பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 235 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி அபார வெற்றிபெற்றுள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் பாசிச பா.ஜ.க. கும்பல்தான் வெற்றிபெறும் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான் எனினும் இத்துணை பிரம்மாண்டமான வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இன்னொருபுறத்தில், இந்தியா கூட்டணி கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியானது 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்று இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளிடம் பறிக்கொடுத்திருந்த பா.ஜ.க., ஆறு மாதங்களுக்குள்ளாக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றியை சாத்தியப்படுத்தியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.
மேலும், அம்மாநிலத்தின் பிராந்தியக் கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் குதிரை பேரத்தின் மூலமும் தன்னுடைய ஏவல்படையான அமலாக்கத்துறையின் மூலமும் இரண்டாக உடைத்து ஒரு பிரிவை பா.ஜ.க. தன்னுடன் கூட்டணியில் இணைத்துக்கொண்டது. எனவே, இத்தேர்தல் இவ்விருகட்சிகளுக்கான வாழ்வா சாவா போராட்டமாக பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவின் மூலமாக எது உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சிகள் இருந்தன.
இவையன்றி, வருகின்ற 2025-ஆம் ஆண்டில் பாசிச பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டு வருவதால் அதன் நாக்பூர் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவில் பா.ஜ.க. வெற்றிபெறுவது ஆர்.எஸ்.எஸ்-க்கு அவசியமானதாகும். மேலும், இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பை நகரம் உள்ள மகாராஷ்டிரா மாநில வெற்றியை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதியது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், மகாராஷ்டிர தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கவர்ச்சிவாதம், சாதி, மதம் போன்றவற்றை பயன்படுத்தி பா.ஜ.க. கும்பலை வீழ்த்த முடியாது; பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு பாசிச சித்தாந்தத்திற்கு எதிரான மாற்று சித்தாந்தமும் மாற்றுத் திட்டமும் இன்றியமையாதது என்பதை இம்முடிவு உறுதியாக எடுத்துரைத்துள்ளது.
மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வும்
பாசிசக் கும்பலின் சதித்தனங்களும்
மகாராஷ்டிராவானது உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியையும் உலகில் அதிகளவில் கோடீஸ்வரர்கள் வாழும் நகரத்தையும் ஒருங்கே பெற்றுள்ள மாநிலமாகும். இந்தியாவின் பணக்கார மாநிலம் என சொல்லப்படுகின்ற மகாராஷ்டிராவில் 17.4 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இன்னும் எளிமையாக கூற வேண்டுமெனில், அம்பானி தன் மகனுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உல்லாச திருமணம் செய்வதும் ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அக்கம்பக்கமாக நடக்கும் அளவிற்கு அம்மாநிலத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு உச்சத்தில் உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற விவசாயம் கார்ப்பரேட்மயமாக்கத்தால் நெருக்கடியை எதிர்க்கொண்டிருப்பதால், உணவு, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் தேவைகளுக்கு விவசாயத்தையே நம்பியுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, வெங்காய ஏற்றுமதிக்கு பா.ஜ.க. அரசு தடை விதித்தது; வெங்காய ஏற்றுமதிக்கான வரியை பல மடங்கு உயர்த்தியது; சோயாபீன், சோளம் போன்ற விளைப்பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவான விலையில் சந்தையில் கொள்முதல் செய்யப்படுவது போன்றவை விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னொருபுறம், மகாராஷ்டிராவில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 10.8 சதவிகிதம் வரை அதிகரித்து இளைஞர்களை வதைக்கிறது. சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவிற்கான பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை பாசிச மோடி கும்பல் குஜராத்திற்கு திசைதிருப்பிவிடும் செய்தி சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இவையன்றி, இந்துமதவெறித் தாக்குதல்களுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் எதிர்ப்புணர்வு, விலையேற்றம், வாழ்வாதார நசிவிற்கெதிரான பெரும்பான்மை மக்களின் மனநிலை, வேலையின்மை, நுழைவுத்தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்கள்-இளைஞர்களின் தொடர் போராட்டங்கள்; ஓ.பி.சி. இடஒதுக்கீடுக் கோரும் மராத்தா சாதியினர் போராட்டம் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பா.ஜ.க. எதிர்ப்புணர்வு உள்ளது.
