RSY - Letter - Head - New

  • 5-வது, 8-வதற்கு இவ்வாண்டு முதல் பொதுத்தேர்வு அரசாணையை உடனே திரும்பப் பெறு!
  • இந்தியை திணிக்கும் அமித்ஷா பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்!

மிழக பள்ளிக் கல்வித்துறை இந்த கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது பிஞ்சு மாணவர்கள் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய வன்முறை. கிராமப்புறங்களைச் சார்ந்த பல லட்சம் ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றி, தொழிற்கல்விக்குத் தள்ளும் நவீன குலக்கல்வி. தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் முன்பே மோடி அரசின் அடிமையாக இருந்து தமிழக அரசு அரசாணை வழியாக நடைமுறைப்படுத்துகிறது.

public-exam-for-5th-and-8th-in-tamil-nadu

இந்த சதித் திட்டத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசு ஆணையை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. மோடி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ஏற்க முடியாது என்று நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்களும், பேராசிரியர்களும், மாணவர் அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்படும் முன்பே குறுக்கு வழியில் பல பரிந்துரைகளை அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது.

படிக்க:
கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் ? வேடிக்கைதான் …

என்.சி.இ.ஆர்.டி மூலம் பாடப் புத்தகங்களில் சாதி, மத கருத்துக்களை புகுத்துவது, ‘இந்தியாவில் படியுங்கள்’ திட்டத்திற்கும், மேன்மைதகு பல்கலைக்கழகங்கள் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்துவது, யூ.ஜி.சி சுற்றறிக்கை மூலம் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் தொழிற்படிப்புக்கான பட்ட வகுப்புகளை ஆரம்பிப்பது என பல விசயங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

அப்படித்தான் கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்புவரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இருந்ததில் திருத்தம் செய்து 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

minister_sengottaiyan
அமைச்சர் செங்கோட்டையன்

8 வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல், போதிய அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை போடாமல், அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் கொடுக்காமல், தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் இழுத்து மூடி, பள்ளிக்கல்வியை சீர்குலைத்துவரும் இவர்களுக்கு கல்வியின் தரத்தைப் பற்றிப் பேச  என்ன அருகதை இருக்கிறது? 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, பெருவாரியான மாணவர்களை பள்ளிக்கல்வியில் இருந்து விரட்டவே இந்த நடவடிக்கை.

இது மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை நாடு முழுவதும் பொது மொழியாக்க வேண்டும் என்று பேசுகிறார். இது பல்தேசிய இன்ங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். சமஸ்கிருதத்தை கொண்டு வருவதன் முதற்படியாக இந்தியை வன்முறையாக திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவைகளை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி மோடி – எடப்பாடி அரசுகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை எமது பு.மா.இ.மு ஆதரிப்பதோடு, முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

புமாஇமு
.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க