1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் காரல் மார்க்சின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது, கம்யூனிச தத்துவத்தின் படி வாழ்ந்தவனும், தஞ்சை மாவட்டத்தின் பண்ணை முதலாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவனுமான வெங்கடாச்சலம் என்ற வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும், பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள வடசேரி என்ற கிராமத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

அவர்கள் ஏன்? எதற்காக? கொல்லப்பட்டார்கள் என்ற ஆவலை நமக்குள் ஏற்படுத்தி, இரணியனின் அப்பழுக்கற்ற, சுயநலக் கலப்பில்லாத, தியாகம் நிறைந்த வாழ்க்கையை சொல்லியிருக்கிறார் ச.சுபாஷ் சந்திர போஸ். இந்த நூல் சமூகத்திற்கு உரமாகிப்போன ஒரு மாமனிதனின் வரலாற்றைச் சொல்வதோடு மட்டுமல்லாமல் , அவனது தியாக வாழ்க்கையை நமக்குள் விதைத்து கனமான வேதனையையும் ஏற்படுத்துகிறது.

இரணியன் பிறப்பு

1920-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி பிறந்த இரணியனுக்கு ஒரு அக்கா , தம்பி நாராயணன் , தங்கைகள் சிவபாக்கியம் மற்றும் மீனாட்சி ஆகியோர் உடன்பிறந்தவர்கள். இரணியனுன் இயற்பெயர் வெங்கடாச்சலம். தனது 14-வது வயதில் தனது அக்கா கணவருடன் சிங்கப்பூர் செல்லும் வெங்கடாச்சலம் அங்கு பணம் ஈட்டுவதற்கு புட்டு, இடியாப்பம் போன்ற உணவுப் பண்டங்களை விற்கும் சிறு வியாபாரியாக வாழ்கிறான். அந்த சூழ்நிலையில் தமிழர்களுக்கு, தீவிரத்தன்மை கொண்ட மலேசிய மற்றும் சீனர்களால் பல தொல்லைகள் ஏற்பட்டன . அவர்களையெல்லாம் அடித்து விரட்டி தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்தான். அதனால் இவனது பெயரும் புகழும் சிங்கப்பூரில் பிரபலமடையத் துவங்கியது. சில நாட்களுக்குப் பிறகு அவனது அக்கா கணவரின் தொடர்பும் துண்டிக்கப்படுகிறது. வெங்கடாசலம் சுயமாக வாழத் துவங்குகிறான்.

இந்த சமயத்தில் பிழைப்பிற்காக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த தம்பிக்கோட்டையைச் சேர்ந்த மலேயா கணபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மணல்மேல்குடி கிராமத்திலிருந்து வந்த வீரசேனன் ஆகியோர்களின் அறிமுகம் கிடைக்கிறது. அவர்கள் மூலம் கம்யூனிசச் சித்தாந்தங்களையும் உலக, இந்திய, தமிழக வரலாறுகளையும் நன்கு படித்துத் தெரிந்து கொள்கிறான்.

படிக்க :
♦ லெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !

பழந்தமிழ் பாடல்களில் உள்ள தமிழர்களின் வீரமும் மானத்தோடு வாழ்ந்த வாழ்க்கையும் அவனுக்கு மெய் சிலிர்ப்பைத் தருகிறது. உயிர் போனாலும் தான் மானத்துடன் வாழ வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகவே ஏற்றுக் கொள்கிறான். மண்ணாக இருந்த என்னைக் குழைத்துக் கல் ஆக்கினார்கள் என்று அவர்களைப்பற்றி நன்றியுடன் குறிப்பிடுகிறான் . கார்ல் மார்க்சின் சித்தாந்தம் உறுதிமிக்க செங்கல் ஆக்கியது.