விவசாயிகளின் எதிர்ப்புக்கு அஞ்சி நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய பாசிசக் கும்பல், வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியையும் குறைத்தது. செப்டம்பர் மாதத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரியை உயர்த்தியது.
கிசான் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான உதவித்தொகை ரூ.12,000-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்தப்படும்; பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும்; 7.5 குதிரைத்திறன் கொண்ட விவசாயப் பம்புகளைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; பாவந்தர் யோஜனா திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைக்கும் சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசத் தொகை விவசாயிகளுக்கு செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிவாத வாக்குறுதிகளை பா.ஜ.க. அள்ளிவிட்டது.
அதேபோல், பெண் வாக்காளர்களை குறிவைத்து 18 முதல் 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் “லட்கி பெஹ்னா யோஜனா” திட்டத்தை அமல்படுத்தியது. 2.25 கோடி பெண்களின் (மொத்த பெண்களில் 55 சதவிகிதம்) வங்கிக் கணக்குகளில் இந்த ஐந்து மாத காலத்தில் ரூ.7,500 வரை பணம் செலுத்தியது. மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இத்தொகை ரூ.2,100-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தது. “அக்ஷய் அன்ன யோஜனா” திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சமையலறை ரேஷன்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இவை கிராமப்புற பெண் வாக்காளர்கள் மத்தியில் தாக்கம் செலுத்தியதன் விளைவாக மகாராஷ்டிரா தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களித்தனர்.
அதேபோல், பத்து லட்சம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்; 25 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்படும்; மகாராஷ்டிராவில் தொழில்துறை தேவைகளை பூர்த்திசெய்ய திறன் கணக்கெடுப்பு நடத்தப்படும் உள்ளிட்டு இளைஞர்களை மையப்படுத்திய கவர்ச்சிவாத வாக்குறுதிகளையும் அளித்தது.
இன்னொருபுறம், கவர்ச்சிவாதத் திட்டங்களின் மூலம் மக்களின் பா.ஜ.க. எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் இந்த அபாயமிக்க போக்கை மக்கள் மத்தியில் கொண்டுசென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், பா.ஜ.க-வுடன் போட்டிபோட்டுக்கொண்டு தாங்களும் கவர்ச்சிவாத வாக்குறுதிகளை வாரியிறைத்தன. சொந்தத் திட்டம் இல்லாமல் திணறிய எதிர்க்கட்சிகள், பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை, விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட ஒவ்வொரு வாக்குறுதியிலும் பா.ஜ.க. அறிவித்ததை விட கூடுதல் பணம் தருவதாக அறிவித்து பா.ஜ.க-வின் திட்டத்திலேயே பீடு நடைப்போட்டன.
இந்துத்துவப் பிரச்சாரமும்
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. முரண்பாடும்
மகாராஷ்டிராவில் 47 சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் அளவிற்கு அடர்த்தியாக வசித்து வருகின்றனர். இம்மக்கள் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தது இத்தொகுதிகளில் பா.ஜ.க-வின் தோல்வியை தீர்மானித்தது. தற்போதைய சட்டமன்றத் தேர்தலின் போது இந்த வாக்குவங்கியின் மீது கல்லெறிய முடிவெடுத்த காவிக் கும்பல், இத்தேர்தலில் அப்பட்டமான இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தில் இறங்கியது.
இத்தொகுதிகளில் உள்ள இஸ்லாமிய மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிப்பதற்காக “வாக்கு ஜிகாத்”-இல் ஈடுபட்டதாகவும், தந்திரமாக வாக்களித்து எதிர்க்கட்சிகளை எட்டு மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற வைத்ததாகவும் அபாண்டமாக பிரச்சாரம் செய்தது. இதனால் இந்துக்களின் வாக்கு பா.ஜ.க-வை நோக்கி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவரும் மகாராஷ்டிரா துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் மேடைகள்தோறும் வெறுப்பை கக்கினார்.
