‘கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்’ – வெறுப்பு விஷத்தை கக்கும் காவி குண்டர்கள்!

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

பிப்ரவரி 5 ஆம் தேதியன்று டெல்லி ஜந்தர்மந்திரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்துத்துவ (காவி) அமைப்புகள், சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய வெறுப்பு பேச்சுக்கள் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் என்கிற கோவிலுடன் தொடர்புடைய திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி என்னும் சாமியாருக்கு ஆதரவாக டில்லியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காவி உடையணிந்த ஒருவர், “இந்தியாவை பிரிட்டிஷும், காங்கிரசும் பிரித்து ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். கிருத்துவர்களும் அப்படியே ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். ஆனால் முஸ்லிம்கள் மட்டும் கொன்றுவிட்டு ஆட்சி செய்யுங்கள் என்றார்கள். இந்துக்களாகிய நீங்கள் எப்போது கொல்வீர்கள்? நீங்கள் இறந்த பிறகா கொல்வீர்கள்? கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் எப்போது கொல்வீர்கள்?” என்று இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கியுள்ளார்.

இந்துக்கள் தங்களது வீடுகளில் துப்பாக்கி, வாள் போன்ற ஆயுதங்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கையில் ஆயுதங்களையும் மற்றொரு கையில் மத நூலையும் வைத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த காவி சாமியார்.

படிக்க : மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இந்துக்களுக்கு எதிராக வேதங்களையும், தாய்மார்களையும், சகோதரிகளையும் தாக்குபவர்களை  தேசத்துரோக குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று கூறிய அவர், “இந்துக்களுக்கு எதிராக செயல்படும் நபர்களை எல்லையில் சுட்டுக் கொல்லுங்கள், சாலைகளில் கொல்லுங்கள்” என்று துளியும் அச்சமின்றி இஸ்லாமியர்களை கொன்று குவிக்க நேரடியாக அழைப்பு விடுத்தார்.

காவி குண்டர்களை தட்டி கேட்பவர்களே இங்கு குற்றவாளிகள்!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த மற்றொரு கூட்டத்தில் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சவாங்கே மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் வன்முறை வெடிக்கும் என்று ஹரியானாவில் உள்ள பாஜகவின் தலைமை ஊடக ஒருங்கிணைப்பாளரும், கர்னி சேனாவின் தலைவருமான சூரஜ் பால் அமு பேசினார்.

தீவிர வலதுசாரி கூட்டங்களை ஏற்பாடு செய்து அதில் கலந்துக்கொண்டு வன்முறையை தூண்டும் வகையில் பேசக்கூடியவர் சுதர்சன் செய்தி ஆசிரியர் சுரேஷ் சாவாங்கே என்பவர். இவர் இந்தியாவை இந்துராஷ்டிரமாக மாற்ற நாம் எல்லோரும் தியாகம் செய்ய வேண்டும் என 2021-ல் கூறினார்.

சுரேஷ் சாவாங்கே பற்றி சூரஜ் பால் அமு பேசுகையில், “சுரேஷ் சாவாங்கேவை யாராவது தொட்டால், நாங்கள் அவர்களை அனுமதிப்போமா? இந்துராஷ்டிரத்தை உருவாக்க விடாமல் யாராவது எங்களைத் தடுத்தால் அவரைக் காப்பாற்றுவீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். இந்த இரண்டு கேள்விகளுக்கும் “இல்லை” என்று அங்கிருந்த காவிக்குண்டர்கள் ஆக்ரோசமாக கத்தி கூச்சலிட்டனர்.

இந்நிகழ்வில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி “மோல்டிக்ஸ்” என்ற செய்தி நிறுவனம் டெல்லி போலீசிடம் புகாராளித்தது. ஆனால், வெறுப்பு பேச்சுக்களை பேசிய காவிக் குண்டர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாராளித்த செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது போலீசு.

குற்றவியல் நடைமுறை சட்டம் 149-வது பிரிவின் அடிப்படையில் வன்முறையை தூண்டும் வகையில் செய்தியை வெளியிட்டதாகவும், பதிவுகளை எழுதுவதை நிறுத்த வேண்டும் என்றும் பதிவுகள் எழுதுவதை நிறுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படிக்க : ’முஸ்லீம்களை கொளுத்த வேண்டும்’- வெறுப்பு விஷத்தை கக்கும் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் !

போலீசு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் விதமாக மோல்டிக்ஸ் நிறுவனர் அனுதீப் ஜக்லன் தனது ட்விட்டரில் “நான் இன்னும் குழப்பத்தில் இருக்கிறேன். எதற்காக எங்களுக்கு போலீசுத்துறை இதை அனுப்பி இருக்கிறார்கள்? காவி உடையணிந்த குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் சென்றிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு விஷத்தை கக்கும் வகையில் காவிக் குண்டர்களை பேச அனுமதிக்கும் போலீசு, வெறுப்பு பேச்சுக்கு எதிராக புகாராளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இந்நிகழ்வு ஒட்டுமொத்த அரசுத்துறையும் காவிமயமாகி வருவதையே மீண்டும் நமக்கு உணர்த்துகிறது.

வன்முறையை தூண்டுபவன் நிராபராதி. அதற்கு எதிராக புகார் அளிப்பவன் குற்றவாளி. இதுதான் இன்றைய இந்தியாவின் (மனு)நீதி!

ரோகித் வெமுலா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க