மதர்ம லட்சியத்திற்காக தன் வாழ்க்கையை அர்பணித்த ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கைப் பயணம் ஒரு திரைப்படம் பார்ப்பது போல் சிறப்பாக இந்நூலில் விவரித்து சொல்லப்பட்டிருக்கிறது.

போர்க் குணமிக்க போராட்ட நடைமுறை, வீரசாகசங்கள், உயிர்தியாகம் ஆகியவற்றின் ஊடாக மாமனிதர்கள் மக்களின் மனங்களில் நீங்காத நினைவுகளாக நிலைபெற்று விடுகின்றனர். போராட்ட வரலாற்றில் தனிமுத்திரை பதித்த போராளிகளில் ஒருவர்தான் சாம்பவான் ஓடை சிவராமன்.

மாவீரன் சிவராமன் , 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சாம்பவான் ஓடை கிராமத்தில், திருமேனி – சிவபாக்கியத்தம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார்.

“என்னா சிவராமா ஓரேடியாக யோசனையில் முழுகிட்ட..”

“ஓ…….ஒன்னுமில்லே அண்ணே; நாம சேரி மக்களை எவ்வளவு மிருகத்தனமாக கொ….. கொடுமைப்படுத்துகிறோம்”

“தீண்டாமைங்கிறத வச்சுக்கிட்டு நாமபடுத்துறது ஒருபக்கம்……… அடிமைங்கிறத வச்சுக்கிட்டு பண்ணையாருங்க படுத்துறது ஒருபக்கம். உலகத்திலே, நம்ம நாட்டிலே சேரி மக்கள் படுகின்ற துன்பம் மாதிரி வேறுயாரும் பட்டு இருப்பாங்களாங்கிறது சந்தேகமாக இருக்கு”

17 வயதில் சிவராமனுக்கு ஏற்பட்ட சமத்துவ உணர்வின் வெளிப்பாடே இந்த உரையாடல். தஞ்சை தரணியில் கோலோச்சிய பண்ணை பயங்கரத்திற்கு முடிவுகட்ட புயற்பறவையாய் தோழர் சீனிவாசராவ் வந்தார். அவரது போர்க்குரல் கீழ் தஞ்சை முழுவதும் எதிரொலித்தது.

“உங்களை தாக்கினால் திரும்பி தாக்குங்கள் – சங்கமாய் ஒன்றுசேர் – சளைக்காமல் போராடு!” என்ற மந்திர சொற்கள், பண்ணை அடிமைகளின் வாழ்வில் புதிய வெளிச்சத்தை காட்டியது.

“இன்னைக்கு அடிவிழாமல் இருந்தால் விடிஞ்ச பொழுது நல்ல பொழுது” என்று எண்ணிக் கொள்வார்களே தவிர எதிர்த்து நிற்கவேண்டும் என்ற நினைப்பு பண்ணை அடிமைகளின் கனவிலும் வராது. தோழர் சீனிவாசராவ் ஆற்றிய உரைகள் பண்ணை அடிமைகளின் ரத்த நாளங்களின் புது ரத்தம் பாய்ச்சியது. அடங்கி கிடந்தவர்கள் அமைப்பாக திரளத் துவங்கினர்.

படிக்க :
♦ இந்தியா 2020 : வல்லரசு கனவும் – தொடரும் துயரமும்
♦ கிரிமினல்களின் கூடாரமாகும் சங்கபரிவாரம் !

1942-ல் பொது உடைமை இயக்கத்தின் மீதான தடையை காலனிய ஆட்சியாளர்கள் நீக்கினார்கள். சீனிவாசராவ் – ஏ.கே.கோபாலன் – நெடுங்காடி ராமசந்திரன் போன்ற தலைவர்கள், கிராமங்கள் தோறும் அரசியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, எண்ணற்ற செயல் வீரர்களை உருவாக்கினார்கள்.

தலைமறைவாய் கட்சி பணியாற்றுவது மிகவும் கடினமான பணியாகும். பண்ணையார்களின் கையாட்களாக செயல்பட்ட கருங்காலிகள், காவல்துறைக்கு தகவல் சொல்லும் ஒற்றர்கள், போலீசு உளவுப்பிரிவு என மக்கள் விரோதிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு களப்பணி ஆற்ற வேண்டும்.