மகாராஷ்டிரத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னணியில் திகழ்ந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்த “படேங்கே தோ கேடேங்கே” (நாம் பிரிக்கப்பட்டால் படுகொலை செய்யப்படுவோம்) என்ற இஸ்லாமிய வெறுப்பு முழக்கத்தை கையிலெடுத்தார். இந்த அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பு முழக்கத்தை மோடி உட்பட பா.ஜ.க-வினர் பலரும் பயன்படுத்தினர். ஆனால், ஒரு கட்டத்தில் இம்முழக்கம் பாசிசக் கும்பலுக்கே நெருக்கடியாக மாறியது. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில், இம்முழக்கங்கள் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதையுணர்ந்த பா.ஜ.க. தலைவர்களும் கூட்டணி கட்சியினரும் பொதுவெளியிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் “ஃபிரண்ட்லைன்” இதழுக்கு அளித்த நேர்காணலில், மகாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம், இதுபோன்ற விசயங்கள் அங்கு வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தார். “இந்தக் கதையை வட இந்தியாவில் இருந்து மகாராஷ்டிராவுக்குக் கொண்டு வரத் தேவையில்லை” என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னாள் பா.ஜ.க. முதல்வரும் தற்போதைய மகாராஷ்டிர சட்டமன்ற மேலவை உறுப்பினருமான பங்கஜா முண்டே, சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த ராஜ்யசபா எம்.பி. அசோக் சவான் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பா.ஜ.க. முகாமிற்குள்ளயே எதிர்ப்பு தீவிரமடைவதை உணர்ந்த பாசிசக் கும்பல் உடனடியாக முழக்கத்தை மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருக்கும்போதே “ஏக் ஹை தோ சேஃப் ஹை” (நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என முழக்கத்தை மாற்றினார், மோடி. மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், தேர்தல் உரைகள் மூலம் புதிய முழக்கத்தைப் பதிய வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்னொருபுறத்தில், ஆர்.எஸ்.எஸ்-இன் கள அணித்திரட்டலும் சத்தமின்றி நடந்துகொண்டிருந்தது. இத்தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் இறக்கிவிடப்பட்டு 65-க்கும் அதிகமான நிழல் அமைப்புகள் மூலம் 70,000 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஷாக்கா கூட்டங்கள், தனிப்பட்ட கலந்துரையாடல், வீடு வீடாக பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் கிராமங்களிலும் நகரங்களிலும் அணித்திரட்டல் நடந்தது. தேர்தல் பணிக்காக செயல்திறனை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் மேம்படுத்தப்பட்டதாகவும் நூறு ஆண்டுகால வரலாற்றில் தேர்தலுக்காக இவ்வளவு அயராது உழைப்பது இதுவே முதன்முறை என்றும் திலீப் தியோதர் என்ற ஆர்.எஸ்.எஸ்-காரர் கருத்து தெரிவித்தார்.
இருப்பினும் ஆர்.எஸ்.எஸ்-இன் இப்பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பலுக்குள்ளான முரண்பாட்டையும் பளிச்சென வெளிக்காட்டியது. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மோடி-அமித்ஷா கும்பல் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஓரங்கட்டிய நிலையில், அத்தேர்தலில் மோடி-அமித்ஷாவால் தனிபெரும்பான்மையைக் கூட பெற முடியாததையடுத்து ஆர்.எஸ்.எஸ்-இன் கை மேலோங்கியது. அதன் தொடர்ச்சியாக மோடியை புறக்கணித்து ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வெற்றியை ஆர்.எஸ்.எஸ். சாத்தியப்படுத்திய நிலையில், இது மோடி அல்லாத பா.ஜ.க-வின் வெற்றி என்றும் ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தேர்தல் என்றும் பிரச்சாரம் செய்தது.
