ர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் மார்ச் 28 அன்று 20,000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்ற செய்தியை சன் நியூஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
மேலும், செய்முறை தேர்வுகளை புறக்கணித்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்று கர்நாடக கல்வித்துறை (Department for Pre University Education) தெரிவித்துள்ளது. அவர்கள் மற்றவர்களைப் போல Supplementary தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் தங்களை “நடுநிலையாளர்கள்” என்று பொதுவில் முன்னிறுத்திக் கொள்ளும் நபர்கள் சிலர், “ஹிஜாப் விவகாரத்திற்காக மாணவர்கள் தேர்வு எழுதாமல் தங்கள் படிப்பை பாழ்படுத்திக் கொள்ள வேண்டாம்” என்று அறிவுரை முத்துக்களை உதிர்த்துள்ளார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் “நடுநிலை” ஊடகவியலாளர் திரு.நெல்சன் சேவியர், “இந்திய இஸ்லாமியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது, தாலியை கழற்றி வைத்துவிட்டு வந்து நீட் தேர்வு எழுதிய மண் இது. எல்லாவற்றையும்விட நம் பிள்ளைகளின் கல்வியும் எதிர்காலமும் முக்கியம்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் தங்கள் உரிமை என்று “பிடிவாதம்” பிடிப்பதன் மூலம் தங்கள் கல்வியையும் எதிர்காலத்தையும் சீரழித்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படும்படி இருக்கிறது அவரது கருத்து.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் விவகாரம் : மோடி அரசை கண்டிக்கும் சர்வதேச நாடுகள் !
இதை சற்று உற்றுப்பார்த்தால் இன்னொரு அர்த்தமும் இந்த கூற்றில் வெளிப்படுவதை கவனிக்க முடியும்‌. அதாவது, “ஒரு இந்து பெண் கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து தாலியை கழற்றிவிட்டு தேர்வு எழுதுகிறார். ஆனால், இஸ்லாமியர்களுக்கு கல்வியின் மகத்துவம் உணர்ந்து ஹிஜாபை விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை” என்று பொருள்படும் அர்த்தமும் உள்ளது.
ஆனால், திரு.நெல்சன் சேவியருக்கு நாம் ஒன்றை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். நீட் தேர்வின்போது தாலியை மட்டுமல்ல, கம்மல், மூக்குத்தி உட்பட மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்ன கொடுமைகளும் நடந்தேறியது. ஆனால், பூநூலுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. இதைத்தான் நாம் பார்ப்பன பாசிசம் என்கிறோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் குற்றம் சொல்வதன்மூலம் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்லவருவது ஒன்றுதான், “இன்று தேர்வெழுதுங்கள் நாளை போராடிக் கொள்ளலாம்” என்பதுதான்.
இதன்மூலம் ஹிஜாப் அணியும் உரிமையா? அல்லது கல்வியா? என்ற கேள்வியை இஸ்லாமிய மாணவர்கள் முன்னால் எழுப்பி, பிரச்சினையை திசை திருப்பும் போக்கை இந்த “நடுநிலையாளர்கள்” அறிந்தோ அறியாமலோ செய்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, நாம் ஆணித்தரமாக அறிவிக்க வேண்டியது என்னவென்றால், “பிரச்சினை ஹிஜாப் அணியும் உரிமையா அல்லது கல்வியா? என்பதல்ல. மாறாக பிரச்சினையின்  உண்மையான அம்சம் என்பது காவி – காரப்பரேட் பாசிஸ்டுகள் ஆட்சி செய்யும் இன்றைய இந்தியாவில் இஸ்லாமியர்களின் உரிமைகள் வெட்டி சுருக்கப்படுகிறது.
இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த காவி –  கார்ப்பரேட் பாசிச ஆட்சியில் இஸ்லாமியர்கள் எப்படி இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்”.
இந்துத்துவத்தின் நிகழ்ச்சிநிரலில் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகள் எந்த அளவு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.விற்கு பயன்படும் வகையில் கர்நாடகாவில் மத துருவமுனைவாக்கம் (Religious Polarization) செய்ய இஸ்லாமியர்களின் மீதான வன்முறைகள் எந்தளவுக்கு திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பது விளங்கிவிடும்.
அதற்கு இந்த ஹிஜாப் விவகாரம் பற்றியும் கர்நாடகா மாநிலத்தில் தற்போது வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகள் பற்றியும் சுருக்கமாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
000
பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் முதல்வராக பாஜக அறிவித்த சில மாதங்களிலே கர்நாடகாவின் பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள், சாலையோரங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் மோடியின் புகைப்படமும் இடம்பெற ஆரம்பித்தன. கூடவே, “புதிய பாரதத்திற்கான புதிய கர்நாடகம்” என்ற வாசகமும் இடம்பெற ஆரம்பித்தது.
இந்த வாசகம் விளக்குவது என்னவென்றால், பாஜகவின் இந்து தேசியவெறிக்காக கர்நாடகா மாநிலத்தின் சுயாட்சி காவு கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான்.
