கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னும் பின்னும் பல்வேறு மாநிலங்களில் கிறித்துவர்களுக்கு எதிரான இந்துத்துவ குண்டர்களின் வன்முறைகள் நடத்தப்பட்டது குறித்த தகவல்கள் பல சமூக ஊடகங்களில் வெளிவந்தன.
கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று பஜ்ரங்தளம் மற்றும் பிற இந்துத்துவ குண்டர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ஒரு தெருவின் நடுவில் “சாண்டா கிளாஸ் முர்தாபாத்” என்று முழக்கமிட்டுக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவப்பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். “சாண்டா கிளாஸ் எந்தப் பரிசுகளையும் சுமந்து வருவதில்லை, அவருடைய குறிக்கோள் இந்துக்களை கிறித்துவர்களாக மாற்றுவதுதான். இனி இப்படி செய்ய முடியாது. எந்த மதமாற்ற முயற்சியும் இனி அனுமதிக்கப்படாது. இதை மேலும் நடத்தினால் கிறிஸ்துவ மிஷனரி பள்ளிகளில் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்துத்துவ குண்டர்கள் மிரட்டல் விடுத்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள சந்த்மாரி மாவட்டத்தில், கிறிஸ்துமஸ் நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பு மாத்ரிதாம் ஆசிரமத்திற்கு வெளியே காவிக்கொடிகளை ஏந்தியபடி இந்துத்துவ குண்டர்கள் ‘தர்மந்திரன் பேண்ட் காரோ’ (மதமாற்றத்தை நிறுத்து), ‘சர்ச் முர்தாபாத்’, ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்ற கோஷங்களை எழுப்பினர். சுமார் அரை மணி நேரம் சாலை மறியலில் ஈடுபாட்டனர்.
படிக்க :
கர்நாடகா : கிறிஸ்துவ ஜபக் கூட்டங்களை தடுக்கும் பஜரங்தள் !
கர்நாடகா : மத சுதந்திரத்தை பறிக்கும் “மத உரிமை பாதுகாப்புச் சட்டம்”
மாத்ரிதாம் ஆசிரிமத்தின் பாதிரியார் கூறுகையில், “இது ஒரு தேவாலயம் கூட இல்லை. இது ஒரு ஆசிரமம். அனைத்து சாதிகள், மதங்களையும் சார்ந்தவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய வருவார்கள். ஞானஸ்நானம் போன்ற மதமாற்றம் செயல்கள் இங்கு ஏதும் நடக்கவில்லை. யாரும் தங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளவில்லை. மக்கள் இன்னும் இந்து சமுதாயத்தில்தான் இருக்கிறார்கள்” என்று கூறினார். இந்துத்துவ குண்டர்கள் வன்முறை தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தபோதும், குண்டர்கள் சென்றபிறகே போலீசு அங்கு வந்துள்ளது.
வாரணாசியில் இந்துத்துவ குண்டர்கள் :
அரியானா மாநிலம், குருகிராமில் பட்டோடியில் உள்ள ஒரு பள்ளிக்குள் இந்துத்துவ குண்டர்கள் நுழைந்தனர். கிறிஸ்துமஸ் நிகழ்வு நடந்துக் கொண்டிருக்கும்போது மேடையில் ஏறி, “நாங்கள் கிறித்துவர்களை அவமதிக்கவில்லை ஆனால் அடுத்த தலைமுறைக்கு  சொல்கிறோம், விதிகளை பின்பற்றுங்கள் பேராசையால் எந்த மதத்திற்கும் செல்லாதீர்கள். இந்திய கலாச்சாரம் அழிந்துவிடும். அதைப் பாதுகாக்க நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும். அந்த தீர்மானத்தை எடுத்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்குங்கள்” என்று ஒலிபெருக்கியில் கூச்சலிட்டனர். மேலும், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ‘சனாதன் தர்ம் கி ஜெய்’ (இந்துமதம் வாழ்க), ‘ஆதர்ம் கா நாஷ் ஹோ’ (மதம் இல்லாதவர்கள் அழிந்து போகட்டும்) போன்ற முழங்கங்களை எழுப்பினர். இதைப்பற்றி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளிக்குள் கடந்த டிசம்பர் 23-ம் தேதியன்று இந்துத்துவ குண்டர்கள் நுழைந்து கிறிஸ்துமஸ் நிகழ்விற்கு இடையூறு செய்து பள்ளியின் நிர்வாகிகளை அச்சுருத்தியுள்ளனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கனிகா பிரான்சிஸ் மேரி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா காரணமாக பள்ளி நிர்வாகம் கொண்டாட்டத்தை கைவிட முடிவு செய்ததாக கூறினார். இருப்பினும், மாணவர்கள் ஒரு சிறிய நிகழ்வை அனுமதிக்கக் கோரியாதாலேயே இந்நிகழ்வு நடந்தது என்று கூறினார்.
மேலும், இந்துத்துவ குண்டர்கள் இந்து கடவுளான சரஸ்வதியின் படத்தை பள்ளி வளாகத்திற்குள் வைக்கப்போவதாக மிரட்டியதாகவும், பள்ளியின் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடப்போவதாக மிரட்டியதாகவும் மேரி குற்றம் சாட்டினார்.
“கர்நாடகா மத சுதந்திர உரிமை பாதுகாப்புச் சட்டம் – 2021” (மதமாற்ற தடை சட்டம்) கொண்டுவருவதற்கு முன்பும் பின்பும் கடந்த ஒரு மாதகாலமாக தேவாலையங்கள் மீதும் கிறித்துவ மத நிறுவனங்கள் மீதும் தாக்குதல் தொடுப்பது, மதக்கூட்டங்களுக்கு இடையூறு செய்வது போன்ற வன்முறை செயல்களில் பஜரங்தாள் உள்ளிட்ட இந்துத்துவ கும்பல்கள் ஈடுபட்டு வருகிறது.
நாடு முழுவதும் கிறிஸ்துவ சிறுபான்மையினர் மீது காவிக் குண்டர்களின் தாக்குதல்கள் சமீபகாலங்களாக தீவிரமடைந்து வருவதை மேற்கண்ட பல்வேறு மாநிலங்களில் நடந்த கிறிஸ்துமஸ் வன்முறை நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. சாதி, மதம் கடந்து உழைக்கும் மக்கள் வர்க்கமாய் ஒண்றினைத்துப் போராடும்போதுதான் பரவி வரும் மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க முடியும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க