மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.

0

வம்பர் 25 ஆம் தேதி அன்று, கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது முஸ்லிம் மாணவர் ஒருவரை ‘பயங்கரவாதி’ என்று பொருள்படும்படி பேசி உள்ளார்.

வகுப்பு எடுத்துக்கொண்டிருந்த பேராசிரியர் அம்மாணவரிடம் பெயரை விசாரித்து விட்டு, “ஓ.. நீ கசாப்-ஐ போன்றவன்” என்று கூறியுள்ளார். 166 பேர் கொல்லப்பட காரணமாக அமைந்த, நவம்பர் 26, 2008 அன்று மும்பையில் நடந்த, பயங்கரவாத தாக்குதலுக்காக கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டவர் அஜ்மல் கசாப் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியரின் கூற்றை கேள்வி எழுப்பிய மாணவரிடம் தான் விளையாட்டாகப் பேசியதாக அவர் தெரிவித்தார். அதற்கு அம்மாணவர் “26/11 (மும்பை தாக்குதல்) என்பது விளையாட்டல்ல; இந்த நாட்டில் முஸ்லிமாக இருப்பது விளையாட்டு அல்ல; தினமும் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வது விளையாட்டல்ல” என்று கூறினார்.


படிக்க: தேர்வை புறக்கணித்த கர்நாடக மாணவர்கள் : நடுநிலை என்பது காவிக்கு துணைபுரியவே உதவும் !


மேலும், “இப்படி இழிவான முறையில் எனது மதத்தை கேலி செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றும் அம்மாணவர் கூறினார். அதற்கு மன்னிப்பு கேட்ட அப்பேராசிரியர் “நீ எனது மகனைப் போன்றவன்” என்று கூறினார்.

அதற்கு அந்த மாணவர், “உங்கள் மகனிடம் இப்படித்தான் பேசுவீர்களா? உங்கள் மகனை பயங்கரவாதி என்று அழைப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். பேராசிரியர் அதற்கு “மாட்டேன்” என்று கூறினார்.

மேலும், “இத்தனை பேர் முன்பு எப்படி உங்களால் அப்படி அழைக்க முடிந்தது? ஒரு ‘மன்னிப்பு’ நீங்கள் உங்களை எப்படி முன்னிறுத்துகிறீர்கள் என்பதை மாற்றி விடாது. என் தந்தையே இப்படி கூறியிருந்தாலும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பாக குழு அமைத்து விசாரிப்பதாகவும், விசாரணை முடியும் வரை அந்தப் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளது. இதில் அபாயகரமான விசயம் என்னவென்றால், வகுப்பறையில் இந்த சம்பவம் நடைபெற்ற போது மற்ற மாணவர்கள் யாரும் அந்த இஸ்லாமிய மாணவருக்காக குரல் கொடுக்கவில்லை; வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள். ஒருவர் அந்த இஸ்லாமிய மாணவரை சமாதானப்படுத்த முயன்றார்.


படிக்க: கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!


இப்பிரச்சினை குறித்துக் கருத்து கூறிய கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ், “‘ராவணன்’ ‘சகுனி’ போன்ற வார்த்தைகள் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. ஏன் சட்டப்பேரவையில் கூட பலமுறை பேசப்பட்டிருக்கிறது. அது பிரச்சினை ஆகாதபோது ‘கசாப்’ என்று கூறுவது மட்டும் ஏன் பிரச்சினையாகிறது? பேராசிரியர் அந்த கருத்தை கூறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அது தற்போது வாக்கு வங்கிக்காக அரசியலாக்கப்படுகிறது” என்று ஒரு தத்துவார்த்த விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதுவும் தென்னிந்தியாவில் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக விளங்கும் கர்நாடகாவில் இஸ்லாமிய வெறுப்பு அதிவேகமாக பரப்பப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இப்பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு என்பதை நாம் பார்க்க வேண்டி உள்ளது.

பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க