ர்நாடகா மாநில சட்டமன்றத்தில், மதமாற்றத் தடைச் சட்டம் அம்மாநில கீழவையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும், பெருவாரியான சிறுபான்மையின மக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த டிசம்பர் 21-ம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறுபான்மை மதத்தினரை துன்புறுத்தும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட இந்த மதமாற்றத் தடைச்சட்டத்திற்கு அம்மாநில பாஜக அரசு வைத்திருக்கும் பெயர், “கர்நாடகா மத சுதந்திர உரிமை பாதுகாப்புச் சட்டம் – 2021”
உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து நான்காவது மாநிலமாக சங்கிகள் ஆளும் கர்நாடகா இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் 2023 தேர்தலுக்கு ஏதுவாக மத முனைவாக்கத்தை மேற்கொள்ள இப்போதே தயாராகி வருகிறது சங்க பரிவாரக் கும்பல். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் இந்து – கிறித்துவ மக்களிடையே நிலவும் சிறு சிறு பிரச்சினைகளை பெரிதாக்கி கட்சி வளர்த்து அங்கு மத முனைவாக்கத்தை செய்துவருகிறது சங்க பரிவாரக் கும்பல். அதேபோல கர்நாடகாவில் கிறித்துவர்களை எதிரிகளாகச் சித்தரித்து அதன்மூலம் மக்களை மத முனைவாக்கம் செய்வதை இலக்காகக் கொண்டே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
படிக்க :
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!
இச்சட்டத்தில் ஆசைகாட்டி மக்களை மத மாற்றம் செய்வது கடும் குற்றமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக,
1. பரிசுப் பொருட்கள், உவப்புகள், பணம் அல்லது அது போன்ற பொருளார்ந்த நன்மைகள்
2. வேலைவாய்ப்பு, பள்ளிகளிலோ, மத நிறுவனங்களால் நடத்தப்படும் கல்லூரிகளிலோ வழங்கப்படும் இலவசக் கல்வி
3. திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி
4. மேம்பட்ட வாழ்க்கை, மிரட்டிப் பணியவைத்தல் அல்லது பிற வழியில்
5. கொண்டாட்டங்கள், நடைமுறைகள், சடக்குகள் அல்லது ஒரு மதத்தின் ஒன்றிணைந்த பகுதியாக இருப்பவற்றை மற்ற மதத்தினுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக சித்தரித்தல்
6. ஒரு மதத்திற்கு எதிர்நிலைப்படுத்தி மற்றொரு மதத்தைப் புகழ்வது
இவை அனைத்தும் ஆசைகாட்டுவதற்கான அடிப்படையாக இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பவை. இதன் படி பார்த்தால் யார் மதம் மாறினாலும் சம்பந்தப்பட்ட மத நிறுவனத்தின் நபர்களை இச்சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும்.
குறிப்பாக கிறித்துவ மத நிறுவனங்களைக் குறிவைத்து இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. கல்வி வாய்ப்பு பெற இயலாத மாணவர்களுக்கு பல்வேறு டிரஸ்டுகள் உதவி வழங்கிவரும் நிலையில் இதுபோன்ற சட்டங்கள் இந்த டிரஸ்டுகளின் செயல்பாட்டை மதரீதியான சாயம்பூசி முடக்கும் வேலையைச் செய்வதோடு இதனால் பயன்பெறும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
அவ்வளவு ஏன், கிறித்துமஸ் அன்று இரவு “கிறிஸ்துமஸ் தாத்தா” வழக்கமாக குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும் நிகழ்வைக் கூட மதமாற்ற முயற்சி என்று கூறி வழக்கு தொடுக்க முடியும். அதற்கான எல்லா முகாந்திரங்களையும் வழங்கியிருக்கிறது இந்தச் சட்டம்.
கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறையை ஏற்கெனவே சங்க பரிவாரக் கும்பல் கர்நாடகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல சர்ச்சுகளும் இதர வழிபாட்டுத் தலங்களும் நாசப்படுத்தப்பட்டன. இந்திய அளவில் கிறித்துவர்கள் மற்றும் கிறித்துவ வழிபாட்டுத் தலங்களின் மீதான தாக்குதல்களில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அந்த அளவிற்கு தொடர்ச்சியான கிறித்துவ வெறுப்பு அம்மாநிலத்தில் பரப்பப்படுகிறது.
சட்டவிரோத மதமாற்ற நோக்கத்துடன் செய்யப்படும் திருமணம் அதாவது தாம் மதம் மாறியோ  தமது இணையர் மதம் மாறியோ செய்யும் திருமணங்களும், திருமணத்திற்குப் பின்னர் மதமாற்றம் நடந்தால் அந்தத் திருமணங்களும் செல்லுபடியாகாதவையாக கருதப்படும் என்று இந்த சட்ட வரைவு கூறுகிறது. இதன்மூலம் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை தெளிவாகத் தடை செய்கிறது.
இச்சட்டத்தின்படி, மதம் மாற விருப்பமுள்ளவர்கள் 30 நாட்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான அறிவிப்பை கொடுக்க வேண்டும். மதம் மாற்றுபவரும் அது குறித்து 30 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் அறிவிப்பு கொடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இந்த மாற்றத்திற்கு ஏதேனும் எதிர்ப்பு இருக்கிறதா என்பதை 30 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்.
மதம் மாறியவர்கள், மதம் மாறி 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் அறிவிப்பு செய்யவேண்டும். மாவட்ட ஆட்சியர் அதில் யாருக்கேனும் எதிர்ப்பு இருக்கிறதா என்பதை கேட்டு அறிவிக்க வேண்டும். மதம் மாறிய நபரும் மதம் மாறியபின் 21 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆஜராகி தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
மதம் மாறுகின்ற நபர்களுடன் சம்பந்தப்பட்ட யார் வேண்டுமானாலும் மத மாற்றத்திற்கு எதிராக புகார் எழுப்பலாம். இந்தச் சட்டத்தின் படி மதமாற்றக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டார் என்பது உறுதியானால், மதமாற்றம் செய்யப்பட்டவர் சாதாரண பிரிவினராக இருந்தால் 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும். ஒருவேளை மதம் மாறியவர்கள் குழந்தைகளாகவோ, பெண்களாகவோ, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கும்பட்சத்தில் 3 ஆண்டு முதல் 10 ஆண்டு வரையிலான சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் வசூலிக்கப்படும்.
படிக்க :
கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !
கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !
மொத்தத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனி மனிதர்களுக்கு வழங்கியிருக்கும் மதச் சுதந்திரம் என்பதை பறிப்பதற்கான ஒரு சட்டத்தை மதச் சுதந்திர உரிமைப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் கொண்டுவந்திருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.
குறிப்பாக ஒடுக்கப்பட்ட, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்து மதத்தின் சாதிய இழிவிலிருந்து வெளியேற முடிவெடுத்தாலும் அவர்கள் அவ்வளவு எளிதாக சனாதன தர்மத்தின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.
மேலும், இத்தகைய சட்டங்களை முகாந்திரமாக வைத்து மதரீதியான முனைவாக்கத்தையும், கும்பல் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளையும் மேலும் தீவிரப்படுத்தவும், திட்டமிட்டு அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது சங்கபரிவாரக் கும்பல்.
வினவு செய்திப் பிரிவு
கர்ணன்
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க