மகாராஷ்டிரா தேர்தலையும் ஆர்.எஸ்.எஸ். வகைப்பட்ட தேர்தலாகவே நடத்த எத்தனித்த ஆர்.எஸ்.எஸ்., அதன் குண்டர்களைக் கொண்டு தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வைத்தது. யோகி ஆதித்யநாத்-தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மோடி – அமித்ஷா தரப்புகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதிலும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்ததிலும் இம்முரண்பாட்டை காண முடிந்தது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், மகாராஷ்டிரா வெற்றிக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ். என்றும் ஜார்க்கண்ட் தோல்விக்கு காரணம் மோடியை முன்னிறுத்தியது என்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பத்திரிகைகளில் எழுதினர். மொத்தத்தில், மோடியின் முகத்தை காட்டுவதன் மூலம் இனியும் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை நாடாளுமன்றத் தேர்தலின்போதே மக்கள் உணர்த்திவிட்ட நிலையில், இனி தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி தேவையில்லை, ஆர்.எஸ்.எஸ்-தான் வெற்றியை பெற்றுதரும் என்ற மனநிலையை பாசிச முகாமிற்குள் உருவாக்க ஆர்.எஸ்.எஸ். தீவிரமாக முயற்சிக்கிறது.
ஆனால், பாசிசக் கும்பலின் இந்த அப்பட்டமான இந்துமுனைவாக்க அணித்திரட்டலுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் மாற்று சித்தாந்தத்தின் அடிப்படையில் மக்களை அணித்திரட்டவில்லை. குறைந்தபட்சம் இஸ்லாமிய மக்களை கூட அணித்திரட்டவோ அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவோ எதிர்க்கட்சிகள் முயலவில்லை. இத்தேர்தலில் மக்களின் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள நிலையில், இஸ்லாமிய மக்களின் வாக்குப்பதிவு பெரியளவில் குறைந்திருப்பது இதனை நிரூபிக்கிறது. சொல்லப்போனால், “தலித், ஓ.பி.சி. மக்களின் இடஒதுக்கீட்டை பறித்து அதனை இஸ்லாமிய மக்களுக்கு கொடுக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது” என பாசிசக் கும்பல் பொய் பிரச்சாரம் செய்ததையடுத்து, அதற்கு பலியாகி தங்களிடம் அப்படியொரு திட்டமில்லை என தன்னிலை விளக்கம் கொடுக்கும் அளவிற்கு எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலையில் இருந்தன.
2023-ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முதலாக எதிர்க்கட்சிகளின் சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரும் பிரச்சாரமானது தேர்தல் களத்தில் பாசிசக் கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தலித் மற்றும் ஓ.பி.சி. மக்களின் வாக்குகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அறுவடையாக காரணமாக இருந்தது. இதனை உணர்ந்துக்கொண்ட பாசிசக் கும்பல் இத்தேர்தலில் அப்பிரச்சாரத்திற்கு வேட்டு வைத்ததோடு, சாதிமுனைவாக்கத்தில் கைத்தேர்ந்தவர்கள் பாசிஸ்டுகளே என்பதை நிரூபித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மகாராஷ்டிராவில் அடிவாங்கியதற்கு மராத்தா மக்கள் போராட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதாவது, தங்களை கும்பி சாதியில் இணைத்து பிற பிற்படுத்தப்பட்ட பிரிவின்கீழ் (Other Backward Classes) இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் போராடிவரும் மராத்தா மக்களின் கோரிக்கைக்கு பா.ஜ.க. செவிசாய்க்காதது அம்மக்களை ஆத்திரமூட்டியது. இது நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலித்த நிலையில் தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மராத்தா மக்களின் போராட்டத்தில் முன்னிலை வகிக்கும் மனோஜ் பாட்டீல் அறிவித்தார்.