இந்திய தேசிய இராணுவத்தில் இரணியனின் பங்கு

அப்போது, இரண்டாவது உலகப் போருக்கான மேகங்கள் தெரிந்தன. உலகப்போர் மூளுமானால் வெள்ளையரோடு ஒத்துழைக்காமல் அவர்களோடு போரிட்டுக் கிழக்காசியாவை மீட்கக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. இளைஞர்களுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை அழைத்துக் கொரில்லாப் பயற்சி கொடுத்தது. இராஷ் பிஹாரி போஸ் அமைந்து இருந்த இந்திய தேசிய லீக்கில் ஆயிரக்கணக்கான கம்யூனிசிய இளைஞர்கள் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். அதில் வெங்கடாசலமும் சேர்ந்தான். அங்கே வெங்கடாசலம் என்ற பெயரில் இருவர் இருந்ததால் தன் பெயரை “இரணியன்” என்று மாற்றிக்கொண்டான். இதுவே சரித்திரத்தில் நிலைத்துப் போன பெயராகி விட்டது.

இந்நிலையில் 1943-ம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெர்மனியிலிருந்து பல இடையூறுகளைத் தாண்டி சிங்கப்பூர் வருகின்றார். அவர் சிங்கப்பூர் வந்ததும் இந்திய மக்களிடையே ஒரு புதுத்தெம்பு பிறக்கின்றது. அவர் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இந்திய வம்சாவளி ஆண்களும் பெண்களும் சேர்ந்தார்கள். இரணியனும் “இந்திய தேசிய இராணுவத்தில்” சேர்ந்து இந்திய விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபடுகிறான். ஏற்கனவே இருந்த பயிற்சியோடு கொரில்லா போர்முறையை இன்னும் நன்றாகக் கற்று தேர்ச்சி பெறுகிறான். இப்பயிற்சியே தஞ்சை மண்ணில் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தது வரலாற்று உண்மை.

நேதாஜி

இரணியன் தனது தோழர்கள் மலேயா கணபதி , வீரசேனன் ஆகியோருடன் சேர்ந்து ஒரு முறை சுபாஷ் சந்திர போஸை சந்தித்தாகவும் , கிழக்காசியாவை ஜப்பான் பிடித்து விட்டால் , போருக்குப் பிறகு மக்களிடம் ஆட்சியை ஒப்படைக்குமா ? , முதலையைப் போல பிடியைவிடாமல் இருக்குமா? போரில் இந்திய தேசிய இராணுவம் வெற்றி பெற்றால் ஜப்பான் இந்தியாவிலும் தன் மூக்கை நீட்டுமா ? என்ற கேள்விகளை எழுப்பி வாக்குவாதம் அவரிடம் செய்ததாகவும், அதற்கு, போர் முடிவிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இன்முகத்தோடு கூறி சுபாஷ் சந்திர போஸ் இவர்களை அனுப்பி வைத்ததாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய தேச விடுதலைக்காக நேதாஜி தலைமையின் கீழ் போரிட்ட “விடுதலைப் போராட்ட தியாகி” இரணியன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பின்னர், அமெரிக்கா ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டை வீசியது. ஜப்பான் அரசாங்கம் நிலை குலைந்தது. ஜப்பான் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை . இதனால் இந்திய தேசிய இராணுவத்திற்குப் பயங்கரமான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உணவு , உடைக்கு வழியில்லாமல் வீரர்கள் திண்டாடினார்கள். ஆங்கிலேய இராணுவத்தால் பலர் கைது செய்யப்பட்டனர். பலர் கைதாகாமல் தப்பி ஓடிவிட்டனர். இரணியனும் சில முக்கியமான தோழர்களும் ஆங்கில அரசின் பிடியில் சிக்காமல் தங்கள் பழைய இடத்திற்கு வந்தார்கள்.

சிங்கப்பூர் துறைமுகத் தொழிற்சங்கத் தலைவராக இரணியனின் பணிகள்:

இந்திய தேசிய இராணுவத்திலிருந்து திரும்பிய பிறகு , எண்ணிக்கையில் மூன்று லட்சம் தொழிலாளர்கள் இருந்த அகில மலேயா தொழிலாளர்களுக்குத் தலைவர் ஆகிறார் கணபதி. அதன் காரியதரிசி ஆகிறார் வீரசேனன். அப்போது எல்லாத் தொழிற்சங்கங்களும் ஓரளவு செயல்பட்டாலும் துறைமுகத் தொழிற்சங்கத்தை சிறப்பாக நடத்த முடியவில்லை. இந்தச் சங்கம் பலமாக இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் என ஆங்கிலேய அரசு இதை நசுக்குவதில் கவனமாக இருந்தது. ஏறத்தாழ 12000 தொழிலாளிகள் இருந்த அந்தச் சங்கத்தை வலுப்படுத்த அதன் தலைவர் பதவி இரணியனுக்கும், காரியதரிசி பதவி பட்டுராசுவிற்கும் கொடுக்கப்படுகிறது.

