நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 13

கிர்யூஷ்கின் சந்தில் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீஸ்காரன், அந்தப் பேயைக் குற்றம் இழைக்கப்பட்ட இடத்திலேயே, முன்பு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்து விட்டுத் தற்போது ஓய்வு பெற்றிருந்த இசைஞன் ஒருவன் மேலிருந்து ப்ரீஸ் கோட்டை அது உருவப்பார்த்த சமயத்தில், லபக்கெனக் காலரைப் பற்றிக் கையும் மெய்யுமாகப் பிடித்துவிட்டான். காலரைப் பற்றிப் பிடித்தவன், கூப்பாடு போட்டு இன்னும் இரண்டு போலீஸ்காரர்களை உதவிக்கு அழைத்து, திருட்டுப் பேயைப் பிடித்துக் கொள்ளும்படி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு, ஆயுளில் ஆறுமுறை கடுங்குளிர் தாக்கி மரத்துப் போயிருந்த மூக்கு மறுபடியும் விறைத்துப் போகும் முன் சூடேற்றுவதற்காக, காலணிக்குள் வைத்திருந்த பொடி டப்பியை எடுத்துத் திறந்தான்; அந்தப் பொடி பேயால் கூடத் தாங்க முடியாத அளவு காட்டமானது போலும்.

போலீஸ்காரன் வலது நாசித்துவாரத்தை விரலால் அழுத்திக்கொண்டு இடது நாசித்துவாரத்துக்குள் அரைக்கையளவு மூக்குத்தூளை உறிஞ்சி இழுப்பதற்குள் பேய் பலமாகத் தும்மிய தும்மலில் மூவர் கண்களிலும் சளி சிதறிவிட்டது. அவர்கள் கண்களைத் துடைத்துக்கொள்வதற்காக முட்டிகளை உயர்த்திய போது பேய் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போய்விடவே, அது தங்கள் கைகளில் உண்மையாகவே பிடிபட்டதா இல்லையா என்று அவர்களுக்கே புரியவில்லை. அது முதல் போலீஸ்காரர்களுக்குப் பேய் என்றாலே குலை பதறலாயிற்று, எனவே அவர்கள் உயிருள்ளவர்களைக் கூடக் கைது செய்வதற்கு அஞ்சி, தொலைவிலிருந்த படியே, “யாரடா அது, டேய்! வழியைப் பார்த்து நட, ஊம்!” என்று அதட்டுவதோடு நிறுத்திக் கொண்டார்கள். எழுத்தனின் பேயோ, கலீன்கின் பாலத்துக்கு அப்பாலும் வளையவரத் தொடங்கி, பயந்த சுபாவமுள்ள மக்கள் எல்லாருக்கும் கலவரமும் திகிலும் விளைவித்தது.

முற்றிலும் உண்மையான இக்கதைக்கு அதிசயத் திருப்பம் ஏற்பட மெய்யாகவே காரணமாயிருந்த முக்கிய நபரை நாம் ஒரேயடியாக மறந்து விட்டோமே. முதலாவதாக ஒரு விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுவது நியாயமாக நமது கடமை எனக் கருதுகிறோம். அதாவது தான் கடுமையாக விளாசிய அக்காக்கிய் அகன்ற பின்பு முக்கிய நபருக்கு மனத்தை என்னவோ செய்தது. பிறர்மீது அனுதாபம் அவரது இயல்புக்குப் புறம்பானதல்ல; அவருடைய இதயத்தில் பரிவுள்ள தூண்டல்கள் பல எழுவதுண்டு; அவரது பதவிதான் அவற்றை வெளிக் கிளம்பவொட்டாமல் தடுத்து விடும். தாம் நீண்ட காலமாகப் பார்க்காத நண்பர் சென்றதுமே முக்கிய நபருக்கு பாவம் அக்காக்கியைக் குறித்துக் கவலைகூட உண்டாயிற்று.