இதனையடுத்து, மொத்த மக்கள்தொகையில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ள மராத்தா மக்களுக்கு எதிராக 38 சதவிகிதமாக உள்ள ஓ.பி.சி. மக்களை அணித்திரட்ட பா.ஜ.க. முடிவெடுத்தது. ஏற்கெனவே பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்துவரும் இம்மக்கள், மராத்தா சாதியினருக்கு ஓ.பி.சி. இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்ப்பது பாசிசக் கும்பலுக்கு மேலும் சாதகமாக அமைந்தது.
பல்வேறு ஓ.பி.சி. பிரிவினருடன் பா.ஜ.க. தலைவர்கள் 330-க்கும் அதிகமான சந்திப்புகளை நடத்தினர். கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சி. மக்களின் வருமான வரம்பை ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக அறிவிக்கும்படி ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொள்வதாக மாநில பா.ஜ.க. அரசு அறிவித்தது. மகாராஷ்டிரா மாநிலப் பட்டியலில் ஓ.பி.சி-க்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஏழு சாதியினரை மத்திய ஓ.பி.சி. பட்டியலில் இணைக்குமாறும் ஓ.பி.சி. கமிஷனுக்கு பரிந்துரைத்தது. இதன்மூலம் இச்சாதியினர் ஒன்றிய அரசின் திட்டங்களிலும் நியமனங்களிலும் பயன்பெறுவர் என ஊதிப்பெருக்கி ஓ.பி.சி. மக்களின் வாக்குகளை அறுவடை செய்தது. 1980-களில் மகாராஷ்டிராவில் காலூன்றுவதற்காக ஆர்.எஸ்.எஸ். கையிலெடுத்த மாலி, தங்கர் மற்றும் வஞ்சரி (Mali – Dhangar – Vanjari) பிரிவு ஓ.பி.சி. மக்களை மையப்படுத்தி வேலைசெய்யும் “மாதவ்” (MADHAV) பார்முலாவை இத்தேர்தலில் பயன்படுத்தியது.
மறுபுறம், பாசிசக் கும்பல் சாதிமுனைவாக்கம் செய்து மக்களை பிளவுப்படுத்துவதை முறியடிக்காமல் வேடிக்கை பார்த்த எதிர்க்கட்சிகள், தங்கள் பங்கிற்கு மராத்தா மக்களை மையப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இது வழக்கம்போல எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் பாசிசக் கும்பலுக்கு ஆதரவாகவுமே சென்று முடிந்தது.
மேலும், “நாம் பிரிந்தால் அழிக்கப்படுவோம்” என ஓ.பி.சி. மக்கள் மத்தியில் மதவெறிப் பிரச்சாரம் செய்த காவிக் கும்பல் “மக்களை பிளவுப்படுத்தத்தான் காங்கிரஸ் சாதிவாரிக் கணக்கெடுப்பை கோருகிறது” என்ற வெறுப்பு பிரச்சாரத்தையும் அதனுடன் இணைத்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், “நாங்கள் மக்களை பிளவுப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு” கோரவில்லை என விளக்கமளிக்கத் தொடங்கினார் மல்லிகார்ஜுன கார்கே. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அரசியல்-பொருளாதார முக்கியத்துவத்தை உணர்த்தி அதனை மக்கள் கோரிக்கையாக மாற்றுவதற்கு பதிலாக, ராகுல் காந்தியும் காங்கிரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பை வெறும் தேர்தல் வியூகமாக பயன்படுத்திவந்த நிலையில் பாசிசக் கும்பல் இத்தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதேபோல், “400 இடங்களில் வெற்றிபெற்றால் பா.ஜ.க. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும், இடஒதுக்கீட்டை பறித்துவிடும்” என நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் முன்னெடுத்த பிரச்சாரம் இந்தியா கூட்டணிக்கு தலித் மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தந்தது. இதன்மூலம் தலித் மக்களின் வாக்குவங்கி சரிவதை உணர்ந்துகொண்ட பாசிசக் கும்பல், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தலித் மக்களுக்கு உள்-இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
தேர்தல் முடிவில் பட்டியல் சாதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 29 தொகுதிகளில் 21 தொகுதிகளிலும், பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் பா.ஜ.க-வின் மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றிருப்பது பா.ஜ.க-வின் நரித்தனங்களுக்கு தலித் மக்கள், பழங்குடி மக்கள் பலியாகிருப்பதையே காட்டுகிறது.
