நோம் சாம்ஸ்கி (Naom Chomsky) ஏகாதிபத்தியம், புதிய தாராளவாதம் மற்றும் இராணுவ-தொழில்துறை-ஊடக கூட்டிற்கு எதிரான இவரது விமர்சனங்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இவர் ஒரு அமெரிக்க மொழியிலாளர் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர். ‘தி வயர்’ இணையதளத்திற்காக, சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் (தி வயர் இணைய தளத்தில் 18-05-2020 வெளியானது) தமிழாக்கம்.

***

  • உலகின் செல்வ வளமிக்க மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இந்த நாவல் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை எதிர்கொள்வதில் ஏன் தோல்வியடைந்துள்ளது? இத்தோல்வி ஒரு அரசியல் தலைமை சார்ந்த தோல்வியா அல்லது ஒரு கட்டமைப்பின் தோல்வியா? மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றின் நெருக்கடியிலும், டொனால்ட் டிரம்பின் மீதான மக்களின் நன்மதிப்பானது மார்ச் மாதத்தின் போது உண்மையில் உயர்ந்திருந்தது. இது நடக்கவிருக்கும் அமெரிக்கத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நீங்கள் கருதுகிறீர்களா?
நோம் சாம்ஸ்கி

இதற்கு விடையளிக்கும் முன், சற்று பின்னோக்கிச் சென்று இந்த தொற்றுநோயின் மூலக்காரணங்களை காண்பது மிக முக்கியமானது என கருதுகிறேன். உண்மையில், இது எதிர்பாராதது அல்ல. 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS) கொள்ளைநோய்க்குப் பின்னர், இதனை ஒத்த மற்றுமொரு தொற்றுநோய் வருவதற்கான சூழலையும் அது அநேகமாக சார்ஸ் கோரானா வைரஸின் வகையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அதுபற்றிய அறிவு போதுமானதாக இல்லை. யாராவது இதற்காக ஏதாவது செய்ய வேண்டும். மருந்துக் கம்பெனிகள் இதற்கு ஆர்வம் காட்டவில்லை. அவை சந்தையின் வழிகாட்டுதலில் செயல்படுகின்றன, எல்லாவற்றிலும் இலாபத்தை எதிர்ப்பாக்கின்றன. அரசாங்கம் இந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆனால், அது புதிய தாராளவாதக் கொள்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மையத்திற்கு (Centres for Disease Control) வழங்கும் நிதிகளை தொடர்ந்து குறைத்ததன் மூலமும், அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் சுகாதார அதிகாரிகளின் முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கித்தள்ளியதன் மூலமும், இந்த நிலைமையை டிரம்ப் மேலும் மோசமாக்கினார். ஆகையால், அமெரிக்கா எந்த முன் தயாரிப்பின்றி தனித்திருந்தது. ஆனால், சீன விஞ்ஞானிகள் இந்த நோயை உருவாக்கும் நோய்க்கிருமியை மிக விரைவாகக் கண்டுபிடித்து, அதன் மரபணுவை வரிசைப்படுத்தி, அது தொடர்பான எல்லா தகவல்களையும் பொது சமூகத்திற்கு  ஜனவரி 10-ஆம் தேதி தெரியப்படுத்தினர்.

மேலும், ஒரே சமயத்தில் பெரும்பாலான நாடுகள் வினையாற்றியிருந்தால், இப்பிரச்சினையை மிக சுலபமாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க இயலும். ஆனால், அமெரிக்க உளவுத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த முறையான எச்சரிக்கைகள் யாவற்றையும் டிரம்ப் அலட்சியப்படுத்தியதோடு, இதனை வெறும் ஒரு காய்ச்சல் என்றும் அது தானாகவே மறைந்துவிடும் என்றும் கூறினார். இறுதியாக இந்தப் பிரச்சினையில் அவர் கவனம் செலுத்திய போது, அதாவது மார்ச் மாதத்தில், நிலைமை மிகவும் காலம் கடந்ததாகிவிட்டது, பத்தாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இறந்து போய் விட்டனர், இந்தத் தொற்று நோய் பரவல் கைமீறிய நிலைக்கு சென்று விட்டது.