டீக்கடை – தையற்கடை – சலவைக்கடை – பெட்டிக்கடை போன்ற நம்பகமான ஆதரவாளர்கள் உள்ள இடங்கள், கட்சியின் தகவல் தொடர்பு மையங்களாக செயல்பட்டன. இத்தகைய தலைமறைவு வாழ்க்கை பற்றிய விவரங்கள் இப்புதினத்தில் இடம் பெற்றுள்ளன.

ஊரில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் ‘வெட்டிமை’ தொழில் செய்யும் சேரி மக்கள் படும் இன்னல்கள் சொல்லிமாளாது. குடிவேலை செய்வது, மாடு செத்தால் தூக்குவது – இறப்பு செய்தியை சொல்வது, தப்பு கொட்டுவது, பிணம் எரிப்பது என எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும்.

பண்ணையார்கள் – ஆதிக்கசாதியினர் தங்கள் மீது நடத்தும் அட்டூழியங்களை – அடக்குமுறைகளை எதிர்த்து பேசவோ, தடுத்து நிறுத்தவோ சேரி மக்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

இறந்து போனவர் நல்லவரா – கெட்டவரா என்பதை இடுகாட்டில் பேசுவதை வைத்தே எடை போடலாம்.

“பாவி இவன் எப்பந்தொலைஞ்சு போவான்னு ஊரே எதிர்பாத்துச்சி, ஊரை அடித்து உலையில் போட்டான் – தொலைஞ்சான் – “முண்டுனா கோடாலியால போடுங்கடா”

“இந்தா மாப்புளே முண்டுறாறு நம்பள பார்த்தா இவன் வாயில நல்ல வார்த்தை வராதே. எத்தனை பெண்களை கெடுத்து இருப்பான். கண்டந் துண்டமா வெட்டுங்கடா”

“பாவம் இந்த ஆயா, மகராசி மொகத்தை பார்த்தே பசியால இருக்கான்னு கஞ்சி ஊத்தும்”

வன்கொடுமை புரிந்த ஆதிக்க சாதிவெறி கொடுங்கோலர்களை எதிர்த்து நிற்க முடியாமல் அடங்கி கிடந்த சேரிமக்கள், சாதிவெறியர்களின் பிணத்தின் மீது காட்டும் ஆற்றாமையும் வெறுப்பும் மிக நுட்பமாக இப்புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லா ஊர்களிலும் சேரிகள் ஊருக்கு வெளியே இருந்தன. “இரண்டு பக்கமும் பண்ணை நிலங்கள் சேரிக்கு செல்லும் உழங்கையை ஒற்றையடிப் பாதையாகவே மாற்றி இருந்தன. இரண்டு பக்கங்களிலும் மலங்கழித்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள்”

சிவராமனின் மனைவி இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்ள பெற்ற தாயும் சுற்றத்தாரும் வற்புறுத்துகிறார்கள்.  “எனக்கு புள்ளையும் வேணாம். கு………….. குட்டியும் வேணாம் எ……….. என் பேரை சேரி சொல்லும் நா…… செத்தா சேரிகளே அழும்” என்று கூறி தன் வாழ்வையே உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அர்ப்பணித்த தியாக உள்ளத்தை எண்ணி நம் நெஞ்சம் விம்முகிறது.

பொதுக்குளத்தில் தண்ணீர் அள்ளி குடித்ததற்காக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு முதியவரை ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கி விடுகின்றனர். அந்த கிழவனை அடித்த இளைஞர்களை தேடிப்பிடித்து சிவராமன் நியாயம் கேட்கிறான். தாங்கள் செய்தது நியாயம் தான், தீட்டு என்பது எங்கு உள்ளது என்று கூறிய இளைஞர்களிடம் “ஏர் உழுது, நாற்றுநட்டு, களத்து மேட்டில் நெல்லை குவிப்பவர்கள் சேரிமக்கள், அதில் நாம் தீட்டு பார்ப்பதில்லை. ஆனால் நமது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீட்டை பயன்படுத்தி கொள்கிறோம்.” என்றார். இளைஞர்கள் செய்தது எவ்வளவு மனிதத்தன்மை அற்ற செயல் என்பதை இளைஞர்களுக்கு புரிய வைத்தார் சிவராமன்.

