நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 14

க, முக்கிய நபர் நண்பர் வீட்டு மாடிப்படி இறங்கி வந்து, ஸ்லெட்ஜில் அமர்ந்து, “கரோலினா இவானொவ்னா வீட்டுக்கு விடு” என வண்டிக்காரனிடம் சொல்லி விட்டு, கதகதப்பான மேல்கோட்டால் உடம்பை இதமாகப் போர்த்திக்கொண்டு, இன்பமான மனநிலையில் திளைக்கலானார் (ருஷ்யனுக்கு இத்தகைய மனநிலையை விட மேலானது எதையும் கற்பனை செய்யவே இயலாது; அதாவது நாமாக எவ்விஷயத்தைப் பற்றியும் சிந்திக்காமல், ஒன்றை விட ஒன்று இன்பகரமான எண்ணங்கள் தாமே அகத்தில் எழுந்து விரைய, நாம் அவற்றைத் தொடரவோ தேடவோ கூடச் சிரமப்படத் தேவையற்ற நிலை இது). மிகுந்த மன நிறைவு கொண்டவராய், அன்று மாலையில் நடந்த களி தரும் நிகழ்ச்சிகள் அனைத்தையும், சிறிய நண்பர் குழாம் கொல்லெனச் சிரிக்கும்படி கூறப்பட்ட வேடிக்கைப் பேச்சுக்கள் எல்லாவற்றையும், எளிதில் நினைவு கூர்ந்து, அவற்றில் சிலவற்றை வாய்க்குள்ளாகவே திரும்பச் சொல்லிப் பார்த்து, அவை முன்போலவே நகைப்பூட்டுவதைக் கண்டு மகிழ்ந்தார்.

ஆகவே, அவர் வழிநெடுகப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக் கொண்டிருந்ததில் விந்தை எதுவும் இல்லை. சுழன்று சுழன்றடித்த காற்றுதான் எப்போதாவது அவரது களிப்பை இடை முறித்தது; எங்கிருந்தோ, என்ன காரணத்திற்கோ குப்பென்று வீசிய காற்று, அவர் முகத்தை வெட்டிச் செல்லும், அதன்மீது வெண்பனிச் சிதறல்களை அப்பும், அவரது கோட்டுக் காலரைக் கப்பற் பாய் போன்று உப்பச் செய்யும், அல்லது சட்டென இயற்கைக்கு மீறிய விறலுடன் அதைத் தூக்கி அவர் தலையை மூடுமாறு எறியும்; தலையைக் காலருக்குள்ளிருந்து விடுவிப்பதற்கு அவர் படாதபாடு படும்படிப் புரியும். தம் கோட்டுக் காலரை யாரோ மிக இறுகப் பற்றுவதைத் திடீரென உணர்ந்தார் முக்கிய நபர். திரும்பிப் பார்த்தவர், பழைய, நைந்த எழுத்தனது உடுப்பணிந்த குட்டையான ஆள் ஒருவனைக் கண்டார். அவன் அக்காக்கிய் என அடையாளந் தெரிந்துகொண்டதும் அவருக்குப் பெரும் பீதியுண்டாயிற்று.

அவனது முகம் வெண்பனி போன்று வெளேறென்று, பிரேதம் போலக் காணப்பட்டது. இறந்தவனின் முகம் விகாரமாகக் கோணுவதைப் பார்த்ததுமே முக்கிய நபரின் பீதி எல்லை கடந்து போயிற்று. அக்காக்கிய் அக்காக்கியெவிச்சின் பேய், சவக்குழியின் பயங்கரச் சுவாசத்தை அவர் மீது விட்டவாறு பேசியது: “ஓகோ! நீயா! அகப்பட்டுக் கொண்டாயா கடைசியில்! முடிவில் உன்னை வசமாகப் பிடித்துக்கொண்டு விட்டேன், அப்படித் தானே! உன்னுடைய மேல்கோட்டுதான் எனக்கு வேண்டும்! என் மேல்கோட்டைப் பற்றிக் கவலையெடுத்துக் கொள்ளாதது மட்டுமன்று, பிரமாதமாக அதட்டி உருட்ட வேறு செய்தாயே – கொடு இப்படி, உன்னுடைய மேல்கோட்டைக் கழற்றி!” என்றது.

பாவம் முக்கிய நபரின் உயிர் தொண்டைக்குழிக்கு வந்துவிட்டது. அலுவலகத்தில் பொதுவாகக் கீழ்நிலை ஊழியர்களுக்கு எதிரில் அவர் படுவிறைப்பாக இருப்பவர் தாம், அவருடைய ஆண்தகைமை வாய்ந்த தோற்றத்தையும் உடற்கட்டையும் ஒரு பார்வை பார்த்ததுமே “அடேயப்பா, என்ன மிடுக்கு!” என எல்லாருமே சொல்லுவார்கள் என்றாலும், வீர வடிவமைப்பு கொண்ட வேறு பலரைப் போன்றே அவரும் இப்போது ஒரே கிலியடித்துப்போய், மாரடைப்பு வந்துவிடுமோ எனக் காரணத்துடனேயே கலவரமடைந்தார். மேல் கோட்டைத் தாமாகவே கழற்றிக் கடாசிவிட்டு வண்டியோட்டியை விளித்து, “வீட்டுக்கு விடு, நாற்கால் பாய்ச்சலில்!” என உத்தரவிட்டார்.