இதனால், அவை, முதலாளித்துவக் கோட்பாடு, முதலாளித்துவ வகையிலான காட்டுமிராண்டித்தனமான புதிய தாராளவாதம் மற்றும் மக்கள் நலனில் எந்த அக்கறையுமில்லாத ஒரு அரசாங்கம் ஆகிய மும்முனைத் தாக்குதலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஜனாதிபதி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்போது, அவர் அளிக்கும் ஒப்புதலில் எப்போதுமே ஒரு ஆதாயம் இருக்கும். ஆனால், டிரம்ப் விசயத்தில் அது விரைவாக மறைந்துவிடும். இதற்கு காரணம், கிரிமினல்தனமான குளறுபடியான அவரது செயல்பாடுகள். வருகின்ற தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை இவை வெகுவாக பலவீனப்படுத்தினாலும், நவம்பர் மாதத்திற்கு முன்னதாக பல சம்பவங்கள் நிகழக்கூடும்.

படிக்க:
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி
♦ கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

  • பல நாடுகளுக்கு தொற்றுநோயைக் கண்காணிக்கவும் அதற்கெதிராகப் போராடவும் டிஜிட்டல் தொழில்நுட்பமும் அரசின் கட்டுப்பாடும் உதவுகின்றன, ஆனால், அதிகரித்துவரும் அதிகாரத்துவக் கட்டுப்பாடு மற்றும் அரசின் கண்காணிப்பு பற்றிய கவலையை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் இதை ஏற்கிறீர்களா?

இங்கே இவ்வாறு விவாதப் பிரதிவாதங்கள் செய்கின்ற சக்திகள் இருக்கின்றன. ஒருபுறம், வணிக உலகமும் அதன் புள்ளியியல் நிபுணர்களும் மிக அதிகமான அதிகாரத்துவக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒன்றை (அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கின்ற ஒன்றை) நிறுவ முயல்கின்றனர். மற்றொருபுறம், மிகவும் நியாயமான மற்றும் சுதந்திரமான உலகத்தை நோக்கி செல்ல விரும்புகின்றன மக்கள் சக்திகள். இறுதியில் என்ன நடக்கும் என்பது இந்த இரு சக்திகளுக்கு இடையிலான போராட்டத்தில்தான் அமைந்துள்ளது.

  • தற்போதைய சூழலில் ஏழை மக்களின் அவல நிலையிலிருந்து அவர்களை மேம்படுத்த என்ன விதமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? ஒரு புதிய சமூகஜனநாயக அணுகுமுறை அல்லது அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் அதிக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பிணையெடுப்புகள் இவற்றில் எது அதற்கு சாத்தியமானது?

எவ்விதமான பொருளாதார நடவடிக்கைகள் தேவை என்பது நமக்கு தெரியும். தற்போதைய நெருக்கடிகளில் இருந்து என்ன வெளிவரும் என்பது நமக்கு தெரியாது. கடந்த 40 ஆண்டு புதிய தாராளவாதக் கால முதலாளித்துவக் காட்டுமிராண்டித்தனத்தின் பயனாளர்கள்தான், தற்போதைய தொற்றுநோய் மற்றும் அதன் விளைவுகளுக்கு காரணமானவர்கள். தங்களது சொந்த நலனிற்காக கட்டியமைத்த இந்தக் கட்டமைப்பு தொற்றுக்குப் பின் இதுவரை இல்லாத கடுமையான வடிவத்தில் வெளிவருவதை உறுதிப்படுத்த இடைவிடாமல் அவர்கள் செயல்படுகிறார்கள்.

மற்றொருபுறம், மிகவும் வித்தியாசமான மற்றும் சிறந்த உலகை உருவாக்கக்கூடிய பிரபலமான மக்கள் சக்திகள் ஒரு அமைப்பாக வடிவம் பெற்று வருகின்றன. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஐரோப்பாவின் யானிஸ் வாரோஃபாகிஸ் (Yanis  Varoufakis) ஆகியோரால் துவக்கப்பட்ட முற்போக்கு சர்வதேசத்துடன் அது, சர்வதேச அளவில் நடந்து வருகிறது. இப்போது கிழக்கு உலகமும் அதில் இணைந்து வருகிறது.

