privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் - ஆர்.எஸ்.எஸ். அபாயம் !

கர்நாடகா : பள்ளியில் பாபர் மசூதி இடிப்பு நாடகம் – ஆர்.எஸ்.எஸ். அபாயம் !

கர்நாடகாவில் பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகத்தை பள்ளி மாணவர்கள் மூலம் நடத்தி பள்ளி மாணவர்களுக்கு மதவெறியை ஊட்டிய ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

-

 “அனுமனின் பக்தர்கள், அனுமனின் கோபத்தோடு பாபர் மசூதியை உத்வேகத்தோடு இடித்துத் தள்ளுகிறார்கள். ஸ்ரீ ராமச்சந்திரனுக்கு …. ஜே !”  – இது பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது விடுக்கப்பட்ட அறைகூவல் அல்ல.

நாடு முழுவதும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கொந்தளித்துப் போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விழா ஒன்றில் விடுக்கப்பட்ட அறைகூவல்.

இந்த அறைகூவலைத் தொடர்ந்து 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வேகமாக ஓடிச் சென்று பாபர் மசூதியின் படம் அச்சிடப்பட்ட பிரம்மாண்டமான பேனரின் மீது எட்டி உதைத்து அதனைக் கீழே தள்ளுகின்றனர். அது விழும் சமயத்தில் சங்கிகளின் ஊளைச் சத்தம் அதிகரிக்கிறது.

கிரண்பேடியுடன் பிரபாகர் பட்

கர்நாடகா மாநிலம் கல்லட்காவில் உள்ள ஸ்ரீராமா வித்யாகேந்திர மேல்நிலைப் பள்ளியில்தான் இந்த இழிகூத்து நடைபெற்றது. இவ்வளவு வக்கிரத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் பள்ளிக்கும் ஆர்.எஸ்.எஸ்.-க்கும் தொடர்பு இல்லாமல் இருக்க முடியுமா? இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரபாகர் பட் என்பவரால் நடத்தப்படுகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு சனாதன் சன்ஸ்தா என்ற சங்க பரிவாரக் கிரிமினல் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சமூக செயல்பாட்டாளர் கவுரி லங்கேஷ் இந்த பிரபாகர் பட் குறித்து எழுதியுள்ளார். “சங்க பரிவாரத்த்தால் கல்லட்காவில் தொடங்கப்பட்ட மதவாத கலவரங்களை தெற்கு கனரா பகுதி மற்றும் உடுப்பி மாவட்டம் முழுவதற்கும் ஒழுங்கமைந்த முறையில் பரப்பி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்குப் போதுமான அளவுக்கு காவிமயமாக்குவதே பிரபாகர் பட்டின் பணி.” என்று குறிப்பிடுகிறார் கவுரி லங்கேஷ்.

மேலும், “பிரபாகர் பட் நடத்திவரும் இரண்டு பள்ளிகளும், இந்துத்துவா தவழும் இடமாக அறியப்பட்டவை. ஆர்.எஸ்.எஸ். சீருடைகள், கம்புகள், முசுலீம் – கிறுத்துவ சமூகத்தினர் மீதான குருட்டுத்தனமான வெறுப்பு ஆகியவற்றின் மூலம் இங்கு படிக்கும் அப்பாவிக் குழந்தைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் புகுத்தப்படுகிறது. இந்தப் பள்ளியில் இருந்து மட்டும் சுமார் 3000 மாணவர்கள் அறமற்ற சட்டவிரோத முறையில் சீரழிக்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தங்களது மறைமுக நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

படிக்க:
♦ முசுலீம்களை மட்டுமல்ல இந்துக்களையும் செல்லாக்காசாக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

முக்கியமாக, “இந்தப் பள்ளிகள் அரசு உதவி பெறும் நிறுவனங்களாக இருந்தாலும், இங்கு போதிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறுகின்றனர்.

பள்ளியில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு குறித்து பிரபாகர் பட்டிடம் நியூஸ் மினிட் இணைய பத்திரிகை கேட்டதற்கு, “உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தவறானது என்று குறிப்பிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் கூறும் அனைத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “மாணவர்கள் வரலாற்றை மீண்டும் ஒருமுறை நடித்துக் காட்டியிருக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும் திமிராகக் கேட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி ஆளுநர் கிரண் பேடி மற்றும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோரும் கர்நாடக அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இவர்களனைவரின் முன்னிலையில்தான் அப்பாவி மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட இந்தக் ‘கர சேவை’ முடிக்கப்பட்டது.

இளம் மாணவர்களை சிறுவயதிலேயே எடுபிடிகளாக, கரசேவகர்களாக உருவாக்க பள்ளிகளைக் குறிவைத்து செயல்படுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இலட்சக்கணக்கான பணம் கொட்டி தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளியிலும் இந்த சங்க பரிவாரக் கும்பல் புகுந்து வேலை செய்கிறதா என்பதை எச்சரிக்கையாக இருக்கவும். இல்லையெனில்  உங்கள் பணத்தில் உங்கள் பிள்ளைகளை தனது அடியாளாக்கி வீதி மோதலில் பலி கொடுக்கவும் தயங்காது இந்தக் கொலைகாரக் கும்பல் ! இது ஒரு அபாய எச்சரிக்கை !

நந்தன்

செய்தி ஆதாரம்: தி வயர்