தேர்தல் மோசடிகளே காரணம், எதார்த்தத்தைக் காண மறுக்கும் எதிர்க்கட்சிகள்
வழக்கம்போல் இத்தேர்தலிலும் பாசிசக் கும்பல் பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து நவம்பர் 29 அன்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி அளித்த புகாரில் பல்வேறு விசயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடைப்பட்ட ஜூலை 2024 முதல் நவம்பர் 2024 வரையிலான காலத்தில் 47 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; சராசரியாக 50,000 வாக்காளர்கள் அதிகரித்த 50 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
அதேபோல், தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, மகாராஷ்டிரத் தேர்தல் நாளன்று மாலை 5:00 மணியளவில் 58.22 சதவிகிதம் வாக்குப்பதிவாகியிருந்த நிலையில் இரவு 11:30 மணிக்கு 65.02 சதவிகித வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 5:00 மணிக்கு பிறகு 76 லட்சம் மக்கள் வரை வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்குப்பதிவு விகிதம் 66.05 சதவிகிதம் என மீண்டும் உயர்த்தி தெரிவிக்கப்பட்டதன்படி, இந்த எண்ணிக்கையில் மேலும் 10 லட்சம் வாக்காளர்கள் இணைகின்றனர். ஒரு நபர் வாக்களிக்க இரண்டு நிமிடங்கள் என எடுத்துக்கொண்டாலும் 5 மணிக்குப் பிறகு 86 லட்சம் மக்கள் வாக்களிக்க சாத்தியமில்லை.
ஆக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிரா மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பாசிசக் கும்பல், தேர்தல் தில்லுமுல்லுகள், கவர்ச்சிவாத வாக்குறுதிகள், சாதி-மத முனைவாக்கம் மூலம் தற்போது மீண்டும் வெற்றிபெற்று அம்மாநிலத்தில் தனது பாசிசப் பேயாட்சியை தக்கவைத்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்ததற்கான காரணங்களைப் பரிசீலிக்காமல் தேர்தல் மோசடிகள் மட்டும்தான் பா.ஜ.க. வெற்றிபெறக் காரணம் என்பது போல் எதிர்க்கட்சியினரும் இந்தியா கூட்டணி ஆதாரவாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி தங்கள் தோல்விக்கு தேர்தல் மோசடிகள் மட்டும்தான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடந்துசெல்வதும் தொடர்கதையாகி வருகிறது. எதார்த்தத்தைக் காண மறுக்கும் இந்த அகநிலைவாதப் போக்கானது எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்திக்கவே வழிவகுக்கிறது. இங்குதான் எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்கான மாற்றுக்கொள்கையும் உறுதியான மாற்றுத் திட்டமும் இல்லாததன் பலவீனம் வெளிப்படுகிறது.
இத்தேர்தலில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களைப் பெற்றுள்ள நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில் சரத் பவார் தலைமையிலான கட்சி பத்து இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
இதனையடுத்து இத்தேர்தல் முடிவு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்பதை காட்டியுள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். ஊடகங்களும் பல அரசியல் விமர்சகர்களும் இதே கருத்தை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் சொல்லும் பொருண்மையில் இல்லை எனினும் சித்தாந்த அடிப்படையில் பார்க்கையில், ஏக்நாத் ஷிண்டே சொல்வதில் உண்மை இருக்கிறது.