இது 1970-களில் கர்நாடகாவில் கொண்டுவரப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், பிறப்படுத்தப்பட்ட சாதிகளின் கூட்டணி, அதனால் நிலமுடைய ஆதிக்க சாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது போன்ற ஒப்பீட்டளவிலான முற்போக்கு அரசியல் பாதையிலிருந்து முறித்துக்கொண்டு கர்நாடகா இந்துத்துவ அரசியலுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்திருப்பதை எடுத்து காட்டுகிறது. இந்த இந்துத்துவ அரசியல் மிக வேகமாக நடைமுறையில் செயலுக்கு கொண்டுவரபடுவதையும் நாம் கவனிக்க தவறக் கூடாது.
2020-ம் ஆண்டு கர்நாடகாவில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ஒரு சமூகத்தின் பிழைப்பாதாரமாக இருக்கும் தொழிலை இது “குற்றமயம்” (Criminalize) ஆக்குகிறது. இது இஸ்லாமியர்களையும், தலித்துகளையும் ஒடுக்க போலீசுத்துறைக்கும், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கும் காவிக் குண்டர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
“மதச் சுதந்திரத்திற்கான உரிமைப் பாதுகாப்பு சட்டம்” என்ற சட்டத்தை கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றியதன்மூலம்  குடிமக்களின் மதம் மாறுவதற்கான அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. இது கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் மதமாற்றத்தை தொழிலாக செய்கிறார்கள் என்ற பொய்ப் பிரச்சாரத்தின் விளைவாக வந்த சட்டம்.
படிக்க :
கர்நாடகா : மாணவர்கள் ஹிஜாப் அணிவதை அரசியலாக்கும் காவி அரசு!
கர்நாடகா : கல்லூரியில் ஹிஜாப் அணியவும், உருது மொழி பேசவும் தடை !
கர்நாடக அரசு மேலும் ஒருபடி மேலே போய் சட்டத்தை மீறுவதற்காகவே தனிச் சட்டத்தை இயற்றுகிறது. பொது இடங்களில் இருக்கும் மதச் சின்னங்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கும் விதமாக, அந்த மதச் சின்னங்கள் இடிக்கப்படுவதில் இருந்து அதைப் பாதுகாக்கும் விதமாக சட்டம் இயற்றியுள்ளது.
ஒருபக்கம், சமூக ஊடகங்களில் பாஜக விமர்சிக்கப்படுவதை கூட சகித்துக் கொள்ள முடியாமல், விமர்சகர்களை ஆள்தூக்கி ஊபா சட்டத்தில் கைது செய்வது, மற்றொரு பக்கம் கர்நாடகாவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மீதிருக்கும் குற்றவியல் வழக்குகளை வாபஸ் வாங்குவது என சட்டத்தை இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறது கர்நாடக அரசு.
கர்நாடகாவில் பாஜக அரசு ஊழலுக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறது. சமீபத்தில் ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், பொது கட்டமைப்புக்கான டென்டரில் 40% லஞ்சமாக கேட்கப்படுவதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்த லஞ்ச ஊழல் பணம் எல்லாம் பாஜகவின் மத்திய மைய அதிகாரத்திற்குதான் போய் சேரும் என்று இந்த “அப்பாவிகளுக்கு” தெரியாதுபோலும். எல்லா அரசாங்கப் பதவிகளும் வேலைகளும் பணத்திற்கான விற்பனை சரக்காக மாற்றும் அளவுக்கு லஞ்ச ஊழல் மலிந்திருக்கிறது.
நிலச் சீர்திருத்த சட்டம் 2020-ன் மூலம் நிலத்தின்‌ மீதான ஊக வியாபாரத்தை பன்மடங்கு பொருக்கி புதிய பணக்காரர்கள் உருவாவதற்கு வழியை திறந்துவிட்டுள்ளது. இந்த புதிய பணக்காரர்கள்தான் கர்நாடகா தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தேர்தலை தாமதப்படுத்துவதன் மூலம் உள்ளாட்சி சனநாயகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டார்கள். கல்வி மருத்துவம் என எல்லாத் துறைகளையும் தீவிரமாக தனியார்மயப் படுத்துகிறார்கள்‌. புதிய கல்விக் கொள்கையை எவ்வித ஆட்சேபனையும் இல்லாமல் அமல்படுத்துவதன் மூலம் கல்வியை காவிமயமாக்கி வருகிறார்கள்.
கீழ்மட்ட அளவில் வன்முறை கும்பலை வளர்த்துவிட்டு அந்த கும்பலை சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது, சிறுபான்மையினரின் வியாபாரத்தைப் புறக்கணிக்க சொல்லி பிரச்சாரம் செய்வது, மேலும் இந்த கும்பலை போலீசுத்துறை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாமல் இருப்பது போன்ற போக்குகள் மாநில முழுவதும் தற்போது பரவி வருகிறது.
