ந்தியாவில் தற்போது இருக்கும் கல்விக்கொள்கையை முழுமையாக மாற்றி அறிவியலை புறக்கணித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்துத்துவ சித்தாந்தத்தை முழுமையாக திணிக்கும் வேலை தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் பா.ஜ.க அரசு நடைமுறை படுத்தி வருகிறது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நேரடியாகவும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமும் இன்ன பிற வழிகளின் மூலமும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் ஒன்றிய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கையால் இந்துத்துவ சித்தாந்த கல்வி இந்தியாவில் கற்பிக்கப்படும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது இந்த கல்விக் கொள்கையால் 100-க்கும் மேற்பட்ட ஆங்கில் ஆசிரியர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆம்..! டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்த பேராசிரியர்கள் இன்று தனது எதிர்காலம் குறித்து அச்சப்பட துவங்கியுள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழக நிர்வாக குழு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. அதனடிப்படையில் 2022-2023-ம் கல்வி ஆண்டிலிருந்து புதிய கல்விக்கொள்கை அங்கு அமலுக்கு வருகிறது. இதனால் 3 ஆண்டுகளாக இருந்த இளங்கலை பட்டப்படிப்பு தற்போது 4 ஆண்டுகளாக அங்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த கல்விக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் மிக வேகமாக பல்கலைக்கழக நிர்வாகம் செய்து வருகிறது.


படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு


4 ஆண்டுகள் இளங்கலை பாடப்பிரிவுக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணி முடிவடைந்து கவுன்சில் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தாண்டு கல்லூரிகள் தொடங்கியவுடன் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட இருக்கின்றன.

இங்கு முன்பு இருந்த பாடத்திட்டத்தின்படி, ‘‘திறன் மேம்பாட்டு படிப்புகளில்’’(AEC) ஆங்கிலம் கட்டாய பாடமாக இருந்தது. இதனால் பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் ஆங்கில பாடத்தை கற்பிக்க அதிகமான பேராசிரியர்கள் தேவைபட்டனர். அப்போது அதிகமான பேராசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தி அவர்களின் உழைப்பை குறைந்த விலை கொடுத்து வாங்கியது பல்கலைக்கழக நிர்வாகம்.

தற்போது அமல்படுத்தப்பட இருக்கும் பாடத்திட்டத்தின்படி கட்டாய பாடத்திட்டத்தில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டு விருப்ப பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பபாடத்தில் புதியதாக 13 மொழிப்பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முடிவால் ஆங்கில பாடம் படிப்பவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஆங்கில ஆசிரியர்களின் தேவை குறைவான அளவே இருக்கும்.

இந்த கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதால் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த வேலையை நம்பி இருந்த இந்த பேராசிரியர்களின் வாழ்க்கை என்பது மிக கேள்விக்குறியாகி விட்டது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியராக வேலை செய்யும் பேராசிரியர் ஒருவர், என் வாழ்நாளின் முக்கியமான ஆண்டுகளை இந்த பல்கலைக் கழகத்திற்கு கொடுத்துள்ளேன். ஆனால், தற்போது எந்த நேரத்திலும் எனது வேலையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் வாழ்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார். இந்த பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பல ஆசிரியர்கள் எதிர்த்தோம்.

இந்த பாடத்திட்டத்தால் ஆங்கில ஆசிரியர்களின் வேலை 30 முதல் 40 சதவிகிதம் வரை குறையும் என்றும் பெரும்பாலான ஆசிரியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறினோம் என்றார். பேராசிரியர்களின் இந்த கண்ணீரையும் கதறலையும் கண்டு கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம் திறன் மேம்பாட்டு படிப்புகளில் இந்திய அரசியல் அமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள மொழிகள் மட்டும்தான் கட்டாயப்பாடமாக இருக்கும் என திமிர் தனமாக கூறியிருக்கிறது.

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் உள்ள மொழிகள் மட்டும்தான் திறன் மேம்பாட்டு படிப்புகளில் கட்டாய பாடமாக வைக்கப்படும் என்றால் கடந்த கல்வியாண்டு வரை 8-வது அட்டவணையில் ஆங்கிலம் இருந்தா என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு பல்கலைக்கழகம் என்ன மழுப்ப போகிறதோ தெரியவில்லை.

