11.10.2022

இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு !
அமித்ஷா குழு பரிந்துரை !
தேவை மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம் !

கண்டன அறிக்கை !

ன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக் கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பு தேர்வுகளில் இந்தி மொழி அவசியம், பணியாளர்கள் தேர்விலும் இந்தி மொழி அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை குடியரசு தலைவரிடம் அளித்துள்ளது.

ஒன்றிய அரசின் அலுவலகங்கள், இலாகாக்கள் அளிக்கும் கடிதங்கள், பதில்கள், மின்னஞ்சல்கள் ஆகிய அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; அரசின் விளம்பரங்கள், நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தி மொழியில்தான் இருக்க வேண்டும்; ஐ.நா.வில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளையும் அக்குழு அளித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே வரி என்ற வகையில் தற்பொழுது ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கையை நடைமுறைப்படுத்த மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.

அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் இந்தி மொழி கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால் அதன் விளைவாக தாய்மொழி அழிக்கப்படும். ஒவ்வொரு இனத்தின் மொழியும் அழிக்கப்படும் போது அதன் பண்பாடும் வரலாறும் சேர்த்து அழிக்கப்படும்; அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்.


படிக்க : 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !


வட இந்தியாவில் இருந்த பல்வேறு இனக்குழுக்களின் மொழிகளை மறைத்துவிட்டு / அழித்துவிட்டு இந்திதான் அம்மக்களின் தாய்மொழி என்பது போன்ற ஒரு தோற்றத்தை பொய்யாக உருவாக்கியது போலவே இந்தியா முழுவதும் அப்படிப்பட்ட பொய்த் தோற்றத்தை உருவாக்க முயல்கிறது பாசிச மோடி அமித்ஷா கும்பல்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1935 மற்றும் 1965 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களே தாய்த்தமிழைக் காப்பாற்றியது.

1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தொடங்கி வைத்த கல்லூரி மாணவர்களின் எழுச்சியானது பள்ளி மாணவர்கள் இளைஞர்கள், தமிழ்நாட்டு மக்கள் என பற்றிப் பரவியது. இறுதியில், பொள்ளாச்சியில் இந்திய ராணுவம் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றதும் தமிழ்நாடு அரசின் போலீசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் முரண் ஏற்பட்டதும் தமிழ்நாடு மக்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறு ஆகும்.

வேறுவழியின்றி அன்றையகாலக்கட்டத்தில் பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி கட்டாய இந்தித் திணிப்பை திரும்பப் பெற்றார். கட்டாய இந்தித் திணிப்பை ஏற்காத மாநிலங்கள் இருக்கும் வரை அதை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார்.

ஆனால், அந்த உறுதிமொழிக்கு மாறாக கடந்த 57 ஆண்டுகளில் பல்வேறு வகைகளில் இந்தித்திணிப்பு படிப்படியாக கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஒரே சம்மட்டி அடியாக அடித்து அனைத்து தாய் மொழிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது மோடி அமித்ஷா பாசிச கும்பல். அதனால்தான் அமித்ஷாவின் தலைமையில் இருக்கக் கூடிய நாடாளுமன்ற நிலைக் குழுவானது இப்படிப்பட்ட ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலம், தாய் மொழி என்று மூன்று மொழிகளிலும் அனைத்து பத்திரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை இன்னொரு நிலைக்குழு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதையும் விரைவில் படிப்படியாக மாற்றி அனைத்து மாநிலங்களிலும் பத்திரப் பதிவுகள் மேற்கண்ட மூன்று மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம் என்பது இந்தியில் பத்திரப்பதிவு இருந்தால் போதும் என்ற நிலைக்கு வரலாம்.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து அரசுத்துறைகளிலும் திட்டமிட்டு வட நாட்டவர்களை நுழைத்து அதன் மூலம் தமிழர்களையும் தமிழையும் அரசுப்பணிகளில் இருந்து ஒழித்துக்கட்டும் வேலை தொடங்கி நடந்து வருகிறது.

சி.பி.எஸ்.இ என்று கூறப்படும் பள்ளிகளில் தமிழே தெரியாமல் எந்த ஒரு மாணவனும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

ஆக தமிழும் தமிழ்ப் பண்பாடும் தெரியாத தமிழர்களை உருவாக்கி அவர்களை தன்னுடைய இந்து ராஷ்டிரத்தை நோக்கிய பயணத்திற்கு ஆதரவாளர்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு.


படிக்க : “வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?


ஆரிய – பார்ப்பன, வேத எதிர்ப்பே தமிழ் – திராவிட பண்பாட்டின் அடிநாதம். நான்கு வர்ண, சாதி போன்ற இழிவான பண்பாட்டுக்கு எதிராக பல்வேறு இலக்கியங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் வகுத்தது திருவள்ளுவர், சித்தர் முதல் வள்ளலார், பெரியார் வரையிலான  தமிழ் – திராவிட பண்பாடு.

இந்து ராஷ்டிரத்தை நிறுவுவதில் அனைத்து தாய் மொழிகளையும் பல்வேறு இனக்குழுக்களின் பண்பாடு, உணர்வுகளையும் அழிப்பது என்பது ஒரு முக்கியமான மைல்கல். அதைக் கடப்பது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிச கும்பலின் இன்றைய முக்கியமான தலையாய கடமை.

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை. மாறாக இந்தித்திணிப்பு என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசத்தை நிறுவும் முயற்சிகள் அனைத்தையும்  தூளாக்கும் வகையில் நம்முடைய போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

அமித்ஷா குழுவின் இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க