இரணியன் பொறுப்பிற்கு வந்தவுடன், குடியின் பிடியிலிருந்த துறைமுகத் தொழிலாளர்களை நெறிப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கிறான். தொழிலாளர்கள் யாரும் குடிக்கக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வருகிறான். மீறுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள்.

அப்போது சிங்கப்பூரில் ரவுடிகளின் பிடி அதிகமாக இருந்தது . ஒவ்வொரு பகுதிக்கு ஒரு ரவுடி என்று அவர்களுக்குள் சிங்கப்பூரை பிரித்துக் கொண்டு மக்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். அதில் துறைமுகத் தொழிலாளர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அதனால் அவர்களுக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டான் இரணியன். அதனால் பிரபலமான ரவுடி ஒருவனை தேர்ந்தெடுத்து அவனை மக்கள் முன்னிலையில் அடித்து நொறுக்குகிறான் . அவன் உயிருக்கு பயந்து சிங்கப்பூரை விட்டு ஓடி விடுகிறான்.

மற்ற சிலரையும் அடக்க முடிவெடுத்த இரணியன் , அவர்களில் முக்கியமான நால்வரைத் தேர்ந்தெடுத்து ஒரு நாள் இரவு இரகசியமாக சுட்டுக் கொன்று விடுகிறான். சிங்கப்பூர் ஆடிப்போகிறது. இக்கொலைகளை யார் செய்தார்கள் என்று தெரியாவிட்டாலும் இரணியனின் பெயர் தான் சிங்கப்பூர் நகரம் முழுவதும் எதிரொலிக்கிறது. அதனால் குடியும் , ரவுடிகளின் தொல்லைகளும் குறைந்து துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்வு செழித்தது.

படிக்க :
♦ கைவிடப் போகிறோமா நமக்கான விவசாயிகள் போராட்டத்தை !
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

இந்தியா திரும்புதல்

இரணியனின் தலைமையில் துறைமுக தொழிற்சங்கம் மிகச் சிறப்பாக செயலாற்றியது. பட்டுராசுவின் நேர்மையான நடவடிக்கையால் சந்தாத் தொகை லட்சக்கணக்கான வெள்ளிகள் சேர்ந்தன. ஆனாலும் இரணியனும் , பட்டுராசுவும் தொழிலாளர்கள் நிதியிலிருந்து ஒரு வெள்ளி கூட எடுத்து செலவு செய்யமாட்டார்கள். அத்தகைய நேர்மையாளர்களாக நடந்து கொண்டார்கள்.

ஒரு நாள், இரணியன் மனதில் தனது குடும்பத்தைப் பற்றிய சிந்தனை எழுகிறது . நாம் எதற்காக இந்த சிங்கப்பூர் வந்தோம்? . பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றத்தானே! . ஆனால், இது வரை தான் ஒரு வெள்ளி கூட தனது குடும்பத்திற்கு அனுப்பவில்லை என்ற நினைவு ஏற்படுகிறது. அவனது மனம் வேதனையில் வாடுகிறது. அதனால் இரணியன் இந்தியா திரும்ப நினைக்கிறான். அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க பட்டுராசு முன்வந்த போது , வேண்டாம் என்று மறுத்து விடுகிறான். இரணியன் இந்தியாவிற்குள் கிளம்பும் செய்தி எங்கும் பரவி விட்டது. வழியனுப்ப ஆயிரக்கணக்கானோர் கூடி விட்டார்கள் . சொந்த நிலக்காரன் அறுவடை நாளில் அடையும் மகிழ்ச்சியைப் போல் இரணியன் தன சேவையின் பலனைக் கண்டான். அந்த மாவீரனின் மனம் நெகிழ்ந்து போனது.

