மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்துத்துவ கும்பல்களால் 50 பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. இப்பேரணிகள் அனைத்திற்கும் பொதுவானது என்னவென்றால் “லவ் ஜிஹாத், நில ஜிஹாத், கட்டாய மதமாற்றம், முஸ்லீம்களை பொருளாதார ரீதியாக புறக்கணிப்பது” என்ற இஸ்லாமிய வெறுப்பு தான்.
கடந்த மார்ச் 12 அன்று, மும்பையின் மிரா சாலையில் (Mira Road) ஒரு பெரும் மக்கள் கூட்டம் காவித் தொப்பிகள் அணிந்தும் கைகளில் காவிக் கொடிகளை ஏந்தியும் அணிவகுத்துச் சென்றது. அங்கு இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் உரைகள் பேசப்பட்டன.
பேரணியில் உரையாற்றிய பேச்சாளர்களில் ஒருவர் காஜல் ஹிந்துஸ்தானி. அவருக்கு புளூ டிக் ட்விட்டர் கணக்கு மற்றும் 95.4 ஆயிரம் ஃபாலோவர்ஸ் உள்ளனர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும் அடக்கம். அவர் பேசுகையில் “இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன – லவ் ஜிஹாத், நில ஜிகாத் மற்றும் மதமாற்றம். இந்த மூன்று குடைச்சல்களுக்கும் ராமர் வழங்கிய தீர்வு உள்ளது. அதை அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்றம் மற்றும் ஊடகங்களால் கூட தடுக்க இயலாது. அந்தத் தீர்வுதான் பொருளாதாரப் புறக்கணிப்பு” என்று உரையாற்றினார்.
மேலும், “முஸ்லீம் விற்பனையாளர்கள் நஞ்சு கலந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்கிறார்கள். இந்த ஜிகாதி விற்பனையாளர்களை புறக்கணித்து, கூடுதல் செலவு செய்து இந்து விற்பனையாளர்களிடம் வாங்குங்கள். நீங்கள் செலவு செய்யும் பணம் ஒரு இந்துவின் வீட்டிற்குச் செல்லட்டும்” என்று பேசினார்.
“மிரா ரோட்டில் அமைந்துள்ள நயா நகர் (Naya Nagar) பகுதி ஜிஹாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காரணத்தால் அங்கு இந்துக்கள் தஞ்சம் அடையக்கூட இடமில்லை” என்றும் ஹிந்துஸ்தானி கூறினார்.
படிக்க: ‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!
மார்ச் 12 அன்று நடந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த மிராவின் சுயேச்சை எம்.எல்.ஏ கீதா ஜெயின், “மிரா – பயாந்தர் (Mira – Bhayander) புறநகர்ப் பகுதியானது முஸ்லீம்கள் பெரும்பான்மை கொண்ட பகுதியாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, மிரா – பயந்தரில் வசிப்பவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழில் அவரது குடியிருப்பின் பெயர் ‘வங்காளதேச ஜோபாட்பட்டி’ (Bangladesh Zopadpatti) என்று இருந்தது; மற்றொருவரின் மின்சாரக் கட்டண ரசீதில் ‘சோட்டா பாகிஸ்தான்’ (Chhota Pakistan) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை தற்செயல் நிகழ்வுகள் அல்ல” என்று உள்நோக்கம் கற்பித்துப் பேசினார்.
இந்தப் பேரணியில் விஷ்வ ஹிந்து பரிஷத் – பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மற்றும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நித்தேஷ் ரானே ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நவம்பர் 20, 2022 தொடங்கி, மகாராஷ்டிரா முழுவதும் கிட்டத்தட்ட 36 மாவட்டங்களில் குறைந்தது 50 “இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா” (Hindu Jan Aakrosh Morcha) பேரணிகள் நடைபெற்றுள்ளன. தில்லியில் ஷ்ரத்தா வாக்கர் 35 துண்டுகளாக அவரது கூட்டாளி ஆப்தாப் பூனாவாலா-வால் வெட்டப்பட்ட சம்பவம் அனைவரையும் பதபதைக்க வைத்தது. அச்சம்பவத்தை பின்னணியாக வைத்து முதல் பேரணி பர்பானி (Parbhani) மாவட்டத்தில் நடத்தப்பட்டது. லவ் ஜிகாத்தின் ஆபத்துகள் குறித்து இந்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தப்படுவதாக இந்து மதவெறியர்கள் தெரிவித்தனர்.