சிவராமன் ஆதரவாக அவர்களின் தோளில் மீது கை வைத்தான். மூவரும் சேரிக்கு போனார்கள் கிழவனை அழைத்துக் கொண்டு அதே குளத்திற்கு போனார்கள். சேரி கிழவனை குளத்து நீரைக் குடிக்க வைத்தனர்.

“அண்ணே இனிமே ஒங்களோட சேர்ந்து சேரி மக்களுக்கு நாங்களும் பாடுபடுகிறோம்” என்று மூன்று இளைஞர்களும் சிவராமனோடு கரம் சேர்க்கின்றனர்.

சிவராமன் தன்னுடைய பொது சேவையை ஒரு கண்ணாகவும், நேர்மை – ஒழுக்கத்தை இன்னொரு கண்ணாகவும் பார்த்தான். தோழர்களும், சேரிமக்களும் சிவராமன் மீது அளவில்லாத பாசத்தை பொழிந்தார்கள்.

தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை விற்று ஒரு பகுதியை உடன்பிறந்த சகோதரிகளுக்கும், பாதியை சல்லிகாசு கூட தொடாமல், கட்சி செலவிற்காக பணம் முழுவதையும் மறவக்காடு கிருஷ்ணனிடம் கொடுத்து விடுகிறார்.

தோழர் எம்.வி.சுந்தரத்தின் பாதுகாப்பிற்காக வெளிநாட்டு நண்பர் ஒரு கை துப்பாக்கியை அவருக்கு கொடுத்தார். சிவராமனின் துடிப்பான செயல்பாட்டை பார்த்த தோழர் எம்.வி.சுந்தரம் அந்த கைதுப்பாக்கியை சிவராமனிடம் கொடுத்து விடுகிறார். ஆனால் எப்போதும் அதை தவறாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் எண்ணியதே இல்லை

படிக்க :
♦ சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !
♦ உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு : சாதி ஆணவக் கொலைகளுக்கான அங்கீகாரம் !

நாடு விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டும், அடக்குமுறையும், கொடுமைகளும், காவல்துறையின் காட்டுமிரான்டித்தனமும் எள்ளளவும் குறையவில்லை. நெடும்பலம் பண்ணையாரின் அட்டகாசம் உச்ச நிலையை அடைந்து சிறுகளத்தூரில் தீரத்தான், வெங்கடாசலம் ஆகிய தோழர்களின் குடிசைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

மே 1ம் தேதி மலேயா கணபதி, வீரசேனன் வெள்ளை அரசாங்கத்தால் கொல்லப்பட்டார்கள். இரண்டு பொதுவுடமை புரட்சி தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் சிவராமன் தலைமையில் நடைபெற்றது. அதே நாளில் நெடும்பலம் பண்ணைக்கு பாடம் புகட்ட தக்க தருணத்தை எதிர்பார்த்த சிவராமன், “கிளம்புங்கள் நெடும்பலத்தை நோக்கி” என்று உணர்ச்சி மேலிட உரத்து முழங்கினான்.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் நெடும்பலத்தை நோக்கி அணிவகுத்தனர்.
நெடும்பலத்தை நோக்கி பண்ணைத் தொழிலாளர்கள் படை வருவது போலீசுக்கு தெரிந்துவிட்டது. கூட்டத்தின் எண்ணிக்கை கேட்டு போலீசு பிரமித்து போய் நின்றுவிட்டது.

பண்ணை மாளிகையின் முன்பகுதி அடித்து நொறுக்கப்பட்டது. நாலாயிரம் கலம் நெல்லும், பத்தாயிரம் பேர்களால் பங்கு போடப்பட்டது நாலாப்பக்கமும் கூட்டம் நெல் மூட்டைகளுடன் போய் கொண்டிருந்தது.

பண்ணை கொடுமைக்கு பாடம் புகட்டிய இந்த வீரசாகசம் சிவராமன் தலைமையில் வெற்றிகரமாக நடந்தப்பட்டது. கம்யூனிஸ்ட்களை காட்டி கொடுக்கும் கருங்காலித்தனத்தை முழுநேரப்பணியாக செய்து கொண்டிருந்த நிலப்பிரபு பாலசுப்ரமணியன் என்பவனை பழி தீர்க்க திட்டமிட்டான் சிவராமன்.

