பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 06

ராணுவ பஸ்களின் வரிசை அதிகாலையிலேயே ஆரோக்கிய நிலைய முகப்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

பொத்தான்கள் போடாத சட்டையுடன் படிப்பலகையில் உட்கார்ந்திருந்த மேஜர் ஸ்த்ருச்கோவ் மாஸ்கோ நகர்ப்புறக் காட்சிகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் களி துள்ளியது. ஓயாது சுற்றித்திரியும் இந்தப் படைவீரர் இப்போது இயங்கிக் கொண்டிருந்தார். தமது வழக்கமான வாழ்க்கைமுறைக்கு வந்துவிட்டதாக அவர் உணர்ந்தார். ஏதோ விமானப்படைப் பிரிவுக்குப் போய்க் கொண்டிருந்தார் அவர். அது எது என அவர் இன்னும் அறியார். எனினும் வீட்டுக்குப் போவது போல் இருந்தது அவருக்கு. மெரேஸ்யெவ் ஒன்றும் பேசாமல் கலவரத்துடன் உட்கார்ந்திருந்தான். யாவற்றிலும் கடினமான சோதனை இனிமேல்தான் வரவிருக்கிறது என்று அவன் உணர்ந்தான். இந்தப் புதிய தடைகளைக் கடக்க அவனுக்கு இயலுமோ இயலாதோ, யார் கண்டார்கள்?

பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே மெரேஸ்யெவ் வேறு எங்கும் போகாமல், இராத்தங்கிடத்தைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மிரொவோல்ஸ்க்கியைத் தேடிச் சென்றான்.

அப்போது முதல் தோல்வி அவனுக்கு எதிர்பட்டது. அவன் இவ்வளவு பாடுபட்டுத் தனக்கு ஆதரவாளராக ஆக்கியிருந்த அவனது நலம் விழைபவர் அவசர வேலை நிமித்தமாக எங்கோ விமானத்தில் போயிருக்கிறார் என்றும் திரும்பக் கொஞ்சம் காலம் ஆகும் என்றும் தெரிந்தது. பொதுவான அறிக்கை எழுதித் தரும்படி அலெக்ஸேயிடம் சொன்னார்கள். அவன் அப்போதே ஆளோடி ஜன்னல் குறட்டில் அமர்ந்து அறிக்கை எழுதி முடித்தான். மெலிந்த சிறுகூடானமேனியும் களைத்த விழிகளும் கொண்ட துணைக் கமாண்டரிடம் அதைக் கொடுத்தான். அவர் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்வதாக வாக்களித்து இன்னும் இரண்டொரு நாள் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அலெக்ஸேய் கெஞ்சினான், மன்றாடினான், அச்சுறுத்தக்கூடச் செய்தான். துணைக் கமாண்டரோ, எலும்பு துருத்திய முட்டிகளை நெஞ்சுடன் அழுத்திக் கொண்டு வழக்கமான ஒழுங்கு அதுவே என்றும் அதை மீறுவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறிவிட்டார். உண்மையிலேயே எவ்விதத்திலும் உதவ அவர் திறனற்றவர் போலும். மெரேஸ்யெவ் கையை உதறிவிட்டு அப்பால் சென்றான்.

மருத்துவமனையில் இருந்த அன்யூத்தாவுக்கு போன் செய்தான். அவள் ஏதோ கவலையில் அல்லது வேலையில் ஆழ்ந்திருந்தாள் என்று குரலிலிருந்து புலப்பட்டது. எனினும் அவன் போன் செய்தது குறித்து மிகவும் மகிழ்வடைந்தாள். இந்த நாட்களில் அவன் தன் வீட்டில் தங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். தான் மருத்துவமனையிலேயே வசிப்பதாகவும் எனவே வீடு வெறுமையாயிருப்பதாகவும், அவனால் ஒருவருக்கும் இடநெருக்கடி ஏற்படாது என்றும் சொன்னாள்.

ஆரோக்ய நிலையத்தினர், வெளிச்சென்ற விமானிகளுக்கு ஐந்து நாள் உணவுப்பண்டங்களைக் கொடுத்திருந்தார்கள். எனவே அலெக்ஸேய் நெடு நேரம் சிந்திக்காமல் அன்யூத்தாவின் வீட்டுக்கு புறப்பட்டான். பிரமாண்டமான புதுக் கட்டிடங்களின் பின்னே முகப்பு வெளியின் மறுகோடியில் ஒண்டியிருந்தது அந்தச் சிறு வீடு. தங்க இடமும் உண்ண உணவும் இருந்தன. இப்போது காத்திருக்கலாம்.