தனது 14 வயதில் சிங்கப்பூர் வந்த இரணியன் , 28 வயதில் இந்தியா திரும்புகிறான். தனது குடும்பத்தினருக்கு மட்டும் ஒரு பெட்டியில் சில துணிமணிகள் வாங்கிக் கொண்டான். எப்படி வெறுங்கையோடு சிங்கப்பூர் வந்தானோ , அதே வெறுங்கையோடு இந்தியா திரும்புகிறான். ஆனாலும், அந்தப் பெட்டிக்குள் ஒரு துப்பாக்கியும் இருந்தது. அதற்கு வேலையும் இந்தியாவில் காத்திருந்தது.

தஞ்சை மண்ணில் களப்பணி:

இரணியன் நாடு திரும்பியபோது இந்தியா சுதந்திரமடைந்திருந்தாலும் , கீழ்த்தஞ்சைப் பகுதியில் பண்ணையார்களின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பண்ணைத் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வந்தார்கள். மரத்தில் கட்டி வைத்து அடிப்பது, மூங்கில் குழாயை வாயில் நுழைத்து சாணியைக் கரைத்து ஊற்றுவது மற்றும் அவன் மனைவியின் மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லி துன்புறுத்துவது போன்ற கொடுமைகளைச் செய்து வந்தார்கள்.

சாம்பவான் ஓடை சிவராமன்

அப்போது , 1948-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது . கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் தோழர் சீனிவாச ராவ் தலைமையில் இரகசியமாகவே தங்கள் பணியை செய்து வந்தார்கள். இரணியன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருகிறான். ஆங்காங்கே கட்சியின் கிளைகளும், விவசாய சங்கங்கள் நிறுவப்படுகின்றன.. அந்த வகையில் “தென்பறை”யில் தான் முதன் முதலில் விவசாயச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரணியன் தன் பணியை தென்பறையிலிருந்து மீண்டும் துவங்குகிறான்.

அவனது பணியில் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள சாம்பவான் ஓடை சிவராமனும், ஆம்பலாப்பட்டைச் சேர்ந்த ஆறுமுகமும் இணைந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் முக்குலத்தோர் இனத்தில் அகமுடையார் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது சாதியத்தை உடைத்து , உழைக்கும் ஏழை மக்களுக்காக அவர்களது உயிரை பணயம் வைக்கும் அளவிற்கு கம்யூனிச சித்தாந்தம் அவர்களை ஒன்றிணைத்திருந்தது கம்யூனிசத்தின் வெற்றியாகவே பார்க்க முடிகிறது. இவர்கள் பண்ணை முதலாளிகளுக்கு எதிராக நடத்திய போராட்டங்கள் திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

ஆந்திராவில் இருந்த உத்திராபதி மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாட்டாக்குடி , முத்துப்பேட்டைப் பகுதிகளில் இருந்தது. அதை நிர்வகிக்கும் பொறுப்பு இராயர் என்ற பண்ணையாரின் கையில் இருந்தது. இரணியன் அவரது அடியாட்களை அடித்து நொறுக்கி அவருக்கு பயத்தை ஏற்படுத்துகிறான். அவர் தமது கொடுமைகளை அரங்கேற்ற முடியாமல் ஏழை கூலித் தொழிலாளிகளுக்கு சரியான கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

விவசாயச் சங்கம் ஊர் ஊருக்கு ஆரம்பித்துக் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகள் தீவிரமான போது பண்ணை முதலாளிகளும் தீவிரமானார்கள். அவர்களும் ஒரு சங்கம் அமைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளை ஒழிக்க முனைந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் பரவாக்கோட்டையை சேர்ந்த நாயுடும் ஒருவர். இந்த நாயுடுவும் சளைக்காமல் பண்ணைத் தொழிலாளர்களை நசுக்குவார்.

