மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!

பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!

காராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் பார்சு கிராமத்தில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

ரத்தினகிரி மாவட்டத்தின் நானாரில் பெட்ரோ- கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த 2015-ஆம் ஆண்டு தேவேந்திர பட்நாவிஸ் அரசு முடிவு செய்தது. இதனால் கடுமையான சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படும் என்பதனால் மக்கள் போராட்டம் நடத்தியதாலும் எதிர் கட்சிகளின் தற்காலிக எதிர்ப்பினாலும் திட்டம் கைவிடப்பட்டது.

அதன்பின் உத்தவ் தாக்கரே அரசாங்கம் நானார் பகுதிக்கு மாற்றாக பார்சுவை திட்டத்திற்கான மாற்று இடமாக அறிவித்தது. அந்த வகையில் தற்போது பார்சு பகுதியில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு ஷிண்டே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பல கார்ப்பரேட் ஆதரவு சட்டங்கள், குறிப்பாக பாரத்மாலா, சாகர்மாலா மற்றும் தேசிய பணமயமாக்கல் திட்டம் போன்றவற்றின் அடிப்படையில் இந்தியா முழுவதும் நிலக்கரி சுரங்கங்கள், பெட்ரோ- கெமிக்கல் மண்டலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற பல்வேறு கார்ப்பரேட் நல திட்டங்கள் தொடர்ச்சியாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப மாநில அரசாங்கங்களும் இத்திட்டங்களை மெல்ல அமல்படுத்துகின்றன.


படிக்க: ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !


அதற்கு எதிராக மக்கள் போராடினாலும் அதை கீஞ்சித்தும் கண்டுகொள்ளாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க சங்க பரிவார கும்பல் தங்களுடைய எஜமானர்களின் நலனுக்காக கார்ப்பரேட் நல திட்டங்களை கொஞ்சமும் பின் வாங்காமல் மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் பார்சு கிராமத்தில் பெட்ரோ-கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக மண் ஆய்வு செய்வதற்கு குழு ஒன்று வருவதை அறிந்த அப்பகுதி கிராம மக்கள், அவர்கள் வரும் சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டு “ஒருபோதும் இம்மாதிரியான நாசகார திட்டங்களை எங்கள் மண்ணில் அமல்படுத்த விடமாட்டோம்” என்று முழங்கினர்.

“தொடர்ச்சியாக இப்பகுதியில் இது போன்ற திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் கடல்வளம் பாதிக்கப்படுவதோடு பல்லுயிர் பெருக்கமும் அழிந்துபோய், நாங்கள் வாழ முடியாத நிலை உருவாகும். உள்ளூர் வாழ்வாதாரமான சிறு சிறு வேலைகளை கொண்டு பிழைத்து வரும் எங்களை இங்கிருந்து விரட்டியடிப்பதன் மூலம் தற்கொலைக்கு தள்ளுகிறது இந்த அரசு” என்று தங்களுடைய கோபங்களை வெளிப்படுத்தினர்.

ஆய்வுக்குழு உட்பட யாரையும் கிராம பகுதிக்குள் அனுமதிக்காது கொளுத்தும் வெயிலில் மண் சாலையில் குறுக்கே படுத்துகொண்டு நடத்திய உறுதிமிக்க போராட்டம் அரசு அதிகாரிகளை அச்சப்படுத்தியது. உடனே ஒடுக்குவதற்கு முதல் ஆளாக ஓடி வரும் போலிஸ்படை போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்தது. 30 பெண்கள் சிறுகுழந்தைகள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு ரத்தினகிரி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லபட்டனர்.

இப்படி ஆயிரக்கணக்கான கிராம மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து இயற்கையை நாசாமாக்கி அமைக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு நிலையம் யாருக்கானது என்ற கேள்வி நமக்குள் எழலாம். வழக்கம் போல் இதுவும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகானதும் அதற்கு தரகு வேலை செய்து பொறுக்கி தின்னும் அதானிக்கானதும் தான்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய மூன்று தேசிய எண்ணெய் நிறுனங்களின் கூட்டமைப்பில் உருவாக்கப்பட்டது ரத்தினகிரி சுத்திகரிப்பு பெட்ரோல் கெமிக்கல்ஸ் லிமிடெட்(RRPCL). இந்த கூட்டமைப்புதான் மகாராஷ்டிராவின் மேற்குக் கடற்கரையில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை செயல்படுத்த திட்டம் வகுத்து செயல்படுகிறது.

இந்தியாவின் எரிபொருள்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சவுதி அராம்கோ (SA) மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) ஆகிய இரண்டு உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும் பங்குதாரர்களாக இணைய தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. இவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதற்கு தயாராகியுள்ள அதானி நிறுவனம் பன்னாட்டு முதலாளிகளுடன் பங்குதாரர்களாக இணைய தயாராகின்றது.


படிக்க: மகாராஷ்டிரா: தலைவிரித்தாடும் காவி பாசிசம்!


இப்படி பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பை குறைந்த விலைக்கு சுரண்டி முதலாளிகள் கொழுப்பதற்கு இதுபோன்ற திட்டங்கள் உதவுமே அன்றி நமக்கும் நாட்டிற்கும் ஒரு போதும் பயன் தராது.

இதை அறிந்தே தான் அரசு அதிகாரிகளும் அரசியல் தலைவர்களும் திட்டமிட்டு கார்ப்பரேட் சேவைகளை செய்துவருகின்றனர். அதை தமிழ்நாட்டின் பரந்தூர் விமான நிலையம் முதல் பார்சு பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் வரை கண்டு வருகிறோம்.

இத்திட்டத்திற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் ரத்தினகிரி மக்கள் அதை கடுமையாக எதிர்த்துள்ளனர். எண்ணெய் ஏகபோகங்களுக்கு எதிரான இந்தப் போராட்டம் அப்பகுதி மக்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. எனவே, ரத்தினகிரியில் போராடும் மக்களுக்கு நாம் அனைவரும் தோள் கொடுக்க வேண்டும்.

டேவிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க