பணியாளர் நியமன அலுவலகத்தில் ஆஜராவதற்கு முந்திய இரவு அலெக்ஸேய் நீள் சோபாவில் திறந்த விழிகளுடன் படுத்திருந்தான். புலர்போதில் எழுந்து முகம் மழித்துக் குளித்து விட்டு, அலுவலகம் திறந்ததுமே நிர்வாகப் பணித்துறை மேஜரிடம் முதலில் சென்றான். அவன் விதியை முடிவு செய்யும் அதிகாரம் இவருக்கே இருந்தது. இந்த மேஜரை அலெக்ஸேய்க்கு முதலிலிருந்தே பிடிக்கவில்லை. அலெக்ஸேயை கவனிக்காதவர் போல மேஜை அருகே நெடுநேரம் ஏதேதோ செய்து கொண்டிருந்தார். காகித அடுக்குகளை எடுத்துத் தம் முன்னே ஒழுங்காக வைத்தார். யாருக்கோ டெலிபோன் செய்தார். சொந்த விவரப் பத்திரங்களுக்கு எவ்வாறு எண்குறி இடவேண்டும் என்று தமது செயலாளிப் பெண்ணுக்கு விரிவாக விளக்கினார். அப்புறம் எங்கோ வெளியே போய்விட்டு வெகுதாமதமாகத் திரும்பி வந்தார். அதற்குள் அலெக்ஸேய்க்கு நீண்ட மூக்குள்ள அவருடைய நீட்டுப் போக்கான முகத்தைக் காணவே கரித்தது. முடிவில் மேஜர் காலண்டர் பக்கத்தைத் திருப்பினார். அப்புறந்தான் வந்தவனை ஏறிட்டுப் பார்த்தார்.

“நீங்கள் என்னைப் பார்க்க வந்தீர்களா, தோழர் சீனியர் லெப்டினன்ட்?” என்று தன்னம்பிக்கை தொனிக்கும் கட்டைக் குரலில் வினவினார்.

மெரேஸ்யெவ் தன் விவகாரத்தை விளக்கினான்: அவனுடைய பத்திரங்களை எடுத்துத் தரும்படி செயலாளியிடம் கேட்டார் மேஜர். அவள் கொடுத்ததும் “சொந்த விவகாரங்களைப் படிக்கத் தொடங்கினார். கால்கள் வெட்டி எடுக்கப்பட்டது பற்றிய கட்டம் வந்ததும் போலும், அவர் அலெக்ஸேய்க்கு நாற்காலியைக் காட்டினார் “என்ன, நிற்கிறீர்களே, உட்காருங்கள்” என்பது போல. அப்புறம் மறுபடி காகிதங்களில் ஆழ்ந்துவிட்டார். கடைசிப் பக்கத்தைப் படித்து மடித்ததும், “என்னதான் வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?” என வினவினார்.

“சண்டை விமானப் படை ரெஜிமென்டில் நியமனம் பெற விரும்புகிறேன்.”

மேஜர் நாற்காலியில் சாய்ந்து, எதிரே இன்னமும் நின்று கொண்டிருந்த விமானியை வியப்புடன் உற்று நோக்கி, தாமே அவன் பக்கம் நாற்காலியை நகர்த்தினார். அவருடைய அகன்ற புருவங்கள் எண்ணெய் வழிந்து மழமழப்பாயிருந்த நெற்றியில் இன்னும் மேலே சென்றன.

“ஆனால் உங்களால் விமானம் ஓட்ட முடியாதே?”

“முடியும், ஓட்டுவேன். பரீட்சார்த்தமாக என்னைப் பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புங்கள்” என்று மெரேஸ்யெவ் அநேகமாமக் கத்தி விட்டான். அடக்க முடியாத விழைவு அவன் குரலில் ஆர்த்தது. பக்கத்து மேஜையின் அருகே உட்கார்ந்திருந்த இராணுவத்தினர், சாமள நிறமான இந்த அழகிய இளைஞன் இவ்வளவு பிடிவாதமாக என்ன வேண்டுகிறான் என்று புரிந்துகொள்வதற்காக நிமிர்ந்து பார்த்தார்கள்.

“ஆனால் கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும்? வேடிக்கைதான்… எங்குமே கண்டதில்லை இதை. உங்களுக்கு யார்தாம் அனுமதி தருவார்கள்?” – தனக்கு முன்னே இருப்பவன் எவனோ வெறியன், ஒருவேளை பைத்தியக்காரன் போலும் என்று நினைத்தார் மேஜர்.