அவருக்கு பாடம் புகட்ட எண்ணிய இரணியன் , அவரது வீட்டை தனது தோழர்கள் ரகுநாதன் , தங்கவேலு கோட்டூர் இராசு மற்றும் ரெத்தினம் ஆகியோர்களின் துணையுடன் கொள்ளையிட்டு அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கிறான். இந்தக் கொள்ளை சம்பவத்தில் பாம்பு கடித்த ஒருவருக்கு மருந்து கட்ட செல்வது மற்றும் தென்னைமட்டையில் துப்பாக்கி செய்து பண்ணையாரின் அடியாட்களை மிரட்டுவது போன்ற இரணியனின் திட்டங்கள் அவனது புத்திசாலித்தனத்தை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இதன் மூலம் இரணியனின் பெயர் போலீஸ் குறிப்புகளில் ஒரு தீவிரவாதியாக அடையாளப்படுத்தப் படுகிறது.

சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்த இடங்களில் ஆம்பலாப்பட்டும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது . தென்பறையில் முதலாவது விவசாயத் சங்கம் ஆரம்பித்த பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவதாக ஆரம்பித்த பெருமை உடையது . இந்த ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற துடிப்பான இளைஞன் இரணியனுக்கு மிகவும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருக்கிறான். ஒரு தம்பியாக இருந்து அவனுக்கு வேண்டியதைச் செய்கிறான். ஆறுமுகத்திற்கு கம்யூனிச சித்தாந்தங்களை புரிய வைக்கிறான் இரணியன். அவன் இரணியனின் பிரிக்கமுடியாத அங்கமாக மாறிப்போகிறான். “அண்ணே நான் ஒங்களுக்காவச் சாகனும் ; இல்லாட்டி உங்களோட சாகனும்” என்று இரணியனிடம் சொன்னதோடு அவ்வாறே வாழ்ந்தவன்.

பொதுவாக அன்றைய பண்ணை முதலாளிகள் உழைக்கின்ற மக்களின் உழைப்பை மட்டும் சுரண்டுபவர்கள் என்பதில்லை. நூறு, ஐம்பது பணத்தை ஏழைத் தொழிலாளர்களிடம் கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கில் வட்டிகளைச் சேர்த்து எழுதி பிடுங்குவார்கள். கொஞ்சம் நிலம் வைத்து இருக்கும் குடியானவர்களிடமும் பணத்தைக் கொடுத்துக் கணக்கைக் கூட்டி எழுதிக் கடைசியில் நிலத்தை எழுதி வாங்கி விடுவார்கள்.

இந்த விஷயத்தில் செம்பாளுர் பண்ணையாரும் சளைத்தவர் இல்லை. இதற்கென்று ஒரு தனிக் கணக்குப்பிள்ளை போட்டு எழுதி வைத்து இருந்தார். கடன் வசூல் செய்கிறேன் என்று கணக்குப்பிள்ளை செய்த அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒருநாள் ஆம்பலாப்பட்டுத் தோழர்கள் முருகையன், காசிநாதன் , ஆறுமுகம் , சுப்பையன் ஆகியோர்கள் கணக்குப்பிள்ளை வீட்டுக்குள் புகுந்து பிராம்சரி நோட்டுகள் இருந்த பெட்டியை வெளியே தூக்கி வந்து தீ வைத்துக் கொளுத்தினார்கள். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் ஒருவரை மிஞ்சி ஒருவர் கட்சிக்காக தங்களை அர்ப்பணிப்பதை எண்ணி இரணியன் மகிழ்ச்சியடைந்தான்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்
♦ ஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்!”

இந்த வகையில் பண்ணை முதலாளிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த இரணியன் தஞ்சை மாவட்டத்தின் வனப்பகுதிகளிலும் , வயல்களிலும் ஒளிந்து திரிந்து அலைந்தான் . அவனை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள்; பிடிக்க முடியாவிட்டால் சுட்டுக் கொல்லவும் திட்டமிட்டு இருந்தனர். அதனால் இரணியனைப் பிடிப்பதற்காக அவன் தம்பி நாராயணனை பிடித்து அடித்து உதைக்கிறார்கள். அவனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு இடைவிடாத தொல்லைகள் தருகிறார்கள். இருந்தாலும் , பிறருக்காக வாழ்ந்த இரணியனுக்காக அவனது குடும்பம் மிகப்பெரிய துன்பங்களை அனுபவித்தது.

