Friday, May 29, 2020
முகப்பு செய்தி இந்தியா 1967 - தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை...

1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !

அமித் ஷாவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தென்னிந்தியர்கள் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

-

டந்த வாரம் கொண்டாடப்பட்ட இந்தி நாளின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உலக அளவில் இந்தியாவை அடையாளம் காட்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு மொழி தேவை. இந்தியாவை இணைப்பது இந்தி மொழியே என அவர் கூறியிருந்தார்.

அமித் ஷாவின் கருத்துக்கு பல தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில், ஒரு மொழியை திணிப்பதாக பலரும் எதிர்த்தனர். குறிப்பாக தென்னிந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர். #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய எதிர்ப்பை எழுதினர்.

அதுபோல, தென்னிந்திய தலைவர்களிடமிருந்து இந்தி திணிப்புக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. நாட்டில் இருக்கும் முக்கியமான பிரச்சினைகளை தீர்க்க முடியாமல், அவற்றை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு இத்தகைய சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டிருப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

இந்தி பேசாத தாய்மொழி பேசும் மக்களுக்கு எதிரான போர் பிரகடனம் இது என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் எழுதியுள்ள அவர், பல இடங்களில் எதிர்ப்பு கிளம்பியபோதும், தனது இந்தி அஜெண்டாவை கைவிட அமித் ஷா தயாராக இல்லை. சங்க பரிவாரம் பிரச்சினை தளங்களை திறக்கத் தயாராகி வருகிறது என்பதற்கான அறிகுறி இது எனவும் தாக்கியுள்ளார்.

“இந்தியாவை இந்தி இணைக்கிறது என்பது அபத்தமான கூற்று. அந்த மொழி இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் தாய்மொழி கிடையாது. அவர்கள் மீது இந்தியை திணிக்க முயற்சிப்பது அவர்களை அடிமைப்படுத்துவதற்குச் சமமானது.

படிக்க:
இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை
♦ இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

“தெற்கு, கிழக்கு, மேற்கிந்திய மக்கள் இந்தியை பேசுவதில்லை. இந்தியை அவர்களிடம் திணிப்பது, அவர்களுடைய தாய்மொழியை நிராகரிக்க கோருவதாகும். எந்தவொரு இந்தியரும் மொழி காரணமாக அந்நியப்படுவதாக உணரக்கூடாது. இந்தியாவின் வலிமையே பன்முகத்தன்மையை அது ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளது.

சங்க பரிவாரம் தனது பிளவுபடுத்தும் கொள்கைகளை கைவிட வேண்டும். இதில் உள்ள சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொள்வார்கள். உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் விதமாகவே இதுபோன்ற கருத்துக்கள் சொல்லப்படுகின்றன” எனவும் அவர் எழுதியுள்ளார்.

கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மக்களை பிரித்து மொழியின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்கும் முயற்சி இது என கண்டித்துள்ளார்.

“அமித் ஷாவின் ஒரு நாடு ஒரு மொழி கோட்பாடு இந்தியாவில் மொழியின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கும். 1967-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்த போராட்டங்களிலிருந்து பாஜக பாடங்களை கற்க வேண்டும்” என கேரள காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் கண்டித்துள்ளர்.

“நாட்டின் வளமான கலாச்சாரத்தை அழிப்பதன் மூலம் ஒரு மொழியையும் ஒரு கலாச்சாரத்தையும் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரல் இப்போது அமித் ஷாவின் வார்த்தைகள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது” என சி.பி.எம். கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“திமுக நிறுவனர் அண்ணா ஒரு முறை கூறினார், அதிகமான மக்களால் பேசப்படும் ஒரு மொழி, தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்றால், எங்கும் நிறைந்த காகம்தான் தேசிய பறவையாக இருந்திருக்க வேண்டும், மயில் அல்ல! தேசிய மொழியாக இந்தியை அறிவித்தால், அது இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும்” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தி திணிப்பை கண்டித்துள்ளார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
♦ 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

அமித் ஷாவின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரித்து கன்னட அமைப்புகள் சனிக்கிழமை ‘கருப்பு நாள்’ அனுசரித்தன. காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, “இந்தி தேசிய மொழி என்ற பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் கன்னடத்துக்கு உள்ள அதே நிலையை இந்தி அனுபவிக்கிறது” என தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி, சித்தராமையாவின் கருத்தை ஒட்டி, “கன்னடமும் அரசியலமைப்பில் இந்தி போன்ற அந்தஸ்த்தை அனுபவிப்பதால், நாடு முழுவதும் கன்னட திவாஸை எப்போது கொண்டாடுவீர்கள் என பிரதமரிடம் கேட்கிறேன்” என சொன்னதோடு, ‘கன்னடர்களும் கூட்டாட்சி அமைப்பின் ஒரு பகுதி என்பதை நினைவுகொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

இந்தி திணிப்புக்கு கர்நாடகத்தின் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இரண்டு நாள் அமைதிக்குப் பிறகு, கர்நாடகத்தை ஆளும் பாஜக அரசின் முதலமைச்சர் எடியூரப்பா, கன்னடம்தான் கர்நாடகத்தின் முதன்மையான மொழியாக இருக்கும் என கூறியுள்ளார். இந்தியை ஆதரித்தால் தனது ஆட்சியும் அரசியலுமே இருக்காது என பாஜகவினரும், தென்னிந்தியாவில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் நன்றாகவே அறிவர்.

அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸும்கூட இந்தி திணிப்பை எதிர்த்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். கொள்கை கூட்டாளியாகி ஆகிவிட்ட அதிமுக அடிமை அரசு மட்டும் கருத்து எதுவும் சொல்லாமல் அமைதி காக்கிறது.

வினவு செய்திப் பிரிவு
– அனிதா
நன்றி
: த வயர், தி இந்து. 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க