அஞ்சா நெஞ்சன் இரணியனுடன் இணைந்து அவனை தாக்க முற்படும் போது, மயிரிழையில் உயிர்தப்பி பாலசுப்ரமணியன் ஓடிவிட்டான். புரட்சிகர வீரசாகத்தை அடுத்தடுத்து அரங்கேற்றிய ஒரு பொதுவுடமை வீரனின் உணர்ச்சிமிகுந்த வரலாறு, உயிர்துடிப்போடு இப்புதினத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கான கூலி ஏழை உழவர்கள் சிவராமனை பார்த்து தங்களிடம் இருந்த பயத்தை ஒழித்தார்கள். மனிதனாய் தலைநிமிர்ந்து வாழ கற்றுக் கொண்டார்கள்.

எலிக்கூட்டம் பூனையை பாய்ந்து தாக்கியதைப்போல் நெடும்பலம் பண்ணையை தாக்கினார்கள்.

தலித் பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் வெறியோடு ஆதிக்க சாதி இளைஞர் இரண்டு பேர் துரத்திக் கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திரும்பிய சிவராமன் அந்த காமூகர்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.

சிவராமனை கைது செய்யவோ, அல்லது சுட்டுக் கொல்லவோ வேட்டை நாயைப் போல் காவல்துறை கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். தங்குமிடம் தெரிந்து காவல்துறை சுற்றி வளைக்கும் போது சிவராமன் தப்பி விட்டார். ஆனால் காலில் கண்ணாடி குத்தி காயமாகிவிட்டது.

இரணியன் மறைந்து இருக்கும் இடத்திற்கு எப்படியாவது போய்விட வேண்டும் என்று எண்ணியபடியே ஒரு தோப்பில் அயர்ந்து தூங்கிவிட்டார்.

திடுக்கிட்டு விழித்த சிவராமன் எழுந்து உட்கார்ந்தார். இரண்டு பெண்கள் சற்று தூரத்தில் பயந்தபடியே நின்றார்கள். சிவராமனை பார்த்த ஒரு பெண் “சாமி நீங்களா? காலுல என்னகட்டு” ஓடிவந்து கால்களை தூக்கி மடியில் வைத்து கொண்டாள். கால் யானைக்கால் போல் வீங்கி இருந்தது. அந்த பெண் காலில் உள்ள கட்டையை அவிழத்து, சுடுதண்ணீரில் நனைத்து துடைத்து மருந்தை வைத்து கட்டினாள்.

“நீ ?”

“நானே தான்! அந்த பாவிப் பயலுவளுக்கிட்ட இருந்து காப்பாத்துனியளே! அண்ணைக்கு நீங்க இல்லாட்டி இந்நேரம் என்னை பொதச்ச எடத்தில் பில்லு மண்டி போயிருக்கும்.”

சிவராமனுக்கு உடனே அந்த பெண்ணை அடையாளம் தெரியவில்லை. அந்த இளைஞர்களிடம் இருந்து காப்பாற்றியது பின்னர் நினைவுக்கு வந்தது.

சிவராமனால் காப்பாற்றப்பட்ட அந்த பெண் நன்றி உணர்ச்சி மேலாட தன் கணவனை அறிமுகப்படுத்தினாள். குழந்தையைக் காட்டினாள்.

“உன் குழந்தைக்கு நான் பேர் வைக்கவா?” என்றான் சிவராமன்.

“என்னா பேரு?”

“மா……மார்க்ஸ்….., லெ………லெனின் ஏதாச்சும் ஒண்ணு.”

“அதெல்லாம் எங்களுக்கு புரியாத பேரு… நாங்கபேரு வச்சுட்டோம்.”

“எ………என்ன பேரு”

“ஒங்க பேரு!”

“ஏ……..ஏம்பேரா? எங்க சொல்லுங்க பார்ப்போம்.”

“ஒங்களுக்கு நேரா சொல்லமாட்டோம்.”

“புள்ளை பேர சொல்லு கா….காதால கேக்கனும்”

“மாட்டேன்…   இந்தாச் சொல்றேன் சாமி, சிவராமன்”

“கூ…..கூப்பிடு ”

“சிவராமா”

சிவராமனுக்கு மனம் நிறைந்தது, வானத்தில் பறப்பது போல் இருந்தது. தன்னுடைய பெயரை வைத்ததற்காக அப்படி பரவசப்படவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிக்கும் – தனக்கும் மக்கள் மனங்களில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை எண்ணிப் பார்த்தான். தான் பிறந்த பயனை அடைத்து விட்டதாக எண்ணினான்.