இரணியனின் குடும்ப வாழ்க்கை

இரணியனின் குடும்ப வாழ்க்கையானது மிகவும் வேதனைகள் நிறைந்தது. தனது தாயின் கண்ணீருக்காக தனது அக்காள் மகள் செல்லமணியை திருமணம் செய்துகொள்ள இரணியன் சம்மதிக்கிறான். ஆனால் , அவனது மைத்துனன் எதிர்ப்புத் தெரிவிக்க, அதை மறுத்து செல்லமணியை தூக்கி வந்து திருமணம் செய்து கொள்கிறான். திருமண செய்தியை அறிந்து கொண்ட போலீசார் இரணியனின் வீட்டை முற்றுகையிடுகின்றனர். இரணியன் தப்பி விடுகிறான். ஆனால் இரணியனின் அம்மாவையும் , மனைவி செல்லமணியையும் போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள்.

அவர்களை விடுவிக்க இரணியன் சரணடைய வேண்டும் , இல்லையென்றால் அவன் மனைவி செல்லமணிக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்த வேதனையான நேரத்திலும் இரணியன் சரணடையவில்லை . அதனால் இரணியன் கட்டிய தாலியை போலீசார் அறுத்து, அவனது உறவுக்காரப் பையனிடம் கொடுத்து மறுபடியும் தாலி கட்டச் செய்கிறார்கள். அன்றைய போலீசு கொடுங்கோன்மைக்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு முன்னால், குடும்பம் எல்லாம் இரண்டாம்பட்சம் தான் என தியாகமே உருவாக வாழ்ந்து காட்டியவன் இரணியன்.

இரணியனின் மரணம்:

இந்த சூழ்நிலையில் இரணியனின் தலையில் ஒரு பெரிய விஷப்பரு உருவாகிறது. அதற்கு மருந்து கட்ட இரணியனும், ஆறுமுகமும் மருத்துவரைப் பார்க்க வடசேரி கிராமத்தின் வழியாக வருகிறார்கள். அப்போது வடசேரி பட்டாமணியன் சம்பந்தமூர்த்தி கண்ணில் பட்டு, அவர் இரணியனின் துப்பாக்கியைப் பார்த்து பயந்து , திருடன் திருடன் என்று கத்தியவுடன் வடசேரி கிராம மக்கள் ஓடி வந்து இரணியனையும், ஆறுமுகத்தையும் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், தாங்கள் பிடித்து வைத்திருப்பது இரணியன் என்று அவர்களுக்கு தெரியாது; தெரிந்தவுடன் அவனை உடனே கிராமத்தை விட்டு போய்விடுமாறு கூறுகிறார்கள். இதற்கிடையில் இரணியனை பிடித்து வைத்திருக்கும் செய்தி பட்டாமணியன் மூலமாக போலீசிற்கு போய் சேருகிறது.

இரணியன்

போலீஸ் வரும்போது தான் இல்லையென்றால், தன்னை தப்ப விட்டதற்காக அவர்கள் வடசேரி கிராமத்தையே அழித்துவிடுவார்கள் என்பது இரணியனுக்குத் தெரியும். அதனால் அந்த கிராமத்தை காப்பாற்றும் பொருட்டு தான் சுடப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவை ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்து விடுகிறான். ஆனால், ஆறுமுகத்தின் மீது போலீசில் எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லாததால் அவனை தப்பிச் செல்லுமாறு கூறுகிறான். ஆறுமுகம் மறுத்து விடுகிறான். இரணியனோடு அவனும் மரணத்தைத் தழுவ தயாராகிறான்.

