ர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கான முன் பல்கலைக்கழக கல்லூரியில் ஹிஜாப் அணிந்ததற்காக ஆறு முஸ்லீம் மாணவிகள் வகுப்பறைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடைக் காட்டுப்பாடு பிரச்சினையைத் தவிர உருது, அரபிக் அல்லது பேரி மொழிகளில் பேச அனுமதிக்கப்படுவதில்லை என்று மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று தொடங்கி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே மூன்று நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சினையை பற்றி விவாதிக்க அம்மாணவர்களின் பெற்றோரை அழைத்து, அவர்களை கல்லூரியில் நான்கு மணிநேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்து உள்ளது கல்லூரி நிர்வாகம். பெற்றோர்களுடன் விவாதிக்க கல்லூரி முதல்வர் ருத்ரா கவுடா மறுத்துவிட்டார் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
படிக்க :
கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
பெண் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த நாட்களுக்கான வருகைப் பதிவுகளை குறிப்பிடாமல் இருப்பதால் தங்கள் வருகை நாட்கள் குறைவாக இருக்கலாம் என்று கவலை கொள்கின்றனர் அந்த ஆறு மாணவர்களும்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஹிஜாப்களை அணியலாம் என்றாலும், “சீரான தன்மையை” (uniformity) அமல்படுத்துவதற்காக வகுப்பறைக்குள் அவற்றை அணிய அனுமதிக்கப்படவில்லை என்றும், பள்ளியில் “சீருடையாக ஹிஜாப் இருக்க வேண்டும்” என்று எந்த விதியும் இல்லை, எனவே மாணவிகள் அதை அணிய அனுமதிக்கப்படவில்லை என்றும், மொத்தமுள்ள 60 மாணவர்களில் 6 பேர் மட்டுமே ஹிஜாப் அணிந்திருப்பதால் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை, இது குறித்து மாணவிகளின் பெற்றோர்களை அழைத்து பேசியதாகவும் கவுடா கூறினார். சில மொழிகளைப் பேசவிடாமல் தடுக்கப்படுவதாக மாணவர்கள் கூறுவது பற்றி எதுவும் அவர் கூறவில்லை.
இதற்கிடையில், போலீசார் தலையிட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை சமாதானம் செய்து, கல்லூரி விதிமுறைகளை பின்பற்றுமாறு கூறினர்.
ஹிஜாப் அணிந்ததற்காக மாணவர்களை கல்லூரி வகுப்பறைக்குள் நுழைய மறுப்பதை ஏற்க முடியாது என்று சமூக ஆர்வலர் அன்சார் அகமது கூறினார். “மாணவர்களுக்கு சரியான வழியைக் கற்பிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள், இதுபோன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சரியல்ல,” என்றார்.
“ஆறு மாணவிகளையும் வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காவிட்டால், இந்த ‘பாசிஸ்டுகளுக்கு’ எதிராக நாங்கள் போராட்டம் நடத்துவோம்” என்று உடுப்பி SDPI தலைவர் நசீர் அகமது கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள், மாணவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். கல்லூரி முதல்வரிடம் தான் பேசுவதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
000
உடுப்பில் நடந்த சம்பவம் போன்று, கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள கொப்பா தாலுகாவின் ஓர் அரசு கல்லூரி ஒன்றில் இந்துத்துவா அமைப்புகளை சார்ந்த மாணவர்கள் பலர், வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியும் முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகளைக் கண்டித்து அவர்கள் காவி சால்வைகளை அணிந்துக் கல்லூரிக்குள் நுழைந்தனர்.
படிக்க :
ஹிஜாப், பர்தாவின் பூர்வீகமும் வரலாறும் !
புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்
2021-ம் ஆண்டு கர்நாடகாவில், இந்து ஜாக்ரன் வேதிகே போன்ற இந்துத்துவா அமைப்புகளால் தொடர்ச்சியான ‘முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்ற முஸ்லீம் விரோத வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
தற்போது மதமாற்ற தடை சட்டம் சட்டமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, கிறிஸ்துவ சிறுபான்மையினருக்கு எதிரான இந்துத்துவ கும்பலின் வன்முறைகள் வெடித்து வரும் கொந்தளிப்பான நிலையில், கல்லூரியில் ஹிஜாப் அணிவதை குறிவைப்பதன் மூலம் முஸ்லீம் சிறுபான்மையினர் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தை துவங்கியுள்ளன கர்நாடக காவிக் கும்பல்.


சந்துரு
செய்தி ஆதாரம் : The wire, siasat

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க