2019 டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி (2020 ஜனவரி 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில்) இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 6 அரசு மருத்துவனைகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் மரணித்துள்ளதாக ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. மத்தியப்பிரதேசத்தின் ஷாடோல் (Shahdol) நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 13-ம் தேதி நள்ளிரவில் மட்டும் 6 பழங்குடி குழந்தைகள் இறந்ததுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் எடுத்து பார்த்தால் 2018-ல் மட்டும் 7,21,000 கைக்குழந்தைகள் அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1,975 பிஞ்சுக்குழந்தைகள் மடிந்துள்ளனர்.

முதன்மை சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை, சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதில் உள்ள குறைபாடுகள், போக்குவரத்து வசதி குறைபாடுகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு சிக்கல்கள் சேர்ந்து அதிகப்படியான மரணங்களுக்கு வித்திட்டதாக மம்தா (MAMTA) அரசு சாரா தாய் சேய் நல நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் குழந்தைகள் நல மருத்துவருமான சுனில் மெஹ்ரா கூறுகிறார்.

அதிக கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் பீகார், ஜார்கண்டு, உத்திரப்பிரதேசம், உத்தர்காண்டு, இராஜஸ்தான், ஒடிசா, சத்திஸ்கர் மற்றும் அஸ்ஸாம் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும், சமீப காலமாக கைக்குழந்தைகள் மரண செய்திகளில் அடிப்படும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும், நாட்டிலேயே மிகக்குறைவான கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலங்களிலும் ‘இந்தியா ஸ்பெண்ட்’ ஆய்வினை நடத்தியது.

சுகாதார உள்கட்டமைப்பு, மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, தாயின் உடல்நலம் பராமரிப்பு மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் மோசமான தரம் கைக்குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதை இந்த ஆய்வு காட்டுகிறது.

கைக்குழந்தைகளின் மரணம் என்பது வெறுமனே மருத்துவரீதியான அம்சங்களை விட, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு போன்ற ஆழமான சமூக சிக்கல்களின் அறிகுறியாக இருப்பதாக டெல்லியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தீபா சின்ஹா ​​தெரிவித்தார். நுரையீரல் அழற்சி போன்ற எளிதில் சிகிச்சையளிக்கப்படக் கூடிய நோய்த்தொற்றுகளால் பெரும்பாலான குழந்தைகள் மரணிப்பது என்பது முதன்மையாக சிதிலமடைந்த சுகாதார கட்டமைப்பையே காட்டுகிறது என்று மேலும் அவர் கூறினார்.

கைக்குழந்தைகள் இறப்பில் உலக சாரசரியான 1000-க்கு 39 என்பதை விட சற்றே குறைவாக 1000-க்கு 37 ஆக இந்தியாவில் இருக்கிறது. அதே நேரத்தில் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. 2017-ம் ஆண்டின் தரவுகள் படி 37 குழந்தைகளில் 33 குழந்தைகள் ஒரு வயதாகும் முன்பாகவே மடிகின்றன.

படிக்க:
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இறப்பு குறைந்து வந்திருந்தாலும் இந்தியா முழுவதும் அதனுடைய தாக்கம் என்பது சமூக பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. நாகலாந்தில் இறப்பு விகிதம் 7, கோவாவில் 9, கேரளாவில் 9 ஆக இருக்கும் அதே நேரத்தில் மத்தியப்பிரதேசத்தில் 47 ஆக இருக்கிறது. எளிதில் தடுக்கப்படக்கூடிய வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளால் பின்தங்கிய மாநிலங்களில் அதிக குழந்தைகள் மடியும் அதே நேரத்தில் கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் மரபணு சிக்கல்களால் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மடிகின்றன.

மோசமான முதன்மை சுகாதார கட்டமைப்பும் நெரிசலில் தவிக்கும் சிறப்பு சுகாதார கட்டமைப்பும் :

மருத்துவமனையில் நடக்கும் மகப்பேறுகளின் எண்ணிக்கை 2015 (38.7%) லிருந்து இருமடங்காகியுள்ளதால் (78.9%) சிசு மரணங்கள் கணிசமாக குறைந்துள்ளன. ஆனால், அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை அதற்கேற்றாற்போல அதிகப்படுத்தப்படவில்லை என்கிறார் குஜராத், ஆனந்திலுள்ள பிரமுக்ஸ்வாமி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் சோமசேகர் நிம்மல்கார்.

