கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!

தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

ர்நாடகாவில் முனைவர் பட்டம் (Phd) மற்றும் ஆய்வியல் நிறைஞர் (MPhil) படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்காக வழங்கப்படும் உதவி தொகையை 33 சதவிகிதம் முதல் 66 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டுள்ளது கர்நாடக அரசு.

2022-23 கல்வியாண்டில் சேர்ந்த PhD மற்றும் MPhil மாணவர்களுக்கு உதவித்தொகை 66 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது; மேலும் 2020-21 மற்றும் 2021-22 கல்வியாண்டுகளில் சேர்ந்த PhD மாணவர்களுக்கு 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5, 2022 அன்று இந்த அறிவிப்பை கர்நாடக அரசின் சிறுபான்மை நலத் துறை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு குறித்து கர்நாடகா பகுதியைச் சேர்ந்த Phd பயிலும் மாணவர் கல்யாண் என்பவர் ஊடகத்திடம் கூறும்போது, “நான் என் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி, என் தந்தை விவசாயத் தொழில் செய்கிறார்; எனது கல்விக்கு நிதியளிக்க எனது குடும்பத்திற்கு நிதி வசதி இல்லை. எனது ஆராய்ச்சியை முடிக்க நான் முழுவதுமாகச் சார்ந்து இருப்பது அரசால் வழங்கப்படும் உதவி தொகையைதான். நான் 2020-21-இல் இத்திட்டத்தில் சேர்ந்தேன்; மண் ஆய்வுகளில் விஞ்ஞானியாக பணியாற்ற விரும்புகிறேன். ஆனால், ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லாததால் எனது ஆராய்ச்சியைத் தொடர கடினமாக உள்ளது. முதல் ஆண்டுக்கான உதவித்தொகையை வழங்க முடியாது என்று அரசாங்கம் இப்போது கூறுகிறது; நான் ஏமற்றப்பட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.

படிக்க : புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்பட்ட நிதி நெறுக்கடியின் காரணமாக மத்திய அரசு மாநில அரசுக்கு தரவேண்டிய நிதியை குறைத்துவிட்டது. இதனால் சிறுபான்மை மாணவர்களுக்கு தரவேண்டிய உதவித்தொகைக் குறைக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கிறது.

ஆனால், இதே கோவிட்-19 காலகட்டத்தில்தான் பெரும் முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி இந்த அரசு செய்து கொடுத்துள்ளது.

கடந்த மார்ச் 2021-ஆம் நிதியாண்டில் மட்டும் 2.03 இலட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 75 சதவிகிதம் கடன்கள் பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன்களாகும். அதிலும் குறிப்பாக 2020-21-ஆம் நிதியாண்டில், ஸ்டேட் வங்கியின் கீழ் இயங்கும் ஐந்து வங்கிகள் மட்டும் ரூ. 89,686 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன.

இப்படி அரசுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் பெரும் முதலாளிகளுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் வாரி வழங்கிவிட்டு, சிறுபான்மை மாணவர்கள் Phd. , M.Phil படிக்க உதவும் உதவித்தொகையை கோவிட்-19 பெருந்தொற்றின் பொழுது ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் குறைக்கப்படுகிறது என்று பாஜக அரசு வேசம் போடுகிறது.

இதையெல்லாம் பார்த்தால் அரசுக்கு நிதி நெருக்கடியெல்லாம் மாணவர்களுக்கு உதவி செய்யும்போது தான் வருகிறது அம்பானி அதானிகளுக்கு உதவி செய்யும்போது ஏற்படுவதில்லை என்று நமக்கு புரிகிறது. மேலும் இது சிறுபான்மை மாணவர்களுக்கு எதிராக இந்த பாசிச அரசு திட்டமிட்டு நடத்தும் ஒரு தாக்குதல் ஆகும்.

இத்தாக்குதல் கர்நாடகா அரசுக்கு ஒன்றும் புதியது அல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புக்கு செல்ல கல்லூரி நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஜனவரி 31-ம் தேதி அந்த மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையில் இன்றியமையாத மத நடைமுறையின்‌ ஒரு பகுதியாக இல்லை” என்று சொல்லி ஹிஜாப் தடைக்கு துணை நின்றது.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் படிக்கவே கூடாது என்று அவர்களுக்கு எதிராக பல்வேறு வகையில் தாக்குதலை இந்த பாசிச அரசு நடத்தி வருகிறது.

படிக்க : கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

இதையெல்லாம் பார்க்கும் பொழுது உத்திரப்பிரதேச மாநிலம் எப்படி ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யின் இந்துராஷ்ர கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஒரு சோதனை களமாக உள்ளதோ, அதேபோல் கர்நாடகா மாநிலத்தையும் மோடி அரசு மாற்றி வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்த்து நாம் நீதிமன்றங்ளுக்கு நீதிகேட்டு போனாலும் சிறுபான்மை மாணவர்களாகிய நமக்கு நீதி வழங்காது ஏன் என்றால் நீதிமன்றங்கள் நமக்கானது இல்லை.  இந்த நீதிமன்றங்கள் ஆளும் வர்க்கத்திற்கானது என்பதை நாம் ஹிஜாப் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்கிய போது பார்த்தோம்.

இதுபோன்று தொடர்ச்சியாக சிறுபான்மை மாணவர்கள் மீது இந்த பாசிச அரசு நடத்தும் அடக்குமுறைக்கு எதிராக ஹிஜப் பிரச்சினையின்போது எப்படி மாணவர்கள் போராடினார்களோ அதேபோன்று  மாணவர்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்றாய் திரண்டு நம்மை ஒடுக்கமுயற்சிக்கும் பாசிச சக்திகளை வெட்டி வீழ்த்தப் போராட வேண்டும்!

செழியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க