இந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சாவின் பதாகையின் கீழ் இந்துத்துவா அமைப்புகளின் கூட்டமைப்பான சாகல் ஹிந்து சமாஜால் (Sakal Hindu Samaj) இப்பேரணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. “இந்த பேரணிகளின் நோக்கம், பசுவதை, லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இந்தச் சட்டங்களை நாடு முழுவதும் அமுல்படுத்தினால் மட்டுமே இந்தப் பேரணிகளை நிறுத்துவோம்” என்று ஏற்பாட்டாளர்களான காவி குண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
“நான் ஒரு இந்து என்பதால் நானும் ஆபத்தில் இருக்கிறேன். பச்சை நிற ஆடைகள் அணிவதற்கு என் கணவர் தடை விதித்துள்ளார். அது ஒரு முஸ்லீம் நிறம்” என்கிறார் பேரணியில் கலந்து கொண்ட இந்துத்துவ சித்தாந்தம் பற்றி அறிந்திராத பெண்மணி ஒருவர்.
இந்துத்துவ சித்தாந்தத்தை அறிந்திராதவர்கள்கூட காவிகளின் பின்னால் அணிதிரள்கிறார்கள் என்பதுதான் பேராபத்து. “வலதுசாரி பேரணிகளில் பெண்கள் அதிக அளவில் கலந்துகொள்வது ஒரு புதிய போக்கு” என்று வி.எச்.பி (மகாராஷ்டிரா பிரிவு) பொதுச் செயலாளர் சங்கர் கைகர் ‘பெருமித’ப்பட்டுக்கொள்கிறார். “லவ் ஜிஹாத் தாக்குதலுக்கு தாங்களும் ஆளாக நேரிடும் என அஞ்சுவதால்தான் பெண்கள் பேரணிகளில் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேபோல, பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 4,000 பேர் கலந்து கொண்ட ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி ஒன்று கடந்த பிப்ரவரி 26 அன்று வாஷி (Vashi) மற்றும் நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்றது. கடந்த ஜனவரியில், தாதரில் உள்ள சிவாஜி பூங்காவில் இருந்து பிரபாதேவியில் உள்ள கம்கர் மைதானத்திற்கு அணிவகுத்து சென்ற பேரணியில் ஏறக்குறைய 10,000 பேர் கலந்துகொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
அரசின் துணையோடு காவி குண்டர்களால் நடத்தப்படும் இந்த மதவெறி பேரணிகள் நீதிமன்றங்களின் கண்களுக்கு தெரிவதில்லை. முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களை சுட்டிக்காட்டி பேரணிகளுக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஒருபுறம், மகாராஷ்டிரா மாநிலத்தின் ஏக்நாத் ஷிண்டே அரசால் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; கைதுகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மற்றொருபுறம், மார்ச் 9 அன்று அவுரங்காபாத் (Aurangabad) நகரின் பெயரை சத்ரபதி சாம்பாஜி நகர் (Chhatrapati Sambhaji Nagar) என மாற்றுவதற்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் 1,500 பேர் கலந்துகொண்டனர். அதில் பலர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
லவ் ஜிஹாத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்ற மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக துணை முதல்வர் ஃபட்னாவிஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், போலீசுத்துறைக்கு லவ் ஜிஹாத் குறித்து விழிப்புணர்வு ஊட்டுமாறு போலீசு தலைமை இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 2022 இல் இந்துமதவெறி சிவசேனாவை உடைத்து வெளியேறி பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததிலிருந்து மகாராஷ்டிராவில் காவிகளின் அச்சுறுத்தல் பெருமளவு அதிகரித்துள்ளது. உத்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத்தைப் போல, ‘இந்து ராஷ்டிர’த்தின் ஒரு மாதிரியாக உருவெடுத்து வருகிறது.
பொம்மி