இந்த நெருக்கடி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமடைகிறதோ, அந்த அளவிற்கு நிலைமை மோசமடையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த பெருந்தொற்றில் இருந்து மீள்வது என்பது மிக பயங்கரமான இழப்புகளுக்கு பின்னரே நடக்கும். உலகம் இப்போதைய போக்கிலேயே இயங்கினால், மிக நீண்டகாலத்தில் அல்ல வெகுவிரைவாகவே, துருவப் பகுதியில் உள்ள (அண்டார்ட்டிக்கா) பனிக்கட்டிகளும் இமயமலையில் பனிப்பாறைகளும் உருகுவதைத் தடுக்க முடியாது; அல்லது புவி வெப்படைதலின் பிற மோசமான விளைவுகள், தெற்காசியாவை மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றுவதையும் தடுக்க முடியாது. இந்த பயங்கரமான நிலையை உலகம் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் அடைந்துவிடும் என்று மிக அண்மை கால அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • ராப் வால்லஸ் (Rob Wallace) போன்ற தொற்றுநோயியல் நிபுணர்கள் லாபத்தினால் உந்தப்படும் முதலாளித்துவக் தர்க்கம் வன உயிரினச்சூழலின் மீது படையெடுத்ததையும், னித சமூகத்திற்கும்வன உயிரிகளுக்கும் இடையில் மோதல்கள் அடிக்கடி நடப்பதையும், இதனால் வைரஸ் கிருமிகள் மனித இனத்தை தாக்குவதற்கு வழிவகுப்பதையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆகையால், முதலாளித்துவ நெருக்கடி ரு சுகாதார நெருக்கடியின் வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால், மனித சமூகம் பழையஇயல்பு நிலைக்குச் செல்ல முடியாது என்று கூறுகிறார். இது குறித்த உங்களது கருத்து?
ராப் வால்லஸ்

ராப் வால்லஸின் கூற்று முற்றிலும் சரியே. வன உயிரினங்களின் வாழ்விடங்களை அழித்தொழிப்பது மற்றும் மீட்டிருவாக்கம் செய்ய இயலாத அளவிற்கு நிலத்தை அழிப்பது போன்றவை அதிகரிக்க அதிகரிக்க, கண்கூடாக நாவல் கொரோனா வைரஸ் விசயத்தில் நாம் பார்த்த, இனம் விட்டு இனம் பரவும் இத்தகையை பரவல்களின் அபாயத்தை அதிகரிக்கவே செய்யும். தடைகளற்ற முதலாளித்துவத்தின் தற்கொலைப் போக்குகள் சுகாதார நெருகக்டியின் மூலமாக இன்னும் பலவழிகளில் அம்பலப்பட்டுள்ளது. 2003-ம் ஆண்டு சார்ஸ் தொற்றுநோய் பரவலின் போது, விஞ்ஞானிகள் மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதை எச்சரிக்கை செய்தனர், அதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், யார் அவ்வாறு செய்ய முடியும்?

மிகப்பெரிய சூப்பர் பணக்கார மருந்து கம்பெனிகள் இவற்றை செய்வதற்கான மூலாதாரங்களைக் கொண்டிருந்தன, ஆனால், இலாபம் என்ற இயல்பான முதலாளித்துவ கோட்பாட்டினால் தடுக்கப்பட்டன. அரசாங்கம் இதில் அடியெடுத்து வைக்க முடியும், ஆனால், அது புதிய தாராளவாத பிளேக் நோயினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனால், தனது மேலாதிக்கத்தால் கட்டுப்படுத்தப்படும் உலகத்தில் அரசாங்கம் தலையிடக் கூடாது என தனியார்துறை அரசாங்கத்தை நிர்பந்திக்கிறது. ஆனால், தற்போது நடைபெறுவதைப் போன்று, இந்த கார்ப்பரேட் துறை பணக்காரர்கள் உருவாக்கிய நெருக்கடியில் இருந்து அவர்களைக் காப்பாற்றுவதை மட்டுமே அரசாங்கம் செய்துவருகிறது.

தற்போது கணிக்கப்பட்டுள்ளது போல, இப்போது இருப்பதைக் காட்டிலும் மிக தீவிரமான ஒரு தொற்றுநோய் – புவி வெப்பமாவதால் மிகவும் பெருக்கப்பட்ட ஒரு தொற்று நொய் – வரலாம். விஞ்ஞானிகளுக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியும், ஆனால், யாராவது செயல்பட தயாராக இருக்க வேண்டும். நம் கண் முன்னே இருக்கும் சரியான பாடங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இல்லையெனில், அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

பெரிய மருந்து கம்பெனிகளும் அரசாங்கமும் தான் இதற்கான ஒரே வாய்ப்புகள் என தற்செயலாக கூட நாம் கருதக்கூடாது. பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து பெரிய அளவில் மானியம் பெறுகின்ற பெரிய மருந்து கம்பெனிகள் தேவையா என்பது நியாயமான கேள்வி. தனியார் மேலாதிக்கத்திற்கும் குவிக்கப்பட்ட செல்வத்திற்கும் சேவை செய்யும் நிலைமைக்கு மாறாக, மனிதத் தேவைகளுக்கும் சமூகத்திற்கும் சேவை செய்யவைக்க, தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு ஆட்படும் வகையில் இவற்றை ஏன் சமூக உடைமையாக்கக் கூடாது?

படிக்க:
♦ தாய் மொழி வழிக் கற்றல் – அவசியம் ஏன் ?
♦ கொரோனா பணி நியமன ஊழல் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் !

