தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக் கொள்கின்றனர்’ என்கிறார்.

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலகமெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்காவில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991-ல் ‘ரமிரெஸ் எட் அல்’ (Ramirez et al 1991) என்ற ஆய்வை நடத்தியது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே.

2,342 மாணவர்கள் இந்த ஆய்வில் இணைத்துக்கொள்ளப்பட்டு, அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். முதல் குழுவுக்கு ஆரம்பம் முதலே ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டன. இரண்டாம் குழுவுக்கு, ஆரம்பத்தில் ஒன்று இரண்டு வருடங்கள் ஸ்பானிஷ் மொழியில் கற்பித்துவிட்டு, பிறகு ஆங்கில வழிக்கு மாற்றப்பட்டனர். மூன்றாவது முழுவினரை, நான்கு முதல் ஆறு வகுப்புகள் வரை ஸ்பானிஷ் மொழியில் படிக்க வைத்து, கூடவே ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் கற்பித்து, பிறகு ஆங்கில வழிக்கு மாற்றினார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் அறிவுத்திறனை மதிப்பிட்டபோது ஆச்சர்யம் தரும் உண்மைகள் வெளிவந்தன.

தொடக்கத்தில் இருந்து ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், அறிவு, ஆற்றல், ஆங்கில மொழித்திறன் என அனைத்திலும் பின்தங்கி இருந்தனர். மாறாக, ஆரம்ப வகுப்புகளை ஸ்பானிஷ் மொழியில் படித்த மாணவர்கள் இவை அனைத்திலும் மேம்பட்டு இருந்தனர். குறிப்பாக மூன்றாம் குழுவினரின் ஆங்கிலத் திறன், ஆங்கில வழியிலேயே படித்த மாணவர்களைவிட மேம்பட்டதாக இருந்தது. அதாவது தாய்மொழி வழியில் கல்வி கற்பதன் வழியேதான், ஆங்கிலத்தையும் சிறப்பாகக் கற்க முடியும் என்பது இதில் இருந்து தெரிகிறது. மேலும் தாய்மொழி வழிக் கல்விதான் அறிவு, திறன், ஆற்றல் என அனைத்திலும் சிறந்து விளங்க உதவுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

படிக்க :
♦ ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !
♦ ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்

அதே அமெரிக்காவில் 1996-2001 ஆகிய ஆறு ஆண்டு காலம் நடத்தப்பட்டது தாமஸ்-கால்லியர் (Thomas – Collier) ஆய்வு. இரண்டு லட்சம் மாணவர்கள், அவர்களின் 15 ஆண்டு கால கல்விப் பதிவுகள்… இவற்றைக்கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு, உலக அளவில் முக்கியமான ஒன்று. 2002-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவும், தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை பல்வேறு புள்ளிவிவரங்களுடன் உறுதி செய்கிறது.

அமெரிக்கா, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினரின் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்கு முன்பு இப்படி நீண்ட ஆய்வுகளைச் செய்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்தவித ஆய்வும் இல்லாமல், ஓர் அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் கொண்டுவரப்படுகின்றன

பாரதி தம்பி