இதேபோல் கிரோரி மால் கல்லூரியின் நிரந்தர பேராசிரியர் ருத்ராசிஷ் சக்ரவர்த்தி என்பவர் இனிவரும் காலங்களில் ஆங்கில பேராசிரியர்களின் நிலைமை மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: இந்த பாடத்திட்டத்தால் எனது கல்லூரியில் அடுத்த பருவத்தில் கிட்டத்தட்ட 60 பாடவேளைகள் குறைக்கப்படும். இதுபோல் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் 50 பாடவேளைகளும், ராம்ஜாசில் கல்லூரியில் கிட்டத்தட்ட 60-க்கும் மேற்பட்ட பாடவேலைகள் குறையும்.

மேலும், கேசவ் மகாவித்யாலயா, ஜிஜிஎஸ் காலேஜ் ஆப் காமர்ஸ், இன்ஸ்டியூட் ஆப் ஹோம் எகனாமிக்ஸ், லேடி இர்வின் கல்லூரி, பாஸ்கராச்சாரியா மற்றும் ராஜ்குரு காலேஜ் ஆப் அப்ளைடு சயின்ஸ் போன்ற கல்லூரிகளில் வேலை செய்யும் ஆங்கில ஆசிரியர்களின் நிலைமை மோசமாக இருக்கும். திறன் மேம்பாட்டு படிப்புகளில் ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருந்ததால்தான் அதிகமான ஆங்கில பேராசிரியர்கள் பணியமர்ந்தப்பட்டனர். தற்போது அந்த நிலை இல்லாததால் அவர்கள் வேலையிழப்பது என்பது உறுதியாகிவிட்டது. பல்கலைக் கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாக அவர்கள் செய்த கற்பித்தல் பணி என்பது இன்று அவர்களுக்கு பலனற்று போய்விட்டது என்று அவர் கூறினார்.

பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி. இதுபற்றி பலமுறை கல்விக் கவுன்சில் கூட்டங்களில் முறையிட்டும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது ஒரு மனசாட்சியற்ற நடவடிக்கை ஆகும். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 2 முதல் 3 ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழக்க நேரிடும் என்றும் கூறினார்.

மேலும், இந்த பல்கலைக் கழகத்தில் ஆங்கில பேராசிரியர்களின் நிலைமை இனி வேறு எந்த துறையை சார்ந்த பேராசிரியர்களுக்கும் வரக்கூடாது. அதற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது என்று ஆவேசமாக பல்கலைக் கழகத்திற்கெதிராக பேசினார். பேராசியர்களுக்கு ஏற்படும் இந்த இன்னல்கள் குறித்து கடந்த மார்ச் மாதம், பல்கலைக் கழகத்தின் 400-க்கும் மேற்பட்ட ஆங்கில ஆசிரியர்கள் துணைவேந்தர் யோகேஷ் சிங்கிற்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மற்ற பேராசிரியர்களும் கூறினர்.


படிக்க : பள்ளிகளில் மூன்று மொழிக்கான சுற்றறிக்கை ! புதிய கல்விக்கொள்கையை திணிக்காதே ! | புமாஇமு


புதிய கல்விக்கொள்கை மூலம் தேசிய மொழிகளையும் ஆங்கிலத்தையும் முழுமையாக ஒழித்துவிட்டு இந்தியையும் செத்துபோன சமஸ்கிருதத்தையும் திணிக்க இந்த இந்திய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு அறிவியலை புறக்கணித்து கோமிய கல்வியையும், மற்ற மொழி பேராசியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சமஸ்கிருந்தம் படித்த முட்டாள் பார்ப்பனர்களை கல்வி நிறுவங்களில் பணியில் அமர்த்தவும் பன்னாட்டு கார்ப்பரேட் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் ஆகியோர் பெற்றோர்கள் மற்றும் அரசின் பணத்தை கொள்ளையடிக்க மட்டுமே இந்த புதிய கல்விக்கொள்கை என்பதை தாண்டி இதில் வேறு எந்த சிறப்பம்சம் ஏதும் இல்லை.

கல்வியில் புதிய வகையில் கொள்ளையில் ஈடுபட வரும் இந்த புதிய கல்விக் கொள்கையையும் அதனால் இலாபம் அடையும் இந்த காவி – கார்ப்பரேட்களையும் வீழ்த்துவதே உழைக்கும் மக்களை இந்தியாவில் வாழ வைக்கும்.


வினோதன்

1 மறுமொழி

  1. இந்தியா முதலாளித்துவத்திற்கு ஆங்கிலம் வசதியாகதானே இருக்கும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க