  • வைரஸ் நோய்த்தொற்றை எதிர்த்து சிறப்பாக போராடுவதற்கு நாடுகளிடையே ஒற்றுமை தேவைப்படுகிறது. ஆனால், இனவாதம், அந்நியர் மீதான வெறுப்பு சார்ந்த பழிபோடும் நாடகங்கள், சீனாவை மிரட்டுவது, உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதிகளை நிறுத்துவது, ஈரான் மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு மிகப்பெரும் பொருளாதார தடைகளை விதிப்பது, மருத்துவ உபகரணங்களுக்காக சண்டையிடுவது போன்ற பல நடவடிக்கைகளை காண்கிறோம். பேட்ரிக் காக்பர்ன் (Patrick Cockburn) இது அமெரிக்க மேலாதிக்கத்தின் சரிவு என்கிறார். நீங்கள் இதனை ஏற்கிறீர்களா?

மேற்கூறியவற்றுள் பெரும்பாலானவை டிரம்ப் நிர்வாகத்தின் அருவருப்பான பக்கமும் ஏகாதிபத்தியத்தின் வழக்கத்திற்கு மாறான குரூரமான வடிவமும் ஆகும். ஆனால் இதைக் காட்டிலும் மிக அதிகமான துலக்கமாக வெளிப்படுகின்ற நடவடிக்கைகளும் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மிக பணக்கார மற்றும் மிக வலிமைவாய்ந்த நாடான ஜெர்மனி, இந்த நெருக்கடியை நன்றாகவே சமாளித்து வருகிறது. அந்நாட்டிலிருந்து தெற்கில் மிக தொலைவில் இல்லாத நாடான இத்தாலி இந்த நோய்த்தொற்றினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் ஜெர்மனி தனது மருத்துவ சேவைகளை இத்தாலிக்கு வழங்குகிறதா? இதுநாள் வரை வழங்கியதாக தகவல் இல்லை.

நல்வாய்ப்பாக, இத்தாலி கியூபாவிடமிருந்து கணிசமான உதவியைப் பெறுகிறது. இதுதான் உண்மையான சர்வதேசியத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு, இது முதல்முறையாக நடைபெறுவது அல்ல. இச்சூழ்நிலைகள் எவ்விதமான சர்வதேசியம் தேவைப்படுகிறது என்பதையும் நம்மையெல்லாம் அழிக்கும் சுயநலத்தின் தன்மையையும் நமக்குக் காட்டுகிறது.

டிரம்ப், அமெரிக்காவிற்கு கடுமையான தீங்கை விளைவித்துக் கொண்டுள்ளார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனினும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு பாரதூரமான சேதத்தை அவரால் கூட விளைவிக்க முடியாது. அமெரிக்காவின் சக்தியோ மிக வலிமையானது. இராணுவ ஆதிக்கத்தில், அதன் வலிமை ஒப்பிட முடியாதது. பிற நாடுகள் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான், மற்ற நாடுகள் எவ்வளவு தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மூன்றாம் நாட்டின் பொருளாதாரத் தடைகளுக்குக் கட்டுப்படுகின்றன.

இசுரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான “இந்த நூற்றாண்டிற்கான ஒப்பந்தத்தை” அமெரிக்கா வெளியிட்ட போது, அதில் உள்ள விதிமுறைகளை மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய முறையாக மாறிவிட்டது. வேறு எந்த நாடாவது இந்த ஒப்பந்தத்தை வெளியிட்டிருந்தால், மற்ற நாடுகள் – இதனை கண்ணில் பட்டிருக்கும் பட்சத்தில் – அதை கேலிக்குரியதாகவே பார்த்திருப்பார்கள்.

அமெரிக்காவைச் சார்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகத்தின் பாதி செல்வத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மேலும், ஒவ்வொரு பொருளாதார வகையிலும் முதல் இடத்தையோ சில சமயங்களில் இரண்டாம் இடத்தையோ வகிக்கின்றன.

பிற நாட்டினருக்கு அமெரிக்காவைப் பார்க்கப் பிடிப்பதில்லை; அல்லது இன்னும் மோசமாகவே பார்க்கிறார்கள். இது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஆனால், அவர்கள் அமெரிக்காவைக் கண்டு அஞ்சுகிறார்கள்; உலகளாவிய அரங்கில் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் தீவிரமான போட்டியாளர்கள் யாரும் இல்லை.

★★★

மூலக்கட்டுரை நன்றி : தி வயர்

தமிழாக்கம்: மலரவன், சமூக அரசியல் ஆர்வலர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க