யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்ட நமது மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்ப்பன்மை மிகுந்த சூழலுக்கு அச்சுறுத்தலாகத் திகழும் தேனி நியூட்ரினோ ஆய்வகத்தைக் குறித்து விளக்குகிறது இப்புத்தகம்.
முறையற்ற சூழல் அனுமதி தொடங்கி பல்வேறு குளறுபடிகளுடன் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட காத்திருக்கும் இத்திட்டம் மக்கள் விரோத – சூழல் விரோத – அழிவு அறிவியலின் ஒரு அங்கம் என்பதை அறிவியலாளர்கள், சூழியலாளர்கள் இப்புத்தகத்தில் விவரிக்கின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வை எதற்காக மேற்கொள்கிறார்கள்? நியூட்ரினோ ஆய்வை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறார்கள்? இதனால் உடனடியாக ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்ன? எதிர்காலத்தில் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் என்ன? இத்திட்டத்தை எதிர்ப்பவர்கள் அறிவியலுக்கு எதிரானவர்களா? முறையான சூழலியல் அனுமதி இல்லாமல் அவசரகதியில் கொள்ளைப்புறமாக இத்திட்டத்தை கொண்டுவருவதன் பின்னணி என்ன? அணுஉலைகளிலிருந்து வெளியேற்றப்படுகிற கதிர்வீச்சுத் தன்மையுடைய அணுக்கழிவுகளை பூமிக்கடியில் சேமிக்கும், ஆழ் புவிசார் கிடங்கு அமைப்பதற்குத்தான் குகை தோண்டப் போகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது, இச்சிறுநூல்.
‘’நியூட்ரினோவை மட்டும் பதிவு செய்ய நீளம், அகலம், உயரம் ஆகியவற்றில் 1 கிலோ மீட்டர் அளவுள்ள மலைப்பகுதி தேவை. அதனால்தான் தேனிமாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். இதன்படி மலையின் உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில் 132 மீட்டர் நீளத்திலும், 26 மீட்டர் அகலத்திலும் 20 மீட்டர் உயரத்திலும் ஒரு குகை அமைக்கப்பட்டு உலகத்திலேயே மிகப்பெரிய அளவுள்ள காந்தமயப்படுத்தப்பட்ட இரும்பு வைக்கப்பட்டு அதனிடையே மின் தட்டு அறைகள் மற்றும் இரும்பினால் செய்யப்பட்ட தகடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில் விட்டு வைக்கப்படும். காந்தத்தின் செயல்பாட்டினையும் மின் தட்டு அறைகளின் செயல்பாட்டினையும் தூண்டுதல் செய்து அதற்கிடையே நியூட்ரினோவை ஆய்வு செய்யப்போகிறார்கள்.’’
‘’நமது உடல், நாம் பயன்படுத்தும் பொருள் வெளி என எல்லா இடத்திலும் பரவிக் கிடக்கிறது நியூட்ரினோ. ஒரு பேனாவின் மூலம் வைக்கப்படும் புள்ளியில் இரண்டு லட்சம் கோடி நியூட்ரினோ இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சொடக்கு போடும் நேரத்தில் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் நமது உடலில் புகுந்து வெளியேறிக் கொண்டுள்ளது. உடலை மட்டுமல்ல பூமியையே துளைத்து சென்று கொண்டும், வந்து கொண்டும் உள்ளது.’’
‘’இந்தத்திட்டம் ஒரு அடிப்படை அறிவியல் திட்டமென்றும் எதிர்காலத்தில் பல புதிய எல்லைகளைத் திறக்கும் என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. சார்பியல் தத்துவம் அறிவியல் சூத்திரம்தான். அதை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் உலகத்தின் ஒப்பற்ற விஞ்ஞானிதான். ஆனால் அவர் கண்டுபிடித்த அந்த அடிப்படை சூத்திரத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.’’
இந்நூலில் விரவிக்கிடக்கும் பிரமிப்பூட்டும் விவரங்களும் அறிவியல் உண்மைகளும் நியூட்ரினோவிற்கு எதிராக வினையாற்றத் தூண்டுகின்றன.
நூல்: நியூட்ரினோ திட்டம்: மலையளவு ஆபத்து
பதிப்பகம்: பூவுலகின் நண்பர்கள், ஜி1, எண்:73, சாய்லஷ்மி அபார்ட்மெண்ட்ஸ், 2வது பிரதான சாலை, குமரன் நகர், சின்மயா நகர், கோயம்பேடு, சென்னை – 92.
பேச: 9094990900
பக்கங்கள்: 64
விலை: ரூ.50.00
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
– வினவு செய்திப் பிரிவு
வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.
நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876
மிகவும் சிறப்பான முயற்சி, இன்றைய கொதிநிலையான அரசியல் சூழ்நிலையில் இதுபோன்ற நூல்கள் நம்மை மேலும் விழிப்புறச்செய்யும்.உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👌
//சார்பியல் தத்துவம் அறிவியல் சூத்திரம்தான். அதை கண்டுபிடித்த ஐன்ஸ்டீன் உலகத்தின் ஒப்பற்ற விஞ்ஞானிதான். ஆனால் அவர் கண்டுபிடித்த அந்த அடிப்படை சூத்திரத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை//
இந்த மேற்கோள் நூலினை வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்திற்கு உகந்ததல்ல. இதனை முகப்பில் போட்டு அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது. இதே போல ஐன்ஸ்டின் குறித்து மேலும் சில விமர்சனங்கள் இந்த நூலில் உள்ளன.
அறிவியல் கண்டுப்பிடிப்புகள் எந்த வர்க்கத்தின் கீழ் செல்கின்றன என்பதைப் பொருத்துதான் அவை மக்களுக்குச் சேவை செய்கின்றனவா, இல்லையா, எதிரானவையாக இருக்கின்றனவா என்பது தீர்மானிக்கப்படுகின்றன. இதுதான் அறிவியல் கண்டுப்பிடிப்புகளின் பால் நமது கண்ணோட்டமாகும்.
ஐன்ஸ்டின் மீதான இந்த விமர்சனம் எனக்கு புதிதாக இருக்கிறது. வினவுக்கு இதில் உடன்பாடு இருக்கலாம். அது இந்த நூலில் போகிற போக்கில் சொல்லப்பட்ட கருத்தாக உள்ளது, மேலும் விளக்கங்களாக இருந்தால் பரிசீலிக்கலாம். அதனால், நாம் அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்கு ஏற்ற கருத்துக்களை மட்டும் இந்த அறிமுகத்தில் இடம் பெற்றால் சரியாக இருக்கும்.
இது தவிர இந்த நூல் நியூட்ரினோ குறித்து அறிந்து கொள்ள பயனுள்ள நூல். எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன. இதனை இந்நூலை அச்சிடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் விமரிசனங்களை ஏற்கிறோம். இனி கவனமாக இருப்போம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!