ரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் இயற்கை எழில் கொஞ்சும் கொங்கன் பகுதியில் அமைந்துள்ளது மராட்டிய மாநிலத்தின் ரத்தினகிரி மாவட்டம். கடல் வளமும், மலை வளமும் ஒருங்கே பெற்ற இந்தப் பகுதியில், மீன்பிடித் தொழிலும், விவசாயமும் மக்களின் வாழ்வாதாரங்களாக உள்ளன.

புகழ்பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் விளையும் மாந்தோட்டங்களையும், முந்திரித் தோட்டங்களையும், நெல் வயல்களையும் கொண்ட விவசாய கிராமங்களும், ஆண்டுக்கு 20 ஆயிரம் டன் மீன்களைப் பாரம்பரிய முறைப்படி பிடித்து வரும் மீனவ கிராமங்களும் இந்தப் பகுதியின் வளத்திற்குச் சாட்சியமாக உள்ளன.

இந்த இயற்கை வளத்தையும், அதனோடு இணைந்த இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையையும் அழித்து, ரத்தினகிரி மாவட்டத்தில் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்ட  மராட்டிய மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்கென ‘‘ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட்” என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமும் (சவுதி அராம்கோ), அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இதன் பங்குதாரர்கள்.

மொத்தம் 6 இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் சரிபாதி பங்குகள் இந்த இரு அந்நிய நிறுவனங்களிடமும், மீதமுள்ள பாதிப் பங்குகள் இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவற்றின் கூட்டமைப்பின் வசமும் உள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்குடன் கட்டப்படும் இந்தச் சுத்திகரிப்பு ஆலையின் கட்டுமானப் பணி முடிவடைந்து இயங்க ஆரம்பித்தால், ஆண்டுக்கு 12 இலட்சம் பேரல் எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்வதுடன் 1.8 கோடி டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரம்மாண்டமான சுத்திகரிப்பு ஆலையாக இயங்கும்.

இதற்கென 6000 ஹெக்டெர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 14 இலட்சம் மாமரங்களும், ஏழு இலட்சம் முந்திரி மரங்களும், 200 ஹெக்டெர் பரப்புகொண்ட நெல் வயல்களும் அழிக்கப்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. ரத்தினகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களில் உள்ள 17 கிராமங்களைச் சேர்ந்த 22,000 விவசாயிகளும், 5,000 மீனவர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாகத் துரத்தியடிக்கப்படும் நிலைமை ஏற்படவிருக்கிறது.

இந்தப் பகுதியில் வளமிக்க மண்ணும், விவசாயத் தேவைக்கேற்ற மழைப் பொழிவும் காணப்படுவதால், விவசாயம் ஓரளவிற்கு இலாபகரமானதாக நடைபெற்று வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர்கூட விவசாயத்தில் ஈடுபட்டு வரும் ஆபூர்வத்தை இங்கு காணமுடியும். ரத்தினகிரி சுத்திகரிப்பு ஆலை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியது என்ற பொய்யை முன்னிறுத்தி, விவசாய நிலங்களைக் கையகப்படுத்த முனைகிறது, மகாராஷ்டிரா அரசு.

விவசாயிகளை செக்யூரிட்டிகளாக நிறுத்தும் மோசடியைத் தவிர, வேறெந்த மாற்றத்தையும் இந்தத் திட்டம் பகுதி மக்களுக்குத் தரப் போவதில்லை. கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களின் வழியாக நாம் கண்டு உணர்ந்திருக்கும் பாடமிது.

சுத்திகரிப்பு ஆலை குறித்த அறிவிப்பு வெளியானது முதலே இந்தப் பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். ‘‘கொங்கன் சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு நடவடிக்கைக் குழு” என்ற போராட்டக் குழுவை உருவாக்கி, அதன் கீழ் அணிதிரண்டு போராடி வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பல கிராமப் பஞ்சாயத்துக்களில் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கைக்கு ஒரே ஆதாரமாக இருக்கும் நிலத்தை விற்பதற்கு விவசாயிகள் யாரும் தயாராக இல்லை. ‘‘எங்களது வாழ்க்கையை முன்னேற்ற இதுவரை எந்த உதவியும் செய்யாத அரசு இன்று எங்களது நிலத்தைப் பறித்துவிட முனைகிறது. அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்தால், எங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி செய்யட்டும் என்று போராடும் விவசாயிகள் கோருகின்றனர்.

விவசாயிகள் நிலத்தை இழப்பார்கள் என்றால், நிலமற்ற மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி மற்றும் கடலின் மீதான உரிமை இரண்டையும் இழந்து போவார்கள்.

இந்தப் பகுதி சுற்றுச்சூழல் அமைப்புப் பன்முகத் தன்மை கொண்ட பல்லுயிர் வாழ்நிலைப் பகுதியாகும். எனவே, இந்தப் பகுதியில் எவ்வித தொழிற்துறை முன்னெடுப்புகளும் செய்யக்கூடாது என்றும், இந்தப் பகுதியில் ஒட்டு மொத்தமாக எல்லா தொழிற்துறைகளும் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் பேராசிரியர் மாதவ் கட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வுக் குழு பரிந்துரைத்தது.

அதே சமயம் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம், ‘‘மாசுபாடற்ற” (zero pollution) திட்டம் என்று தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு கூறிவருகிறது. பெட்ரோலியத் துறையில் மாசுபாடற்ற ஆலை என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பது தெரிந்தும், மராட்டிய மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு அப்பட்டமான பொய்ப்பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த ஆலையை எதிர்ப்பதுடன், போராடும் மக்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வழக்கம் போல நாட்டின் வளர்ச்சிக்கு இந்த ஆலை மிகவும் அவசியம் என்று பேசிவருகிறார். ஆனால், கொங்கன் பகுதி மக்களுக்கு இது போன்ற பொய்மை குறித்தும் அதன் பின்னால் உள்ள கார்ப்பரேட் நலன் குறித்தும் யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், இப்பகுதி மக்களுக்குத் தங்களது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுவது புதிதல்ல.

1992-இல் என்ரான் நிறுவனத்திற்கு எதிராக இவர்கள் குறிப்பிடத்தக்க போராட்டத்தை நடத்தியுள்ளனர். அதே ஆண்டு தங்களது கடற்கரையில் மிகப்பெரிய உருக்காலையை அமைக்க வந்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை விரட்டியும் அடித்தனர். அங்கிருந்து ஓடிவந்துதான் தூத்துக்குடியில் ஆலையைத் தொடங்கியது, ஸ்டெர்லைட்.

அதே சமயம் இந்த ஆலையை அமைத்தே தீருவது என்பதில் பா.ஜ.க. அரசு உறுதியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கும் அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் ஸ்டெர்லைட்டைப் போன்றே பன்னாட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். தங்களின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகத் தூத்துக்குடி மக்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறையை எண்ணிப் பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் கட்டியமைத்த ஒற்றுமையையும் எதிர்த்து நிற்கும் துணிவையும் கொண்ட போராட்டத்தைப் போன்றதொரு போராட்டத்தை நடத்தினால் மட்டுமே கொங்கன் பகுதியிலிருந்து இந்தத் திட்டத்தைத் துரத்தியடிக்க முடியும்.

-அழகு
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க