உத்தவ் தாக்கரேவின் தந்தை பால்தாக்கரேவால் 1966-இல் மராத்திய இனவெறி பாசிசக் கட்சியாக தொடங்கப்பட்டதே சிவசேனா. மராத்திய மன்னன் சிவாஜியின் படையாக அறிவித்துக் கொண்ட இக்கட்சி, ‘வந்தேறி’கள் எனக் கூறி குஜராத்தியர்கள் மற்றும் தென்னிந்தியர்கள் மீதும் அவர்களது கடைகள், உணவகங்கள் மீதும் தாக்குதலை நடத்தியது. 1969-இல் மும்பையில் குடியேறிய கர்நாடகத்தவர் மீது கொடியத் தாக்குதல் நடத்தி 59 பேரைக் கொன்று 274 பேரைப் படுகாயப்படுத்தியது. அக்காலத்தில் மும்பையில் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தைக் கண்டு அரசும் பெருமுதலாளிகளும் அஞ்சிய நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் புற்றுநோயைப் போன்றவர்கள், அவர்களை அழிக்கும்வரை போராட்டம் ஓயாது என மதவெறியைத் தூண்டுவது; தாழ்த்தப்பட்ட மக்கள் மீது குண்டர்களை ஏவித் தாக்குவது; காதலர் தினத்தில் காதலர்களைத் தாக்குவது; கலவரங்களை கட்டவிழ்த்து விடுவது என மராட்டிய ஆர்.எஸ்.எஸ். போலத்தான் சிவசேனா செயல்பட்டுவந்தது.
தன்னுடன் சித்தாந்த ஒற்றுமை கொண்ட பா.ஜ.க-வுடன் ஆண்டாண்டு காலமாக கூட்டணி வைத்து ஆட்சி நடத்திய சிவசேனா, 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் பா.ஜ.க. கூட்டணியுடனே சந்தித்தது. அத்தேர்தலில் அக்கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற நிலையில், முதல்வர் பதவிக்கான லாவணியில் உடன்பாடு ஏற்படாததால் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, அதுவரையிலும் கடுமையாக விமர்சித்துவந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது.
இந்நிலையில்தான், பா.ஜ.க. பின்புலத்தில் தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட பிரிவினர், உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா பால்தாக்கரேவின் பாதையிலிருந்து விலகிவிட்டது என்று கூறி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சியை உடைத்துவிட்டு வெளியேறினர். தற்போதுவரை இப்பிரிவு தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றே கூறிவருகிறது. பெரும்பான்மை அடிப்படையிலும் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் அவர்கள் சொல்வது ஒருபுறமிருந்தாலும், சித்தாந்த அடிப்படையில் சிவசேனாவின் வழியை பின்பற்றுபவர்கள் ஷிண்டே பிரிவினரே.
இந்நிலையில், தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சகர்கள் பலரும் உத்தவ் சிவசேனா இனிமேல் நீடிக்குமா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிசக் கும்பலுக்கு மாற்றாக அதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மாற்றுச் சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நீடிக்க முடியாது. இந்த பின்னணியிலிருந்துதான் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும்.
இன்னொருபுறம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை ஒழித்துக்கட்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட ‘கடமை’ நிறைவடைந்துவிட்ட நிலையில், அக்கட்சிகளின் வாழ்வும் நெடுநாட்களுக்கு இல்லை.
ஏனெனில், இத்தேர்தலில் பா.ஜ.க. மட்டும் தனியாக 132 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என்பது மிகவும் முக்கியமானது. மகாராஷ்டிராவில் தனிப்பெரும்பான்மை பெற 145 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.க. மட்டும் 132 தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்பது அம்மாநிலத்தில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வளர்ந்திருப்பதையே காட்டுகிறது.
தனிப்பெரும்பான்மையை பெறுவதற்கு பா.ஜ.க-விற்கு இன்னும் 13 இடங்களே தேவைப்படும் நிலையில், ஆட்சியமைக்க ஏதேனும் ஒரு கட்சியின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு பா.ஜ.க. வந்துள்ளது. அந்தவகையில், பாசிச பா.ஜ.க-விற்கு அடிபணிந்து அதன் தொங்குசதையாக இருப்பதற்கு இக்கட்சிகள் உடன்படும்வரைதான் இக்கட்சிகளையும் பா.ஜ.க. அனுமதிக்கும் என்பதை தனியாக விளக்க வேண்டியதில்லை. மொத்தத்தில், குஜராத்தைப் போல மகாராஷ்டிராவில் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற நிலையை நோக்கி பாசிசக் கும்பல் நகர்ந்துள்ளது.
