டுமலை சங்கர் படுகொலை வழக்கில், முதன்மைக் குற்றவளியான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இந்தியாவையே உலுக்கிய இந்த சாதி ஆணவப் படுகொலையில் ஏற்கெனவே திருப்பூர் செசன்ஸ் நீதிமன்ற வழங்கியிருந்த தூக்குத் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் 13 அன்று உடுமலையில், சங்கர் என்ற தலித் இளைஞரையும் அவரது மனைவி கவுசல்யாவையை பட்டப்பகலில் கடைவீதியில் வைத்து கூலிப்படை கிரிமினல்கள் அரிவாளால் வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. பதிவு, தொலைகாட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவியது.

தேவர் சாதியைச் சேர்ந்த கவுசல்யாவும், தலித் பின்னணியைச் சேர்ந்த சங்கரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்தத் திருமணத்தை சங்கரின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்ட போதிலும் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து கவுசல்யாவை சங்கரிடமிருந்து பிரிக்க கவுசல்யா குடும்பத்தினர் பல்வேறு வழிமுறைகளில் முயற்சித்து இருக்கின்றனர். இவை எதுவும் பயன்கொடுக்காத நிலையில் மேற்கூறிய படுகொலை நடந்துள்ளது.
இந்த சாதி ஆணவக் கொலை தொடர்பான வழக்கை திருப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 12 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த சாதி ஆணவக் கொலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி அலமேலு. மேலும் இந்தப் படுகொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரான ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலா தமிழ்வாணன், மதன் ஆகிய ஐவருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதன் பின்னர் குற்றவாளிகள் தரப்பிலிருந்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 22.06.2020 அன்று தீர்ப்பு வழங்கியது.

கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு சிறைவாசலில் சால்வை போர்த்தும் சாதி வெறியர்கள்.

இந்தப் படுகொலைக்கு சூத்திரதாரியாக இருந்த கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமியை விடுதலை செய்தும், படுகொலையில் நேரடியாக ஈடுபட்ட கூலிப்படைக் கும்பலுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை 25 ஆண்டு கடுங்காவல் ஆயுள் தண்டனையாகக் குறைத்தும் உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்ற அமர்வு..

தமது தீர்ப்பில், சின்னசாமிக்கும் இந்தக் கொலைக்குமிடையிலான தொடர்பு போதுமான ஆதாரங்களோடு நிரூபிக்கப்படவில்லை என்பதையே சின்னசாமியை விடுதலை செய்வதற்கான காரணமாகக் கூறியுள்ளது. மேலும் போலீசு தரப்பில் ஆதாரமாக இருந்த சி.சி.டி.வி-யின் வீடியோவை பரிசீலித்தவர் முறையான நிபுணர் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தையும் ஏற்றுக் கொண்டு, கொலை செய்த ஐந்து கூலிப்படையினருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கில் சின்னச்சாமி தரப்பிலிருந்தும் சாதிவெறியர்கள் தரப்பில் இருந்தும் விடுக்கப்பட்ட மிரட்டல்களை பொருட்படுத்தாமல், திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நேரடி சாட்சியம் கொடுத்தவர் கவுசல்யா. தன்னையும், கணவர் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரையும் தனது தந்தை சின்னசாமி, தாய் அன்னலெட்சுமி மற்றும் தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோர் கொலை செய்யப் போவதாக தொடர்ந்து மிரட்டியதை நீதிபதி முன்னர் சாட்சியமளித்திருந்தார் கவுசல்யா. மேலும் இந்தக் கொலை நடத்தப்படுவதற்கு முன்னரே, பல்வேறு வழிமுறைகளில் சங்கரையும் கவுசல்யாவையும் பிரிக்க தனது குடும்பத்தார் முயற்சித்ததையும் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார் கவுசல்யா.

படிக்க:
ஏழைகளை துரத்தும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு !
♦ உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பு !

கவுசல்யா பாசமாக இருக்கும் அவரது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரை வைத்து நைச்சியமாகப் பேசி அவரை மட்டும் தங்களது ஊருக்கு அழைத்து வந்து அவரை அங்கேயே முடக்க முயற்சித்தனர் சின்னச்சாமி குடும்பத்தினர். இதனை உணர்ந்த கவுசல்யா அங்கிருந்து ஒருவழியாகத் தப்பி வந்தார். அதன் பின்னர் சங்கரிடம் 10 லட்ச ரூபாய்க்கு பேரம் பேசி கவுசல்யாவைக் கைவிட வற்புறுத்தினர். சங்கர் மறுத்திருக்கிறார். இவை அனைத்தையும் கவுசல்யா நேரடியாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இப்படி தாம் மேற்கொண்ட சாம, பேத, தான முயற்சிகள் எல்லாம் தோல்வியைத் தழுவிய நிலையில் கடைசியாக படுகொலையைக் கையில் எடுத்திருக்கிறது சாதிவெறி பிடித்த சின்னசாமி கும்பல்.

