பத்திரிக்கைச் செய்தி
20.06.2020
கொரோனா முடக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்திருக்கும் நிலையில் அரசுத்துறை, தனியார்துறை வங்கிகள் நிதிநிறுவனங்கள் அனைத்தும் கடன் தவணைகளை வரும் ஆகஸ்ட் 31 வரை வசூலிக்கக்கூடாது என மத்திய மாநில அரசுகளும், ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளன. மாவட்ட ஆட்சியர்களும் இதனை நாளிதழ்கள் வாயிலாக அறிவித்துள்ளனர். ஆனால் இவற்றை சற்றும் சட்டை செய்யாமல் நுண்கடன் நிறுவனங்களும், நிதிநிறுவனங்களும் அடாவடித்தனமான வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், அச்சுறுத்தி அவமானப்படுத்துகின்றனர்.
இது குறித்து எண்ணற்ற புகார்கள் வருகின்றன. பல பெண்கள் தொலைபேசியிலேயே கதறியழுகின்றனர். வேறு வழியின்றி புகார் கொடுக்கச் சென்றால் காவல்துறையினர் புகாரை வாங்க மறுப்பதுடன் மோசமாக அவமானப்படுத்துகின்றனர். அரசின் அறிவிப்பை சுவரொட்டியாக அச்சிட்டு ஒட்டியதற்காக மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் மீது சீர்காழி போலீசார் வழக்குப் போட்டு சிறையிலடைத்துள்ளனர்.
படிக்க:
♦ அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !
♦ முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை மத்திய அரசு ஓசைப்படாமல் தள்ளுபடி செய்கிறது. ஆனால் ஏழை எளிய மக்கள் தாங்கள் வாங்கிய கடன்களை எப்பாடு பட்டாவது திருப்பிச் செலுத்தி விடுகின்றனர். இதனை அரசின் புள்ளிவிவரங்களே மெய்ப்பிக்கின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து மக்கள் உணவுக்கே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் நிதிநிறுவனங்கள் கடன் வசூல் என்ற பெயரில் ரவுடித்தனமான முறையில் நடந்து கொள்வதை அரசும் மாவட்ட நிர்வாகங்களும் உடனே தடுத்து நிறுத்துவதுடன் அத்துமீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்கள் வீதிகளில் திரளும் கட்டாயம் ஏற்படும். இது மேலும் கொரோனா பரவலுக்கே வழிவகுக்கும்.
இவண்,
காளியப்பன்,
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.