உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.

0

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் புகாரைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஃபதேபூர் மாவட்டத்தில் வாழும் கிறித்துவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்துத்துவ அமைப்பான வி.எச்.பி, ஈஸ்டர் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தனது முதல் புகாரை அளித்தது. அன்று முதல் கிறித்துவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்யப்படுவது தொடர் நிகழ்வாகிவிட்டது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தற்போது வரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஃபதேபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; பலரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 அன்று பெரிய வியாழன் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுமார் 50 – 60 வி.எச்.பி குண்டர்கள் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து தாழிட்டுள்ளனர்.

படிக்க : இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

தி வயர்-க்கு பேட்டியளித்த எவாஞ்சலிகல் சர்ச் ஆப்ஃ இந்தியாவின் (ECI) பொதுச் செயலாளரும் சட்ட அலுவலருமான அருள்திரு எட்வின் ஜான் வெஸ்லி “தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. புனித வெள்ளிக்கான தயாரிப்புகளும் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென 60 – 70 பஜ்ரங் தள், வி‌.எச்.பி உள்ளிட்ட வலதுசாரி குழுக்களைச் சேர்ந்த நபர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷத்துடன் தேவாலயத்துக்குள் நுழைந்து கதவை பூட்டி விட்டனர்” என்று கூறினார்.

மேலும், அவர் “அப்போது அங்கு வந்த போலீசார் தேவாலயத்தினுள் இருந்தவர்களின் ஆதார் மற்றும் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்த்தனர். எங்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுவதாகக் கூறினர். ஆனால், அதற்கு மாறாக போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று நல்லிரவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்” என்று கூறினார்.

வி.எச்.பி தலைவர் ஹிமான்சு திக்சித் அளித்த புகாரின் அடிப்படையில் மத பகைமையை ஊட்டியது, மோசடி, சட்ட விரோதமாக கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்தது என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் அளவிற்கு கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

வி.எச்.பி தலைவர் திக்சித் 40 நாட்கள் திட்டமிட்டு வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதாவும், அப்பகுதியை சுற்றியிருப்பவர்கள் கூறியதன் அடிப்படையில்தான் புகார் அளித்ததாகவும் கூறி மழுப்பினார். போலீசுத்துறை அவர்கள் பக்கம் இருக்கும்போது காவி குண்டர்கள் ஏன் கவலைகொள்ள வேண்டும்.

90 இந்துக்களை கட்டாயமாக கிறித்துவ மதத்திற்கு மாற்றியதாகக் கூறி 35 நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத 20 நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. புகார் அளிக்கப்பட்ட உடனே 26 பேர் கைதுசெய்யப்பட்டனர். போலி ஆதார் அட்டை பயன்படுத்தியதாகக் கூறி போலீசுத்துறை அடுத்தடுத்து கைதுகள் செய்து வருகிறது. அக்டோபர் 30 அன்று ஃபதேபூர் போலீசுத்துறை பாதிரியார் விஜய் மசிஹ்-ஐ கைது செய்தது.

வழக்கு பதிவு செய்து கைதுகள் செய்து வருவதாகவும், கைது செய்யாமல் இருப்பவர்கள் மீது வாரண்ட் பிறப்பித்து உள்ளதாகவும் போலீசுத்துறை சார்பாக கூறப்படுகிறது. மேலும் தாமதமானால் தலைமறைவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசுத்தூறை கூறுகிறது.

அங்குள்ள கிறிஸ்துவ குடும்பங்களை இதுபற்றி கேட்கும்போது “இவ்வழக்குகள் ஜோடிக்கப்பட்ட வழக்குகள்” என்று கூறுகிறார்கள். ஈ.சி.ஐ பொதுச் செயலாளர் வெஸ்லி “இங்குள்ள மக்கள் 10 வருடங்களுக்கு மேலாக கிறித்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்; திட்டமிட்டே நாங்கள் தாக்கப்படுகிறோம்” என்றுகூறி தலித்துகளை மதமாற்றுவதாக போலீசார் கூறும் குற்றச்சாட்டை மறுத்தார்.

படிக்க : தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

உத்தரப்பிரதேச மதமாற்ற தடை சட்டத்தின் பிரிவு 4-இன் படி, மதமாற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே புகார் அளிக்க முடியும். ஆனால் வி.எச்.பி நபர்களின் புகாரியின் அடிப்படையில் இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-இல் இருந்து ஒரு நபர் கூட அவ்வாறு புகார் அளிக்கவில்லை.

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.

அங்குள்ள கிறிஸ்துவர்கள் தற்போது அங்கு வாழ்வதற்கே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காவி பயங்கரவாத குண்டர்களின் இந்த வெறிச்செயலுக்கு போலீசு அதிகார வர்க்கமும் உடந்தையாக செயல்படுகிறது. நாடெங்கும் சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழ்வதே தற்போது இயல்பு நிலையாக உள்ளது.

பொம்மி
நன்றி: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க