ஹிஜாப் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் எழுப்பியுள்ள கண்டனக் குரல்களை எல்லாம் தூண்டப்பட்ட கருத்துக்கள் என்று கூறி நிராகரித்து வருகிறது மோடி தலைமையிலான பாஜக அரசு.
இரண்டு மாதங்களாக கர்நாடகத்தில் புகைந்து கொண்டிருந்த ஹிஜாப் விவகாரம், பிப்ரவரி மாதம் புதிய பரிமாணத்தை எட்டியது. சங்க பரிவாரக் கும்பல் மேல்மட்டத்தில் இருந்தும், கீழ் மட்டத்தில் இருந்தும் தனது பாசிச நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டனர்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் மூலம் இசுலாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிக்குள் நுழைவதற்கு தடை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, திடீரென்று ஹிஜாப் அணியத் தடை விதிக்கும் பாசிச ஒடுக்குமுறையை எதிர்த்து முசுலீம் மாணவர்களும், இதர ஜனநாயக முற்போக்கு மாணவர்களும் போராடினர்.
படிக்க :
ஹிஜாப் : பாஜக – ஆர்.எஸ்.எஸ்.-இன் மதக் கலவரத் திட்டம் || மக்கள் அதிகாரம்
உடை : மத அடையாளமும் சாதிய அடையாளமும் || மு இக்பால் அகமது
அடிப்படை மத உரிமையை, மத அடையாளம் என்ற வகையில் சுருக்கி, சாதாரண இந்து மாணவர்களிடையே பரப்பி, ஹிஜாப்புக்கு எதிராக காவித் துண்டும், காவி தலைப்பாகையும் அணிந்து எதிர்ப்போராட்டங்களை நடத்தியது சங்க பரிவாரக் கும்பல்.
சங்க பரிவாரக் கும்பலின் காவி அராஜகத்துக்கு எதிராக தைரியமாக முஸ்கான் என்ற மாணவி எதிர் முழக்கமிட்டு காவிக் கும்பலின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தினார். இது சர்வதேசரீதியில் பலரது கவனத்தை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றமும் பள்ளிச் சீருடை தவிர வேறெந்த உடையும் அணியக் கூடாது என தடை விதித்தது.
இந்தியாவில் நடந்து வரும் இந்த பாசிச நடவடிக்கைகளை சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமெரிக்கத் தூதர் ரஷத் உசைன் தனது டிவிட்டரில் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 11 அன்று வெளியிடப்பட்ட தனது  கண்டனப் பதிவில், “மதச் சுதந்திரம் ஒரு நபரின் மதத்திற்கான ஆடையை தேர்ந்தெடுப்பதையும் உள்ளடக்கியதே. இந்தியாவின் கர்நாடக மாநிலம் மதரீதியான உடைகளை அணிவதற்கான அனுமதியை முடிவெடுக்கக் கூடாது. பள்ளிகளில் ஹிஜாபை தடை செய்வது மதச் சுதந்திரத்தை மறுப்பது மட்டுமின்றி பெண்களையும் சிறுமிகளையும் ஒதுக்கக் கூடியதுமாகும்” என்று கூறியுள்ளார்.
மறுநாள் காலையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “எங்களது அரசியலமைப்புச் சட்டகம் மற்றும் கட்டமைப்புகள் மற்றும் எங்களது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அரசமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவகாரங்கள் கவனம் கொள்ளப்பட்டு தீர்க்கப்படுகின்றன. இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் இந்த எதார்த்தத்தை முழுமையாக அங்கீகரிப்பார்கள். எங்களது உள்விவகாரத்தில் தூண்டப்பட்ட கருத்துக்களை ஏற்புடையதல்ல” என்று கூறியிருக்கிறார்.
மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு வதைபடுகையில், ஜனநாயக விழுமியங்களைப் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றதுதான்.
சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க தூதர் மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்காவின் மதச் சுதந்திரத்திற்கான உள்துறையின் அறிக்கையில் இது குறித்து எழுப்பப்பட்ட விமர்சனப்பூர்வமான குறிப்பையும் இந்தியா நிராகரித்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கொடி
சர்வதேசிய மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிசன் (USCIRF), இந்தியாவை குறிப்பான கவனத்திற்குரிய நாடுகள் (CPC) பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பரிந்துரைத்துள்ளது. எதிர்திசையில் இந்தியா செல்வதாக குறிப்பிட்டுக் காட்டி இந்த பரிந்துரையை அளித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு வந்த அறிக்கையை “ஒருபக்கச் சார்பானது” என்றும் “உள்நோக்கம் கொண்டது” என்றும் கூறி நிராகரித்தது இந்தியா.
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 27 இஸ்லாமிய நாடுகள், ஆசியாவைச் சேர்ந்த 27 இஸ்லாமிய நாடுகள், ஐரோப்பாவின் அல்பேனியா மற்றும் தென் அமெரிக்காவில் இரண்டு நாடுகள் என மொத்தம் 57 நாடுகளை உள்ளடக்கிய “இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு” (OIC) இந்த ஹிஜாப் விவகாரம் மற்றும் அரித்துவாரில் இந்துத்துவ சாமியார்களின் முசுலீம்கள் மீதான இனப்படுகொலையைக் கட்டவிழ்க்கும் வெறுப்புப் பேச்சுக்களையும் கண்டித்து கடந்த பிப்ரவர் 14 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “முசுலீம்களையும் அவர்களது வழிபாட்டிடங்களையும் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள், முசுலீம்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் முசுலீம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்பு” ஆகியவற்றை சுட்டிக் காட்டியிருக்கிறது.
படிக்க :
ஹிஜாப் பிரச்சினை அல்ல – காவி பிரச்சினை : கர்நாடகா முழுவதும் முஸ்லீம் பெண்கள் போராட்டம் !
முதலில் ஹிஜாப் – தற்போது அசான் – அடுத்தது ?
மேலும், இந்தியாவை முசுலீம் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனை இந்தியா உறுதி செய்ய வேண்டும் என்றும், வெறுப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்கள், வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய அரசிடம் முறையிட்டுள்ளது.
இதற்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான அரிந்தம் பக்சி மறுப்பு தெரிவித்து கூடுதல் காட்டமாக பதிலளித்துள்ளார். ஓ.ஐ.சி-யின் இந்த அறிக்கை தூண்டப்பட்ட அறிக்கை என்றும், இது அந்த அமைப்பின் “வகுப்புவாத மனநிலையை” வெளிப்படுத்துவதாகவும், அந்த அமைப்பு தொடர்ச்சியாக இந்தியாவிற்கு எதிரான பரப்புரை செய்யும்  “உள்நோக்கம் கொண்டவர்களால்” ஆட்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலின் தலைமையிலான பாசிச ஆட்சியில், முசுலீம் வெறுப்பு அரசியல்தான் இனி வரும் காலங்களில் புதிய இயல்புநிலையாக இருக்கும் என்பதை, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த கண்டனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

கர்ணன்
செய்தி ஆதாரம் : தி வயர்#1, தி வயர்#2

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க