பள்ளி சத்துணவில் முட்டை போடுவது பற்றி கூட மதத் தலைவர்கள் முடிவெடுப்பது என மதவாதத்தின் வேர் ஆழமாக துளையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மதவாத நடவடிக்கைகளை எல்லாம் தடுக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக இந்துராஷ்ட்ரத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் அரசியல் கலாச்சார வெளி இப்படி இந்துத்துவத்தின் பிடியில் பலமாக சிக்கியுள்ளது. தென்னிந்தியாவில் இந்துத்துவத்தின் சோதனை சாலையாக கர்நாடக மாநிலம் மாற்றப்பட்டு வருகிறது என்பதற்கான எல்லா ஆதாரங்களும் மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் ஹிஜாப் விவகாரத்தை கர்நாடக அரசும் இந்துத்துவ சக்திகளும் மற்றொரு மத துருவமுனைவாக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டு ஆதாயமடையப் பார்க்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து “ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை” என்று மனு தாக்கல் செய்தனர்.
இதை தொடர்ந்து இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து ஹிஜாப் அணிந்த பெண்களை ‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி வற்புறுத்திய காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மார்ச் மாதம் 15-ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடையை நிலைநிறுத்தியது.
இதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு தாங்கள் புரிந்து கொண்டபடி தங்கள் மத நம்பிக்கையை பின்பற்ற உரிமை இல்லை என்பது மட்டுமல்ல, தங்கள் மதத்தின் அத்தியாவசிய நடைமுறை எது என்று தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்ற பொருளில்தான் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நாம் வாசிக்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வழக்கு மேல்முறையீட்டு மனுவை  அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
ஒரு சிறுபான்மை மதச் சமூகத்தினரின் உரிமையை வெட்டி குறுக்குவதில் இந்த நாட்டின் எல்லா அரசமைப்பு நிறுவனங்களும் ஒத்திசைவாக செயல்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் இப்போது எந்தவித அமைப்பு துணையும் இல்லாமல் நிராதரவாக நிற்கிறார்கள். அவர்கள் இந்த நிறுவனங்கள்மீது நம்பிக்கை வைக்க எந்த நியாயமும் பிடிபடவில்லை. அதனால்தான் தேர்வைப் புறக்கணித்து தங்கள் உரிமையை பற்றி செய்தியை பொது சமூகத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.
இந்த ஹிஜாப் விவகாரத்தை தனித்த ஒன்றாக பார்க்க எந்த அடிப்படையுமில்லை. 370 சட்டசரத்து ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் துண்டாடப்பட்டது; அங்கே இன்றும் துப்பாக்கி முனையில் மக்களை வைத்திருப்பது; பசுக் குண்டர்களால் இஸ்லாமியர்கள் அன்றாடம் கொலை செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது; குடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற முற்பட்டது; அதை எதிர்த்து போராடியவர்களை டெல்லி கலவரத்தை தூண்டிவிட்டு 50 இஸ்லாமியர்களை படுகொலை செய்தது;
படிக்க :
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
லவ் ஜிகாத்; கொரோனா ஜிகாத் என்ற பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் இஸ்லாமிய சமூகத்தை இழிவுபடுத்தியது; இஸ்லாமியர்கள் சாப்பாட்டில் எச்சில் துப்பி கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் வியாபாரத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற எச்சில் ஜிகாத்; புல்லி பாய் ஆப்பின்மூலம் இஸ்லாமிய பெண்களை பொது இணையவெளியில் ஏலம்விட்டது போன்ற எண்ணற்ற வன்முறைகளின் தொடர்ச்சிதான் இந்த ஹிஜாப் தடை.
மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைப் போல் ஹிஜாப் தடையும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலின் நீண்ட கால அல்லது குறுகிய கால தேவையின் காரணமாக சங்க பரிவாரத்தால் உருவாக்கி வளர்க்கப்பட்டதுதான். இதன் முதன்மையான நோக்கம் இஸ்லாமியர்களின் மீதான வன்முறைதான். அதனால் இந்த “நடுநிலையாளர்கள்” சொல்வதுபோல் இது கல்வியா? ஹிஜாப் அணியும் உரிமையா? என்பது அல்ல பிரச்சினை; இந்துத்துவ பாசிஸ்டுகளின் இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தான் பிரச்சினை.
அதனை கணக்கில் கொண்டுதான் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துப் போராடுகிறார்கள். அதை ஒன்று திரட்டி இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டுப் போக எந்த இடதுசாரி அமைப்பும் இந்திய அளவில் வலிமையாக இல்லை. அதனால்தான் இது தன்னெழுச்சியானப் போராட்டமாக இருக்கிறது. அதற்கு ஆதரவு தரவில்லை என்றாலும் பரவாயில்லை, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீதே பழியை போட்டு அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் இருப்பதுவே இந்த வரலாற்று கட்டத்தில் இந்த “நடுநிலையாளர்கள்” செய்யும் நல்ல காரியமாக இருக்கும்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்.
செய்தி ஆதாரம் : thewire, theindiaforum, deccanherald

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க