அலெக்ஸேயின் சீற்றம் பொங்கும் முகத்தையும் வெறித்த விழிகளையும் ஓரக் கண்ணால் பார்த்துவிட்டு, முடிந்தவரை மென்மையாகவே பேச அவர் முயன்றார்.

“இதை எங்குமே கண்டதில்லைதான், ஆனால் இதை எல்லோரும் காண்பார்கள்!” என்று விடாப்பிடியாக அழுத்திக் கூறினான் மெரேஸ்யெவ். தன் குறிப்பு நோட்டுப் புத்தகத்திலிருந்து ஸெல்லோபேன் காகிதத்தில் சுற்றியிருந்த பத்திரிக்கைத் துணுக்கை எடுத்து மேஜருக்கு முன்னே மேஜைமேல் வைத்தான்.

பக்கத்து மேஜைகளின் அருகே இருந்த இராணுவத்தினர் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு இந்த உரையாடலை உற்றுக் கேட்கலானார்கள். ஒருவன் ஏதோ காரியமாகப் போல மேஜரை நெருங்கி, நெருப்புப் பெட்டி கேட்டு வாங்கிக் கொண்டு மெரேஸ்யெவின் முகத்தை ஜாடையாகப் பார்த்தான். மேஜர் கட்டுரை மீது கண்ணோட்டினார்.

“இது எங்களுக்குப் பிரமாணம் ஆகாது. எங்களுக்குக் கட்டளை உள்ளது. விமானப் படைக்கு ஏற்ற தகுதி பற்றிய எல்லாத்தரங்களும் அதில் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. இரண்டுகால்களும் அல்ல, இரண்டே விரல்கள் மட்டும் உங்களிடம் குறைவாயிருந்தால் கூட விமானம் ஓட்ட உங்களை அனுமதிக்க என்னால் முடியாது. உங்கள் பத்திரிக்கைத் துணுக்கை எடுத்துக் கொள்ளுங்கள். இது சான்று அல்ல. உங்கள் விழையை மதிக்கிறேன், ஆனால்….”

தனக்குள் கோபம் மண்டி எழுவதை உணர்ந்தான் மெரேஸ்யெவ். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் அவன் மைக்கூட்டை எடுத்து பளிச்சிடும் அவரது முன் வழுக்கை மண்டையில் எறிந்து விடுவான் போலிருந்தது. சிரமத்துடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “இதுவோ?” என்று கம்மிய குரலில் கேட்டான்.

முதல் வரிசை இராணுவ மருத்துவரின் கையொப்பம் உள்ள காகிதத்தை – தன் கடைசி வாதத்தை – மேஜைமேல் வைத்தான்.

மேஜர் அந்தக் குறிப்பைச் சந்தேகத்துடன் எடுத்துப் பார்த்தார். அது உரிய முறையில் எழுதப்பட்டிருந்தது, இராணுவ மருத்துவப் பணித்துறையின் பெயர்க்குறியுடன் முத்திரை இடப் பட்டிருந்தது. விமானப் படையினரால் மதிக்கப்பட்ட மருத்துவரின் கையொப்பம் அதன் அடியில் இருந்தது. மேஜர் அதைப் படித்த பின் அதிகப் பரிவு காட்டலானார். இல்லை, எதிரே இருந்தவன் பைத்தியக்காரன் அல்ல. இந்த அசாதாரண இளைஞன் மெய்யாகவே கால்களின்றி விமானம் ஓட்டத் திட்டமிட்டிருக்கிறான். ஆழ்ந்த போக்கும் செல்வாக்கும் கொண்ட இராணுவ மருத்துவரையும் இவன் எப்படியோ நம்ப வைத்திருக்கிறான்.

“இருந்தாலும், நான் எவ்வளவு தான் விரும்பிய போதிலும், என்னால் முடியாது” என்று பெருமூச்சு விட்டு மெரேஸ்யெவின் விவரப்பத்திரத்தை அப்பால் நகர்த்தினார் மேஜர். “முதல் வரிசை இராணுவ மருத்துவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எங்களிடம் தெளிவான, திட்டவட்டமான உத்தரவு இருக்கிறது. அதிலிருந்து பிறழ்வதற்கு இடமே கிடையாது…. நான் இதை மீறினால் அப்புறம் பதிலளிப்பது யார், இராணுவ மருத்துவரா?” என்றார்.