பாசிச சக்திகளுடன்
சமாதான-சகவாழ்வு சாத்தியமற்றது
‘ஏக் பாரத், பி.ஜே.பி. பாரத்’ (ஒரு இந்தியா, பா.ஜ.க-வின் இந்தியா) என்ற முழக்கத்தின் கீழ் ஒரு கட்சி சர்வாதிகாரம் என்ற இலக்கில் பிற கட்சிகளை பாசிசக் கும்பல் ஒழித்துக்கட்டுவது இந்தியா முழுவதுமே நடந்துக் கொண்டிருக்கிறது. இது காவி-கார்ப்பரேட் ஆகிய இரண்டு அம்சங்களிலும் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்துராஷ்டிரம், அகண்ட பாரதம் என்ற நெடுங்கால இலக்குடன் இந்துத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் பயணித்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பிற இந்துத்துவ, மிதவாத இந்துத்துவ, பிற தாராளவாத சித்தாந்தக் கட்சிகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டுகிறது.
அதேபோல், கட்சிகளை ஒழித்துக்கட்டுவது என்ற பெயரில், அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட்டுகளின் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்காக, மற்ற கார்ப்பரேட்டுகளையும் ஒழித்துக்கட்டுவதே அதன் நோக்கம்.
இத்தேர்தல் சமயத்தில், மகாராஷ்டிராவில் 2019 தேர்தல் முடிவிற்கு பிறகு யார் ஆட்சியமைப்பது என்பது தொடர்பாக அமித்ஷா, தேவேந்திர பட்னாவிஸ், சரத்பவார், அஜித் பவார் ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தை அதானியின் வீட்டில்தான் நடந்தது என்ற அதிர்ச்சிகரமான உண்மையை “தி நியூஸ் மினிட்” யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அஜித் பவாரும் சரத் பவாரும் தெரிவித்தனர். அச்சமயத்தில் ஆட்சியைப் பிடிக்க பாசிசக் கும்பல் பல்வேறு சதித்தனங்களில் ஈடுபட்ட நிலையில், அஜித் பவாரின் நேர்காணலின் மூலம் ஒரு மாநிலத்தில் கட்சிகளை உடைத்து ஆட்சியை கலைக்கும் சதித்தனத்தில் கார்ப்பரேட் முதலாளியான அதானி நேரடியாக ஈடுபட்டிருப்பது அம்பலமானது.
எனவே, ஆர்.எஸ்.எஸ். கும்பலுடனான கள்ளக்கூட்டு, அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுடனான ரகசிய உறவு போன்றவற்றை பின்பற்றிக்கொண்டே, அதாவது பாசிசக் கும்பலுடன் சமாதான சக வாழ்வு வாழ்ந்துகொண்டே பாசிச எதிர்ப்பு என்பது எதார்த்தத்திற்கு புறம்பானது. உண்மையில் இவ்வாறு பக்கவாட்டில் எதிர்ப்பது அக்கட்சிகளின் பிளவுகளுக்கே வழிவகுக்கும் என்பதையே அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்துத்துவத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் மராட்டிய வெர்ஷனாக இருந்த சிவசேனாவிற்கும் அதானியுடன் நெருக்கமான உறவை கடைபிடித்துவரும் சரத் பவாருக்குமே இந்த நிலை என்றால் இந்தியாவின் பிற கட்சிகளின் நிலையை விளக்க வேண்டியதில்லை.
எனவே, பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் மற்றும் மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்களுடன் இணைந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி. அவ்வாறு முன்வைக்காமல் பாசிசக் கும்பலை வீழ்த்துவது மட்டுமல்ல, குறைந்தபட்சம் தங்களது கட்சியை தக்கவைப்பது கூட சாத்தியமற்றது என்பதையே மகாராஷ்டிரா தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
துலிபா
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram