privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !

சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

-

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் மீது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்த நிலையில் மேலும் ஒரு மாணவி அதே குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

முன்னதாக சின்மயானந்த் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு கூறியிருந்த முதுகலை சட்டக்கல்லூரி மாணவி, ஆதாரங்களாக வீடியோக்களை வெளியிட்டார். அப்போது, தன்னைப் போல பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருடைய வாக்குமூலத்தையும் வெளியிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஷாஜஹான்பூரில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நிருபர்களிடம் பேசிய அவர், முன்னாள் மத்திய அமைச்சருக்கு எதிராக தன்னிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளதாகக் கூறினார்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலைமையிலும் ஆதாரங்களை வெளியிட்டு சின்மயானந்தை அம்பலப்படுத்தும் சட்ட மாணவி.

தன்னுடைய கண்ணாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் மூலம் சின்மயானந்தின் நடத்தைகளை பதிவு செய்து வைத்திருப்பதாகவும் பாஜகவில் உள்ள பெரிய ஆள் ஒருவர் சின்மயானந்தை பாதுகாத்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், ஓராண்டுகளுக்கும் மேலாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.

சின்மயானந்த் கும்பலிடமிருந்து உயிர் தப்பித்துச் சென்ற அவர், சமூக ஊடகங்களில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்லியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருந்த நிலையில் உத்தர பிரதேச போலீசு, இராஜஸ்தானில் இருந்த அவரை அழைத்து வந்தது.

அப்போது தன்னிடம் இருந்த வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை உ.பி. போலீசு பறித்துக்கொண்டதாக செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் தெரிவித்துள்ளார்.

“இது நடக்கும் என எனக்குத் தெரியும். எனவே, இன்னொரு நகலை என்னுடைய வீட்டில் வைத்திருந்தேன். உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவிடம் அதை இப்போது அளித்திருக்கிறேன்” என்றார் அவர்.

படிக்க:
குர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் !
♦ உ.பி. சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் !

சிறப்பு புலனாய்வு குழுவிடம் 43 வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை அளித்திருப்பதாகவும் செப்டம்பர் 23-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடங்கும்போது தன்னிடம் உள்ள மேலும் பல ஆதாரங்களை வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Chinmayanand_with-yogi
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சின்மயானந்தா(இடது).

“என்னைப் போலவே பாதிக்கப்பட்டுள்ள வேறொரு பெண்ணின் வாக்குமூலத்தையும் நான் பதிவு செய்துள்ளேன். அந்தப் பெண் இன்னமும் சின்மயானந்த் ஆசிரமத்தில் உள்ளார்.” என்றும் அவர் கூறினார்.

ஷாஜகான்பூரில் உள்ள ஆசிரம வளாகத்துக்குள் நான்கு கல்லூரிகள் இயங்குகின்றன. அதில் ஒன்று சட்டக் கல்லூரி. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் தன்னையும் தன்னைப் போன்ற மாணவிகளை குளிக்கும்போது படமெடுத்து, அதைக் காட்டி மிரட்டி, சின்மயானந்தா பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறுகிறார்.

சின்மயானந்த் என்ற பலம் பொருந்திய பாஜக சாமியாருக்கு எதிராக போராடி வரும் இந்தப் பெண்ணுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ளவர்களும் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.

“சின்மயானந்த் பாலியல் வக்கிரம் பிடித்தவன் என சொல்லிக்கொண்டிருந்தபோது, சின்மயானந்துடன் பழக்கம் உள்ள ஒரு அதிகாரி, அவரை பாதுகாப்பதில் குறியாக இருந்தார்.” என்கிற பெண்ணின் குற்றச்சாட்டை மற்றொரு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி அது உண்மைதான் என்கிறார்.

“சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள யாரோ ஒருவர் மூலமாக சின்மயானந்துக்கு நடக்கும் விவரங்கள் போகின்றன” என்கிறார் அவர்.

முதன்முதலில் இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டை விசாரித்த உ.பி. போலீசு முதல் வேலையாக அவர் கொடுத்த ஆதாரங்களை அழித்துள்ளது.

உத்தர பிரதேசத்தை ஆளும் சாமியார் ஆதித்யநாத் மீதுகூட பாலியல் வன்கொடுமை புகார் சொல்லிருந்தார் ஒரு பெண். உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ. ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொல்லவும் முயன்றது தேசிய செய்தியானது. இப்போது சின்மயானந்த் என்ற சாமியார் ஆசிரமம் என்ற பெயரில் பெண்களை தொடர்ச்சியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் தெரியவந்துள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் அரசாங்கம் என்றாகிவிட்ட பிறகு, இந்தக் கும்பலின் குற்றங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது…


கலைமதி
நன்றி
: டெலிகிராப் இந்தியா.