வயிறார உண்ட, சுயதிருப்தி நிறைந்த இந்த மனிதரை, மட்டுமீறிய தன்னம்பிக்கையும் நிம்மதியும் மரியாதைப் பாங்கும் கொண்டவரை அலெக்ஸேய் வெறுப்புடன் நோக்கினான். அவருடைய கச்சிதமான உடுப்பின் துப்புரவான கழுத்துப் பட்டையையும் மயிரடர்ந்த கைகளையும், கவனமாகக் கத்தரிக்கப்பட்ட அழகற்ற பெரிய நகங்களையும் அருவருப்புடன் பார்த்தான். இந்த ஆளுக்கு விளக்குவது எப்படி? இவரால் புரிந்து கொள்ள முடியுமா? விமானச்சண்டை என்றால் என்ன என்று அறிவாரா இவர்? துப்பாக்கி வெடியைக் கூட அவர் வாழ்நாளில் ஒரு போதுமே கேட்டிருக்க மாட்டார். உணர்ச்சிகளை மிகச் சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு, “அப்போது நான் என்ன செய்வது?” என்று தெளிவற்ற குரலில் கேட்டான்.

படிக்க:
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

“நீங்கள் கட்டாயமாக விரும்பினால், அணியமைப்புத் துறைத் தேர்வுக் குழுவிடம் நான் உங்களை அனுப்பலாம். ஆனால் உங்கள் பாடெல்லாம் வீணே ஆகும் என்று எச்சரிக்கிறேன்.” இவ்வாறு கூறித் தோட்களைக் குலுக்கினார் மேஜர்.

“அட எக்கேடு கெட்டாலும் சரி. எழுதுங்கள் குழுவுக்கு!” என்று கரகரத்த குரலில் சொல்லிவிட்டுத் தொப்பென்று நாற்காலியில் உட்கார்ந்தான் அலெக்ஸேய்.

அலுவலகங்களை அவன் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றி வருவது இவ்வாறு தொடங்கியது. கழுத்தளவு வேலை நெருக்கடியில் மூழ்கியிருந்த களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள். உண்மையிலேயே அவர்களால் என்ன செய்திருக்க முடியும்? உத்தரவு, தலைமை அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, முற்றிலும் சரியான உத்தரவு இருந்தது. பல ஆண்டுகளாக வழங்கிவந்த மரபுகள் இருந்தன. அவற்றை மீறுவது எப்படி? அதிலும் சந்தேகத்துக்கே இடமற்ற இம்மாதிரி விஷயத்தில், போர்ச் செயலுக்காகத் துடித்துக் கொண்டிருந்த, வெறுமே இருக்க முடியாத இந்த அங்கவீனன் மேல் எல்லோருக்கும் உளமார்ந்த இரக்கம் உண்டாயிற்று. “முடியாது” என்று வெட்டொன்று துண்டிரண்டாக அவனிடம் சொல்ல எவருக்கும் நா எழவில்லை. பணியாளர் நியமன அலுவலகத்திலிருந்து அணியமைப்பு அலுவலகத்துக்கு, ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கு அனுப்பப்பட்டான். அவன் மீது பரிவு கொண்டு அதிகாரிகள் அவனைத் தேர்வுக் குழுவிடம் அனுப்பி வைத்தார்கள்.

மறுதலிப்புகளோ, அறிவுறுத்தும் தொனியோ, இகழ்வுபடுத்தும் அனுதாபமும் தயையுமோ (இவற்றுக்கு எதிராக அவனது தன்மானம் மிக்க ஆன்மா அனைத்தும் பொங்கி எழுந்தது எனினும்) இப்போது மெரேஸ்யெவுக்குக் கட்டுக் கடங்காத கோபம் உண்டாகவில்லை. தன்னைக் கட்டுக்குள் வைத்திருக்க அவன் பழகிக்கொண்டான். மனுதாரனின் தோரணையை மேற்கொண்டான். சில சமயங்களில் ஒரே நாளில் இரண்டு மூன்று மறுதலிப்புக்களைப் பெற்ற போதிலும் நம்பிக்கையைக் கைவிட அவன் விரும்பவில்லை. பத்திரிக்கைத் துணுக்கும் இராணுவ மருத்துவரின் முடிவும் அடிக்கடி பையிலிருந்து எடுக்கப்பட்டமையால் நைந்து மடிப்புக்களில் விட்டுப்போயின. எண்ணெய்த் தாளில் அவற்றை ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க