பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 செயற்பாட்டாளர்களுக்காக குரல் கொடுத்துவரும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கணினிகள் ஸ்பைவேர் எனப்படும் வேவு பார்க்கும் பொருளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததை அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு கண்டறிந்துள்ளது.

கடந்த ஜூன் 15, 2020 அன்று அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு – சிட்டிசன்ஸ் லேப் எனும் இணையச் செயற்பாட்டாளர் குழுவுடன் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிடுள்ளது. அதில் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 11 சமூக ஆர்வலர்களுக்காக குரல்கொடுக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் 9 பேரின் கணினிகள் வேவு பார்க்கப்படுவதை தமது ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஜனவரி 1, 2018 அன்று நடந்த பீமா கொரேகான் வன்முறைக்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டை ஏற்பாடு செய்ததாகக் கூறி 5 சமூகச் செயற்பாட்டாளர்களை 2018-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேலும் 6 சமூகச் செயற்பாட்டாளர்களையும் இணைத்து அவர்களையும் அடுத்தடுத்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

கைது செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் மட்டுமே எல்கர் பரிஷத்தோடு தொடர்புடையவர். மற்றவர்கள் தொடர்ச்சியாக மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகவும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ‘குற்றத்திற்காக’ இத்தகைய போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடைசெய்யப்பட்ட இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)-யோடு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது போலீசு.

படிக்க:
♦ கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !
♦ கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

மேலும் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்வதற்கு திட்டமிட்டதாகவும் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் சதியில் பங்கெடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஆதரவாக போலி கடிதங்களையும் அவர்களது கணினிக்குள் வைத்து வழக்கை ஜோடித்தது போலீசு.

கைது செய்யப்பட்டவர்களின் கணினிகளின் வன்தகட்டின் (Hard Disk) நகலை புனே போலீசு நீதிமன்றத்துக்கும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் கொடுத்தது. அதனை வாங்கி ஆய்வு செய்த கேரவன் பத்திரிகை, அந்த வன்தகட்டில் ‘மால்வேர்’ என சொல்லப்படும் தகவல் திருட்டு மென்பொருட்கள் இருந்ததையும் அதன் மூலம் கோப்புகள் கையாளப்பட்டதையும் இந்த ஆய்வு அம்பலப்படுத்தியது.

இந்த ‘மால்வேர்’களை இயக்குபவர்கள், இதன் மூலம், தொலைவிலிருந்தே கணிணிக்குள் தங்களுக்குத் தேவையான ஆவணங்களை நுழைக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது கணினியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படும் கடிதங்கள் இப்படித்தான் கணினிக்குள் கொண்டு வந்திருக்கப்பட வேண்டும் என கணினி பாதுகாப்பு வல்லுனர்களும் வழக்கறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வாட்சப் நிறுவனம், இஸ்ரேலின் மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ. உருவாக்கிய பெகாசஸ் என்னும் வேவுபார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் வாட்சப் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகக் கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது. என்.எஸ்.ஓ நிறுவனமோ, தாம் அரசாங்கங்களுக்கு மட்டும்தான் அத்தகைய வேவுபார்க்கும் தொழில்நுட்பங்களை வழங்குவதாகத் தெரிவித்தது.
அச்சமயத்தில் இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த பெகாசஸ் ‘மால்வேர்’ செயலி மூலமாக கண்காணிக்கப்பட்டிருப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தொடர்பு கொண்டு தாம் பிரச்சினை குறித்து தெரிவித்துவிட்டதாகக் கூறியிருக்கிறது வாட்சப். அந்த வகையில் வாட்சப் தொடர்பு கொண்டவர்களுல் பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த மூன்று செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

இதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர்களும் கண்காணிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பெயரில், இவ்வழக்குகளுக்காக குரல் கொடுப்பவர்களின் கணிணிகளை அம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமைகள் அமைப்பும், சிட்டிசன்ஸ் லேப் என்ற இணையச் செயற்பாட்டாளர்கள் குழுவும் இணைந்து ஆய்வு செய்தன. இவர்கள் அனைவருக்குமே, கடந்த 2019 ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மின்னஞ்சல்கள் மூலம் மால்வேர்கள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மின்னஞ்சல்களில் இருக்கும் இணைப்பை அழுத்தினால் அது பின்னணியில், ‘நெட்வயர்’ எனும் வணிகரீதியான வேவுபார்க்கும் மென்பொருளை கணினியில் நிறுவும். அதன் மூலம் கணினி, கைப்பேசி ஆகிய அனைத்தையும் வேவுபார்க்க முடியும்.

