருக்கானது? நிச்சயம் மக்களுக்கானது கிடையாது. அப்படி இருந்திருந்தால் போராளிகளின் நெஞ்சை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்காது.

முடியவில்லை ஆரம்பம்

போராளிகளின் இரத்தம் எங்கெங்கு சிந்தப்படுகிறதோ அங்கெல்லாம் புதிய போராளிகள் துளிர்விட்டுகொண்டுத் தான் இருக்கிறார்கள். அதைபோல தான் சிவராமன் ஓர் முடிவல்ல நாளை நாம் அடைய போகும் பொன்னுலகிற்கான ஆரம்பம். அவன் வாழ்க்கையும் நமக்கு அதைதான் கற்றுக்கொடுக்கிறது. மரங்கள் வெட்டப்பட்டாளும் வேர்களின் ஈரம் காய்வது கடினம் தான். சிவராமன் வேராக தான் இருப்பான் அவன் தியாகம் என்றும் சுடர்விட்டு எரிந்துக் கொண்டே இருக்கும், இருந்து கொண்டே இருக்கும்.

– மணிவன்னண்
(ச. சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய  “இரட்டைப் புதினங்கள் சாம்பவான் சிவராமன்” புத்தகத்தை வாசித்ததிலிருந்து கிடைத்த அனுபவம்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க