படிக்க:
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

வழக்கமாக அவர் நெருக்கடியான சமயங்களில் தான் இவ்வாறு கட்டளையிடுவார். ஆதலாலும் சொற்களைக் காட்டிலும் மிக வலிமை வாய்ந்த வேறு முறைகளைச் சில வேளைகளில் பயன்படுத்துவார் ஆதலாலும், வண்டிக்காரன் பாதுகாப்பின் பொருட்டுத் தலையைத் தோள்களுக்கிடையே இடுக்கிக் கொண்டு, சாட்டையை வீசி, அம்புப் பாய்ச்சலில் குதிரைகளை விரட்டினான். ஆறே நிமிடங்களுக்குச் சற்றுக் கூடுதலான நேரத்திற்குள் முக்கிய நபர் தம் வீட்டுவாயில் போய்ச் சேர்ந்தார்.

வெளிறி, அரண்டு போய், மேல்கோட்டு இன்றி, கரோலினா இவானொவ்னாவிடம் செல்வதற்குப் பதில் தன் வீடு சேர்ந்து, எப்படியோ தட்டுத் தடுமாறி அறைக்குப் போனவர், இரவு முழுவதையும் நிம்மதியில்லாமல் கழித்தார். மறுநாள் காலையுணவு நேரத்தில் அவருடைய புதல்வி, “உங்கள் முகம் இன்று ஏனப்பா ஒரேயடியாக வெளுத்துப் போயிருக்கிறது?” என்று பச்சையாகவே கேட்டு விட்டாள். அவரோ, பேசாவாயராய், முந்திய நாள் தனக்கு என்ன நேர்ந்தது, தான் போயிருந்தது எங்கே, செல்ல விரும்பியது எங்கே என்பதையெல்லாம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறாமல் கம்மென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சி அவர் உள்ளத்தில் ஆழப்பதிந்தது. இப்போதெல்லாம் அவர் தமது கீழ்நிலை ஊழியர்களிடம், “எப்படி ஐயா உமக்குத் துணிச்சல் வந்தது? யாரிடம் பேசுகிறோம் என்று தெரியுமா ஐயா உமக்கு?” என்று சொல்வது அரிதாகவே தான். அப்படியே சொன்னாலுங்கூட விஷயம் என்ன என்று எதிராளி விளக்கிய பின்பே.

இதைவிட வியப்பளிக்கும் சேதி என்னவென்றால் எழுத்தனின் பேய் நடமாடுவது அத்துடன் முற்றிலும் நின்று போயிற்று என்பதுதான். ஜெனரலின் மேல்கோட்டு அதற்கு நன்கு இசைந்துவிட்டது போலும்; குறைந்தபட்சம் இதற்குப் பின் யாருடைய மேல்கோட்டும் பறிக்கப்பட்டதாகப் புகார் வரவில்லை. ஆம், துருதுருவென்று வம்புக்கு அலையும் சில உற்சாகப் பேர்வழிகள் மட்டும் நகரின் வெளிப்புறப் பகுதிகளில் எழுத்தனின் பேயினுடைய நடமாட்டம் இன்னும் இருந்து வருவதாகச் சாதித்தார்கள்.

உண்மையில் கலோம்னாவைச் சேர்ந்த போலீஸ்காரன் ஒருவன் அந்தப் பேய் ஒரு வீட்டின் பின்பக்கத்திலிருந்து வருவதைத் தன் கண்களாலேயே கண்டான்; ஆனால் அவன் பலவீனமான உடலினன் (ஒரு தடவை வீட்டுக்குள்ளிருந்து பாய்ந்து வந்த சாதாரணப் பன்றிக் குட்டியொன்று அவனைக் காலை வாரி விழத் தட்டிவிட்டது; சுற்றிலும் நின்று கொண்டிருந்த வண்டிக்காரர்கள் அதைப் பார்த்து வாய்விட்டுக் கெக்கலி கொட்டி நகைக்கவே அவன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அரைக் கோப்பெக் அபராதம் – பொடி வாங்கும் பொருட்டு – விதித்தான்). ஆதலால் பேயைத் தடுத்து நிறுத்தத் துணியாமல், இருளில் அதைத் தொடர்ந்து சென்றான். கடைசியில் பேய் திரும்பிப் பார்த்து, சட்டென நின்று, “உனக்கு என்ன கேட்கிறது?” என்று வினவி, உயிருள்ளவர்களிடம் பார்க்கவே முடியாத அளவு பெரிய முட்டியைக் காட்டியது. போலீஸ்காரன், “ஒன்றுமில்லை” எனச் சொல்லிவிட்டு அக்கணமே திரும்பி நடையைக் கட்டினான். ஆனால் இந்தப் பேய் மிக மிக அதிக உயரமாக இருந்ததாம், அடர் மீசை வைத்திருந்ததாம்; ஒபுகோவ் பாலத்தின் பக்கமாகப் போய் இரவின் இருளில் மறைந்துவிட்டதாம்.

(முற்றும்)

« முந்தைய பாகம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க