சின்னசாமியும் அவரது நெருங்கிய நண்பனான ஜெகதீசனும் இணைந்து சங்கரைக் கொலை செய்வது என்றும், தடுக்க வந்தால் கவுசல்யாவையும் கொலை செய்வது என்றும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜெகதீசன் ஒரு கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். இந்தக் கூலிப் படைக்கு முதல்கட்டமாக ரூ. 50,000-ஐ வங்கியில் இருந்து எடுத்துக் கொடுத்துள்ளார் சின்னச்சாமி. இந்தக் கொலை குறித்து திட்டம் தீட்ட பழனியில் ஒரு விடுதியில் அறையை எடுத்திருக்கிறார் சின்னசாமி. அங்கு சின்னசாமி உட்பட கொலைகாரர்கள் அனைவரும் கூடி கொலையை திட்டமிட்டுள்ளனர்.
சின்னசாமியின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.50,000 பணத்தின் வரிசை எண்களும் கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் வரிசை எண்களும் ஒரே எண்கள்தான் என்பதையும் ஆதாரப்பூர்வமாக போலீசு நீதிமன்றத்தில் முன் வைத்திருந்தது. மேலும் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் சின்னசாமி தனக்கு பணம் கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறான். சின்னசாமியின் தொலைபேசிக்கு கூலிப்படையினர் ஐவரும் பேசியிருக்கின்றனர். அந்த ஆதாரத்தையும் போலீசு முன் வைத்திருந்தது. இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செசன்ஸ் நீதிபதி அலமேலு அவர்கள் சின்னச்சாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தார்.

எடுத்த பணத்தை எந்த இடத்தில் வைத்து சின்னசாமி குற்றவாளிகளுக்கு கொடுத்தார் என்பதற்கு ஆதாரம் கொடுக்கவில்லை என்றும் சின்னசாமி வீட்டு செலவுக்கு ரூ.50,000 எடுத்ததாக முன்வைத்த வாதத்தினை கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களை முன்வைத்தது. இந்த வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.
தற்போது ஆயுள்தண்டனை வழங்கப்பட்ட கூலிப்படையினர் ஐந்து பேருக்கும் கொலை செய்யப்பட்ட சங்கருக்கும் எவ்வித முன் விரோதமோ, முன்பின் பழக்கமோ கிடையாது. அவர்கள் தனிப்பட்ட ரீதியில் சங்கரிடம் வன்மம் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அதே சமயம் சின்னச்சாமி அந்த ஐந்து பேருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் வங்கியில் எடுத்த அதே பணம், கூலிப்படையினரிடமிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இது தவிர கூலிப்படையினருடன் சின்னசாமி இருந்ததைப் பார்த்த சாட்சிகளும் இருக்கின்றனர்.

சின்னசாமி ஏற்கெனவே கவுசல்யாவையும் சங்கரையும் பிரிக்க முயற்சித்து இருக்கிறார். சங்கரையும் கவுசல்யாவையும் கொலை செய்துவிடுவதாக கவுசல்யாவிடமே கூறியிருக்கிறார். தம்மை தனது குடும்பத்தார் கடத்தியதாக கவுசல்யாவும், தமது மனைவியை மீட்டுத் தருமாறு சங்கரும் ஏற்கெனவே போலீசு நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கின்றனர்.

இத்தகைய சாட்சியங்கள், சங்கர் கொலையில் சின்னசாமிதான் சூத்திரதாரி என்பதை நிறுவுவதைக் கண்டுகொள்ளாமல், சின்னச்சாமியை விடுதலை செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். சின்னசாமியை விடுதலை செய்ததோடு, அவரிடமிருந்து ஏதேனும் தண்டனைத் தொகை வசூலித்திருந்தால் அதனையும் திருப்பிச் செலுத்துமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சங்கர் கொலை வழக்கை விசாரித்த டி.எஸ்.பி விவேகானந்தன் இந்த வழக்கைப் பற்றிக் கூறுகையில் “சின்னசாமியும் அவரது குடும்பத்தினரும் சங்கர் குடும்பத்தினரை பலமுறை மிரட்டியிருக்கின்றனர். அவர்கள் இக்கொலையின் மூலம் இந்தச் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

தற்போது உயர்நீதிமன்றமும் தனது தீர்ப்பின் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறது. “ஆணவப் படுகொலைகளைச் செய்பவர்கள் இனி செய்கூலி, சேதாரம் இல்லாமல் விடுவிக்கப்படுவார்கள்” என்பதுதான் அது ! சாதி ஆணவப் படுகொலைகளுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம் இது !


– நந்தன்
செய்தி ஆதாரம்: த நியூஸ் மினிட். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க