இரணியன் சுடப்படுவதற்கு முன்பு அவன் பேசுவதாக நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திர போஸ் பதிவு செய்திருக்கும் வார்த்தைகள் நம் மனதில் மிகுந்த கனத்தை ஏற்றுகிறது. இரணியன் இவ்வாறு கூறுகிறான்:

“சிங்கப்பூர் மக்கள் நிம்மதியாக வாழ, அந்த நாட்டையே நடுங்கச் செய்து கொண்டிருந்த நான்கு பேரைச் சுட்டுக் கொன்றேன். மற்றவர்கள் சிங்கப்பூரை விட்டே ஓடி விட்டார்கள். பொது மக்கள் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அது என்னைத் தென்றலாக தழுவியது. துறைமுகத் தொழிற்சங்கத்தில் பேருக்குத் தலைவனாக இருந்தேன். ஆங்கில அரசால் சீரழிக்கப்பட்ட தொழிற்சங்கத்தைக் கட்டிக் காத்தேன் . தொழிலாளர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழப் பல வழிவகைகள் செய்தென். நான் நினைத்து இருந்தால் கிழக்காசிய ரவுடிகளுக்கே தலைவன் ஆகி இருப்பேன். கோடிக்கணக்கான வெள்ளிகள் என் காலடியில் கொட்டி இருக்கும்.

குடும்ப வறுமையின் காரணமாகவே என் பெற்றோரால் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். நெற்றியில் ஒட்டி வைக்கக் கூட ஒரு கால் ரூபாய்க் காசை நான் ஊருக்கு அனுப்பியது இல்லை. சிங்கப்பூரில் தொழிற்சங்கப்பணமும் என் மனமும் எண்ணெயும் தண்ணீரும் போலவே இருந்தன . என் தோழர் தொழிற்சங்கக் காரியதரிசி பட்டுராசுக்கு மட்டுமில்லை சிங்கப்பூரில் எல்லோருக்கும் தெரியும்.என்னால் பணக்காரனாக ஆக முடியவில்லை. ஆனால் ஒரு புரட்சியாளனாக ஆக முடிந்தது. அதற்காக பெருமைப்படுகின்றேன்”.

1950-ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி வாட்டாக்குடி இரணியனும், அவனது தோழன் ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் போலீஸ் டி.எஸ்.பி சுப்பையாபிள்ளை என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். உண்மையில் வாட்டாக்குடி இரணியன் என்ற புரட்சியாளன் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்பட்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். ஆனாலும், அந்த மாவீரனுக்குரிய அங்கீகாரத்தைக் கொடுக்காமல் இந்தச் சமூகமும், அவன் நேசித்த கம்யூனிஸ்ட் இயக்கமும் அவனை மறந்து போனது வலி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

சாதி- மத வெறியர்களும் , கார்ப்பரேட் முதலாளிகளும் நம் நாட்டை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழலில், அவர்களுக்கு எதிராக போராட நம் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இரணியனுக்கும், சாம்பவான் ஓடை சிவராமனுக்கும் உயிர் கொடுத்து உலாவ விட்டிருக்கிறார் நூலாசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் என்றே கருதுகிறேன்.

உழைக்கும் மக்களும், கம்யூனிசமும் இருக்கும் வரை இரணியனும் வாழ்ந்து கொண்டிருப்பான்!

நூல் : வாட்டாக்குடி இரணியன்
நூல் ஆசிரியர் : ச. சுபாஷ் சந்திரபோஸ்
வெளியீடு : பாக்கியம் பதிப்பகம் , தஞ்சாவூர்
விலை : ரூ.250.00
பக்கங்கள் : 374
பதிப்பு: முதல் பதிப்பு 2017

கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம்,
22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு,
தஞ்சை – 1
தொடர்புக்கு : 99405 58934

நூல் அறிமுகம் : சு. கருப்பையா

குறிப்பு : தோழர் சு. கருப்பையா அவர்கள் பொதுத்துறை நிறுவனமான BSNL இல் முதன்மை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்றவர். இடதுசாரி சிந்தனைகள் கொண்டவர். BSNL அதிகாரிகள் சங்கமான AIBSNLEA சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலராகவும், மாநில அமைப்புச் செயலராகவும் மத்திய சங்க செயற்குழு உறுப்பினராகவும் பல பொறுப்புகளில் பணியாற்றியவர்.

disclaimer

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க