நூற்றுக்கணக்கான போலீசு தேடுதல் வேட்டையில் கிராமங்களின் மூலை முடுக்கெல்லாம் தேடி அலைந்தனர். அந்த பகுதியில் செயல்பட்ட கம்யூனிஸ்ட்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். கை கால்களை அடித்து பல தோழர்களை ஊனமாக்கியது போலீசு.

சிவராமன் உறவினர்களை துன்புறுத்தியது நாட்டுச்சாலை என்ற இடத்தில். டீ கடையில் சிவராமனை பார்த்த மஞ்சுவேளார் என்ற கருங்காலி போலீசின் சன்மானத்திற்கு ஆசைப்பட்டு சிவராமனை காட்டிக் கொடுத்தான். 1950-ம் ஆண்டு மே 3 ந்தேதி போலீசால் சுட்டுக் கொல்லப்படுகிறார்.

“முதுகில் சுடாதே.. நெஞ்சில் சுடு..” என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றான் சிவராமன்.

மூன்று குண்டுகள் சிவராமனின் மார்பை துளைத்தன.

வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகியோர் மே 5-ம்தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

மாவீரன் சிவராமன் , வாட்டாக்குடி இரணியன் மற்றும் ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் ஆகிய மூவரும் ஒன்றாகவே சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

“எவர் அச்சமின்றி இறந்தனரோ அவர்கள் தாம் நாங்கள் – எவர் அச்சமின்றி மரணத்தை நோக்குகிறார்களோ அவர்கள்தாம் நாங்கள்” என்றான் ஒரு கவிஞன்.

கடந்தகால வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் எதிர்கால வரலாற்றை உருவாக்க முடியாது. ஏற்றுக்கொண்ட லட்சியத்தை நிறைவேற்ற தம்மை முழுவதுமாக தியாகம் செய்ய தயாராக இருந்த நெஞ்சுரமிக்க போராளிகள், தன்னிகரற்ற தனி நபர்களின் துணிச்சல் தியாகங்களால் மக்கள் எழுச்சி பெறுகிறார்கள். தூக்கு மரங்களுக்கும், துப்பாக்கி ரவைகளுக்கும், கொலை வாளுக்கும் அஞ்சாமல் எதிர்கொண்ட விதம்தான் மக்களுக்கு உத்வேகம் ஊட்டியது.

சிறைத்தண்டனை, சித்ரவதை, மரணம் போன்றவற்றை சந்திக்கும்போது அவர்கள் காட்டிய வீரஞ்செறிந்த துணிச்சல் ஆகியவையே நமக்கு உத்வேகம் ஊட்டும் முன்மாதிரிகள். தனிநபர் வீரத்தியாகம் இன்றி சமூக மாற்றத்திற்கான புரட்சியோ, வெற்றியோ கிடையாது. தன்னிகரற்ற மாமனிதர்களின் தியாக வாழ்வே நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகள்.

தலைமுறை இடைவெளியின் காரணமாக இந்த போராட்ட வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. பொதுவுடைமை லட்சியத்திற்கான இந்த புகழ்மிக்க போராட்ட வரலாற்றை புதிய தலைமுறையினர் படித்துப் பயன்பெற வேண்டும். போராட்டப் பயணத்தில் புத்துணர்ச்சி பெற, இந்த வரலாற்றுப் புதினம் இன்றைய காலகட்டத்தின் தேவையும் அவசியமும் ஆகும்.

நூல் : சாம்பவான் ஓடை சிவராமன்
நூல் ஆசிரியர் : ச.சுபாஷ் சந்திரபோஸ்
வெளியீடு : பாக்கியம் பதிப்பகம்
விலை : ரூ.250.00
கிடைக்குமிடம் : பாக்கியம் பதிப்பகம்,
22பி / 2739, தொப்புள் பிள்ளையார் தெரு,
தஞ்சை – 1
தொடர்புக்கு : 99405 58934

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

2 மறுமொழிகள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க