வழக்கறிஞர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களுமான, நிகல்சிங் ரத்தோட், டிக்ரி ப்ரசாத் சௌகான், யக் மோஹித் சவுத்ரி, ராகினி அகுஜா, கல்வியாளரான பார்த்த சாரதி ரே, பத்திரிகையாளரான பி.கே.விஜயன், ஜக்லக் எனும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்களான ஷாலினி கெராம், இஷா கந்தெல்வால் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் ஜக்லக் அமைப்பின் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும் மால்வேர் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் அச்சமயத்தில் முக்கியமாக பேசப்படும் விவகாரங்கள் குறித்து தலைப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருக்கின்றன. அது குறித்த ஆர்வத்தில் செயல்பாட்டாளர்கள் இணைப்பை அழுத்தினால் அந்த மால்வேர் மறைமுகமாக தரவிறக்கப்பட்டு பின்னணியில் இருந்து செயல்பட ஆரம்பிக்கும். அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், கணினி செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் கண்காணிப்பதோடு, இந்த மால்வேரை அனுப்பியவர்கள் விரும்பும் கோப்புகளை கணினிக்குள் நுழைக்கவும் வழியேற்படுத்திக் கொடுக்கவல்லவை.

பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரின் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளான பின்னரும்கூட 11 பேரும் பிணை வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவரகள். இந்தியச் சிறைகளில் கொரோனா தொற்று பெருமளவில் பரவிக் கொண்டிருக்கையில் அதற்கு மத்தியிலும் இவர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.

புனே போலீசுத்துறையின் வசம் இருந்த இந்த வழக்கை, அமித்ஷாவின் உள்துறைச் செயலகத்தின் கீழ் உள்ள தேசிய புலனாய்வு முகமை (NIA) கடந்த ஜனவரி 24, 2020 அன்று மராட்டிய அரசிடமிருந்து தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை NIA கையிலெடுத்தவுடன் பீமா கொரேகான் வழக்கில் கலவரத்தைத் தூண்டிய வலதுசாரி கிரிமினல்களாகிய மிலிந்த் ஏக்பொடே மற்றும் சாம்பாஜி பீடே ஆகிய இருவரின் மீதான குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்தது.

தேசிய புலனாய்வு முகமைக்கு என ஒரு காவிப் பின்னணி இருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே ஆளும் பாஜக – சங்க பரிவாரக் கும்பலுக்கு ஆதரவாக பல்வேறு வழக்குகளை நீர்த்துப் போகச் செய்தது. பல மாநில அரசுகளாலும் நடத்தப்பட்டு வந்த வழக்குகளை தன்னிச்சையாக கையெலெடுத்துக் கொண்டு, காவிக் கும்பலுக்கு ஆதரவான வகையில் வழக்கை திசை மாற்றிக் கொண்டு போவதே இதன் வாடிக்கையாக இருந்துவருகிறது. மராட்டிய தீவிரவாத எதிர்ப்புப் படைப்பிரிவினரால் வெற்றிகரமாக புலனாய்வு செய்யப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் விடுவிக்கப்பட்டது அதற்கு நல்ல உதாரணம். இந்த வழக்கில் குற்றவாளிக்குச் சாதகமாக நடந்து கொள்ளுமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் பேரம் பேசியது அச்சமயத்தில் வெளிவந்து என்.ஐ.ஏ-வின் யோக்கியதை அம்பலமாகியது.

செயற்பாட்டாளர்களின் கணிணிக்குள் அந்த ஆவணங்கள் எப்படி சென்றன என்பதை கேரவன் பத்திரிகை நடத்திய ஆய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது. செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணிணிகள் கண்காணிக்கப்படுவது அம்னெஸ்டி அமைப்பு நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

மோடியின் பாசிச ஆட்சியில் மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுபவர்களை கண்காணிப்பதும், பொய் வழக்குகள் போட்டு முடக்குவதும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராளிகளை டில்லி போலீசு விரட்டி விரட்டி வேட்டையாடுவதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

இவை எங்கோ யாருக்கோ நடக்கிற ஒன்று என ஒதுக்கியிருந்தால், இந்தக் கைதுகள் அனைத்தும் படுகொலைகளாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை. அன்று நமக்குக் குரல் கொடுக்கவென யாரும் இருக்கப் போவதில்லை !


– நந்தன்
செய்தி ஆதாரம்: ஸ்க்ரால். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க