எமதர்மன் போல விரட்டி விரட்டி வசூல் செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு !
அன்புடையீர் வணக்கம்,
கடந்த நான்கு மாத காலமாக கொரோனாவால் தமிழகத்தில் வேலையும் இன்றி, கையில் காசும் இன்றி அன்றாட சோற்றுக்கே குடும்பங்கள் பரிதவிக்கும் நிலை அனைவருக்கும் பொதுவாக இருக்கிறது.
இந்நிலையில் எக்விடாஸ், கிராம விடியல், உஜ்ஜிவன், போன்ற நுண்கடன் நிறுவனங்களும் மகேந்திரா பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், பஜாஜ் பைனான்ஸ், காவிரி பைனான்ஸ் போன்ற வாகனக் கடன், வீட்டுக் கடன், தொழில் கடன், ஆகிய கடன் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களான பொதுமக்களை வட்டிக்கு மேல் வட்டி போட்டு வழிப்பறி செய்து வசூலித்து வருகிறது.
இதனை கண்டித்து ரிசர்வ் வங்கியும் உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 31 வரையில் வசூல் செய்யக் கூடாது, வட்டி வசூலிக்கக் கூடாது என்று எச்சரித்தது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இதனை மீறி இந்நிறுவனங்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இதனால் பொதுமக்கள் செய்வதறியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மேற்கண்ட ரிசர்வ் வங்கியின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடிப்படையாகக் கொண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரும் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் செயல்படும் நிதி நிறுவனங்கள் பல இடங்களில் பொதுமக்களிடம் கட்டாய வசூல் செய்து அடாவடித்தனம் செய்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை கண்டிக்கும் முகமாக 22.06.2020 அன்று காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பிலும் கண்டனம் தெரிவித்து மனு கொடுக்கப்பட்டது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
மனுவை நேரில் வந்து பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியர் திரு பரிமளம் அவர்களிடம் தஞ்சை, திருச்சி போல கடலூரில் உத்தரவு போட வேண்டுமென்றும், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழைகள் வாங்கிய சுய உதவி குழு கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
படிக்க:
♦ நுண்கடன் நிறுவனங்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம் ! மக்கள் அதிகாரம்
♦ யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்
இந்நிகழ்வில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி. குமார், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், ரவி ராமலிங்கம், தனியார் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் குரு ராமலிங்கம், பாபு, ஷேர் ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் நலச்சங்க தலைவர் குமரன், பேருந்து நிலைய உட்புற சிறு வியாபாரிகள் சங்க தலைவர் திரு சுகுமார், உன்னால் முடியும் தோழா மாற்றுத்திறனாளி சங்கத்தின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மற்றும் கடலூர் மாவட்ட திருவள்ளுவர் அச்சக உரிமையாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தலைவர் திரு கார்த்திகேயன் கஜேந்திரன், அம்ஜத் தமிழ்நாடு மீனவர் பேரவையின் மாவட்ட தலைவர் சுப்புராயன், சமூக நீதிப் பேரவை தலைவர் சாய்ராம், தமிழர் கழகத்தின் மாவட்டத்தலைவர் கு.பருதி வாணன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரவை பொறுப்பாளர்கள் தர்மராஜன் கணேசன் பாலசுப்பிரமணியன், குடியுரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகி மன்சூர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சிராஜ்தீன், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி செயலாளர் வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பா கிருஷ்ணகுமார், திராவிடர் கழகத்தின் மாதவன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
தகவல் :
அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு
மற்றும் மக்கள் அதிகாரம், கடலூர்.