privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

சின்மயான்ந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.

-

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் மீது, பாலியல் துன்புறுத்தல் புகார் சொன்ன சட்ட மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

சின்மயான்ந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாகவும், தன்னிடம் தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட வீடியோவில் அவர் தெரிவித்திருந்தார்.

“சாமியார் சமூகத்தில் பெரிய தலைவர், பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்” என அந்த வீடியோவில் கூறியிருந்தார் அவர்.

Swami-Chinmayanand-with-Yogi-Aditynath
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் சின்மயானந்தா.

பிரதமர் மோடியிடமும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத்திடமும் உதவி கேட்டிருந்தார், பாஜக ரேப்பிஸ்டுகளை பாதுகாக்கும் கட்சி என்ற உண்மையறியாத அந்தப் பெண்.

“மோடிஜி, யோகிஜி எனக்கு உதவுங்கள். அவர் என்னுடைய குடும்பத்தை கொன்றுவிடுவதாக மிரட்டியிருக்கிறார். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவர் ஒரு சன்னியாசி, அவரிடம் போலீசு பலம் உள்ளதாகவும் அனைவரும் தன் பக்கம் உள்ளதாகவும் தன்னை யாரும் அசைத்துவிட முடியாது எனவும் சொல்கிறார். உங்கள் அனைவரிடமும் நான் நீதி கேட்கிறேன்” என்கிறார் வீடியோவில்.

இந்த வீடியோ வைரலான நிலையில் அதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்கிறார் மூத்த போலீசு அதிகாரி ஒருவர். சனிக்கிழமையிலிருந்து தங்களுடைய மகள் எங்கிருக்கிறார் என தெரியவில்லை என புகார் அளித்திருக்கிறார் அவருடைய தந்தை.

படிக்க:
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !
♦ பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

“என்னுடைய மகள் தனிப்பட்ட விசயங்களை எப்போதும் சொன்னதில்லை. ரக்சா பந்தனுக்கு வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கவலையாக இருந்தார். நான்கு நாட்களாக அவரைக் காணவில்லை. அவருடைய கல்லூரி இயக்குனர் சின்மயான்ந்துக்கு எதிராக புகார் அளித்தேன், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை.

“அவளுடைய போன் ஏன் அடிக்கடி ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படுகிறது என கேட்டபோது, என்னுடைய போன் நீண்ட காலம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தால் எனக்கு ஏதோ ஆபத்து என புரிந்துகொள்ளுங்கள் என சொன்னாள். என்னுடைய போன் என் கையில் இல்லாதபோதுதான் அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் எனவும் அவள் சொன்னாள்…அவளுடைய கல்லூரி நிர்வாகம் அவளை நைனிதாலுக்கு அனுப்பியதாகவும் அவள் சொன்னாள்” என்கிறார் பெண்ணின் தாய்.

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்க, சின்மயானந்த் தரப்பு புகாரிலிருந்து தப்பிக்க, சின்மயானந்திடம் ரூ. 5 கோடி கேட்டு யாரோ போனில் பேசியதாக போலீசில் புகார் அளித்திருக்கிறது.

வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்தவர் சின்மயானந்த், ஆர்.எஸ்.எஸ்.-பாஜகவின் நிழலில் சாமியாராக ஆசிரமம், கல்வி நிலையங்களை உருவாக்கி ராஜ்ஜியம் நடத்தியிருக்கிறார். 2011-ம் ஆண்டு இவருடைய ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண், இவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரை சொல்லியிருந்தார்.

அந்தப் புகாரில் தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்தப் பெண் கூறியிருந்தார். உயர்நீதிமன்றம் சென்ற சின்மயானந்த் கைதாவதிலிருந்து தப்பித்துக்கொண்டார். நிலுவையிலிருந்த அந்த வழக்கை சாமியார் ஆதித்யநாத் அரசு பதவிக்கு வந்தவுடன் திரும்பப் பெற்றுக்கொண்டது.

பாஜகவினர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சொல்லப்படுவது முதல் முறை அல்ல. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் தன்னிடம் பணி கேட்டு வந்த சிறுமியை கும்பல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். புகார் அளிக்கப்போன அவருடைய தந்தையை அடித்துக் கொன்றது உ.பி. போலீசு. செங்காரின் தொடர் அச்சுறுத்தலுக்கிடையே நீதிக்காக போராடிக்கொண்டிருந்த அவரைக் கொல்ல முயற்சி நடந்ததில் அவருடைய உறவினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்த ஆதித்யநாத்திடம்தான் நீதி கேட்கிறார் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண். நாடே உ.பி. உன்னாவ் சம்பவம் குறித்து கொந்தளித்துக்கொண்டிருந்தபோது அதுகுறித்து வாயைத் திறக்காத மோடியிடமும் நீதி கேட்டு கைகூப்புகிறார். பாஜக தலைவர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்காக நாடு தழுவிய அளவில் இழிபுகழ் பெற்றவர்கள். அரசு பதவியில் பாதுகாப்போடு குற்றங்களைச் செய்யும் அவர்களுக்கு எதிராக புகார் கூறுபவர்கள் காணாமல் போவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என்பதற்கு உ.பி.யில் நடந்துகொண்டிருப்பவைதான் உதாரணங்கள்.

கலைமதி
நன்றி :  தி வயர்.