படிக்க:
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

அன்று முதல், சோகை பிடித்த அக்காக்கியின் உருவம், அதிகாரபூர்வமான கடிந்துரையைத் தாங்கத் திறனற்ற அந்த எழுத்தனின் உருவம், அவர் மனத்தைவிட்டு அகலவே இல்லை. அவனைப் பற்றிய எண்ணம் உள்ளத்தை ஒரேயடியாக உலப்பவே, அவர் தமது எழுத்தர்களில் ஒருவனை அக்காக்கிய் வீட்டிற்கு அனுப்பி, அவன் எப்படி, என்ன நிலையில் இருக்கிறான், அவனது கோட்டு கிடைத்து விட்டதா, அவனுக்கு உண்மையாகவே உதவி செய்ய முடியுமா முடியாதா என்று தெரிந்துவரச் சொன்னார். அக்காக்கிய் ஜுரம் காரணமாகத் திடீர் மரணம் எய்தியதை அறிந்ததும் அவருடைய மனச்சாட்சி நாள் பூராவும் அவரை உறுத்தியது, அவர் நிம்மதியின்றி உழன்றார். கொஞ்சம் உற்சாகம் பெறும் பொருட்டும் மகிழ்வற்ற நினைவுகளை மறக்கும் நோக்கத்துடனும் அவர் மாலையில் தமது நண்பர் ஒருவர் இல்லத்துக்குச் சென்றார். அங்கே நிறையப் பெயர் குழுமியிருப்பதையும், அதையும் விட மேலாக அவர்கள் எல்லாரும் அநேகமாகத் தமக்குச் சமமான பதவி வகிப்பவர்களே, எனவே தாம் கட்டிப்போட்டது போலிருக்கத் தேவையில்லை என்பதையும் கண்டார்.

இதனால் அவரது மன நிலைமையில் அற்புதமான மாறுதல் விளைந்தது. அவர் தங்கு தடையின்றி எல்லாருடனும் கலகலவென்று பழகினார், சுமுகமாகப் பேசினார், அன்பொழுக அளவளாவினார், மாலைப் பொழுதை இன்பமாகக் கழித்தார். சாப்பாட்டின் போது இரண்டு கிளாஸ் ஷாம்பெயின் அருந்தினார் – துன்ப நினைவுகளை அகற்ற இது கைகண்ட மருந்து என்பது யாவரும் அறிந்ததே. அன்றிரவைக் கழிப்பது பற்றிய அவரது திட்டம் ஷாம்பெயின் காரணமாகச் சற்று மாறுதல் அடைந்தது, அதாவது, உடனே வீட்டுக்குப் போகாமல், தமது தோழியான கரோலினா இவானொவ்னா என்ற சீமாட்டியின் (இவள் ஜெர்மானிய வமிசத்தில் வந்தவள் என்று தோன்றுகிறது; முக்கிய நபர் இவளுடன் மிகமிக நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்) வீட்டுக்குச் செல்வது என்று தீர்மானித்தார்.

முக்கிய நபர் இளைஞர் அன்று என்பதையும், நல்ல கணவர், குடும்பப்பற்றுள்ள தகுந்த தந்தை என்பதையும் இங்கே சொல்லிவிட வேண்டும். இரண்டு மகன்களும் (அவர்களில் ஒருவன் அரசாங்க ஊழியன்), அழகிய தோற்றமுள்ள பதினாறு வயதுப் பெண்ணும் (இவளுடைய மூக்கு ஒரு சொல்லுக்கு வளைவானதென்றாலும் பார்வைக்கு நன்றாயிருந்தது) தினந்தோறும் காலையில் அவரிடம் வந்து, அவர் கையை முத்தமிட்டு, “bonjour, papa” என்று பிரெஞ்சு மொழியில் வணக்கம் தெரிவிப்பார்கள். இன்னும் இளமை குன்றாமலும் கண்ணுக்கு லட்சணமாயுமிருந்த அவரது மனைவி முதலில் தம் கையை அவர் முத்தமிடுவதற்காக நீட்டிவிட்டு அப்புறம் அதைத் திருப்பி அவர் கையை முத்தமிடுவாள். முக்கிய நபர் மெல்லியல்பு வாய்ந்த இக்குடும்பப்பழக்கங்களால் மன நிறைவு கொண்டிருந்த போதிலும், நகரின் வேறொரு பகுதியில், வெறுமனே நட்புக்காக மட்டும் தோழி ஒருத்தியை வைத்துக் கொள்வது முறையே எனக் கருதினார். இந்தத் தோழி அவருடைய மனைவியைக் காட்டிலும் இளமையானவளும் அல்லள், அழகியும் அல்லள்; ஆயினும் இம்மாதிரி விஷயங்கள் உலகில் நடப்பது இயல்புதானே, அவற்றைப் பற்றித் தீர்ப்புக் கூறுவதற்கு நாம் யார்?

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. கடைசி பாகம் »

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க