பெரும்பாலான அதாவது 57.9% கைக்குழந்தைகள் மரணங்கள் 28 நாட்களுக்குள்ளேயே நடப்பதாக மருத்துவ சஞ்சிகை லேன்செட் (Lancet) ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்களை கங்காரு கவனிப்பு (kangaroo care) அல்லது சருமத்துடன் சரும(ம்) கவனிப்பு மூலமாக எளிதில் தடுக்கப்பட முடியும். இது போன்ற சிக்கல்களை சமாளிக்க தேசிய கிராமப்புற சுகாதரா திட்டத்தின் அடிப்படையில் பச்சிளங்குழந்தை பாராமரிப்பு மையங்களை (Newborn Care Corners) ஏற்படுத்தினாலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை, படுக்கை வசதியின்மை, மருத்துவக்கருவிகள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் சேவையை பெற முடியாத அளவிற்கு கூட்டம் அலை மோதுகிறது. 83% பராமரிப்பு மையங்களில் பச்சிளங்குழந்தைக்கான கருவிகள் இல்லை. எனவே நகர்புறங்களில் உள்ள மருத்துவமையங்களை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.

மகப்பேறுக்கு முன்னதான சிக்கல்:

இந்தியாவில் குழந்தை இறப்பில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு முதன்மையான பங்காற்றுகிறது. நல்ல கல்வியும் வசதியும் கொண்ட மேல்மட்ட பணக்காரக் குடும்பங்களின் 20% குழந்தைகள் ஏழ்மையான கடைக்கோடி 20% குழந்தைகளை விட உயிர்பிழைப்பதற்கு 3 மடங்கு அதிமாக வாய்ப்பினை பெறுகின்றன என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

குழந்தைகள் மரணம் அதிகம் கொண்ட மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு படிப்பறிவு மிகக் குறைவாக உள்ளது. குழந்தை திருமணங்களும் மிக அதிகம். குழந்தைப் பிறப்புக்கு முன்னதாக 4 முறை (ANC visits – 12 வாரங்களில், 26 வாரங்களில், 32 வாரங்களில், 36-38 வாரங்களில்) மருத்துவமனை பரிசோதனைக்குச் செல்வது இன்றியமையாதது என்பது உலக சுகாதார மையத்தின் பரிந்துரை. ஆனால், இந்த மாநிலங்களில் பெரும்பாலான குடும்பங்கள் ஒருமுறை செல்வதே அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே குறைவாக பீகாரில் 14.4% பெண்கள் மட்டுமே நான்கு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு செல்கின்றனர்.

மகப்பேறின் போது ஏற்படும் சிக்கல்:

இந்தியாவில் 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுடன் ஐந்தில் ஒருக்குழந்தை பிறக்கிறது. 53.3% குழந்தைகள் மட்டுமே 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்கிறது என்கிறது 2019 செப்டம்பரில் லேன்செட்டில் வெளியான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் அறிக்கை. தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாலூட்டல் தொடர்பான சரியான அறிவுறுத்தல் இல்லாததும்தான் இதற்கு அடிப்படையான காரணம் என்கிறார் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (Indian Institute of Technology) சேர்ந்த கிராமப்புறங்களுக்கான தொழில்நுட்ப மாற்றுகளுக்கான மையத்தின்(Centre for Technology Alternatives for Rural Areas) குழந்தை நல மருத்துவரான ரூபல் தலால்.

குழந்தை பிறந்ததும் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய்ப்பால் ஊட்டினால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கிறது யுனிசெஃப். உத்திரப்பிரதேசம் மற்றும் இரஜஸ்தானில் நான்கில் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது என்று 2015-16-ம் ஆண்டு NFHS அறிக்கை கூறுகிறது. குழந்தைகள் மரணங்கள் குறைவாக உள்ள கேரளாவில் (63.3%), கோவாவில் (75.4%) மற்றும் தமிழ்நாட்டில் (55.4%) முதல் ஒரு மணி நேரத்தில் பாலூட்டுவது அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு:

2 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டின் 69.7% மற்றும் கோவாவின் 88.4 விழுக்காடு குழந்தைகளுக்கு அனைத்து அடிப்படையான தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. அதுவே அஸ்ஸாமில் (47.1%), குஜராத்தில் (50.4%) மற்றும் உத்திரப்பிரதேசத்தில் (51.1%) குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

ஒட்டுமொத்த குழந்தைகள் இறப்பில் ஊட்டச்சத்து குறைபாடு (68.2%) முதன்மையான பங்காற்றுகிறது என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பீகாரில் மட்டும் 42% உள்ளனர். பின்தங்கிய மாநிலங்களில் ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த சிக்கல் உள்ளது. கேரளாவில் 20.5%, தமிழ்நாட்டில் 19.7% மற்றும் கோவாவில் 19.6% குழந்தைகளுக்கு குன்றிய வளர்ச்சி சிக்கல் உள்ளது.

நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு :

ஒட்டுமொத்த குழந்தை இறப்புகளில் நிமோனியா (12.9%) மற்றும் வயிற்றுப்போக்கு (8.9%) போன்ற எளிதில் சரி செய்யப்படக்கூடிய நோய்த்தொற்றுகள் அதிக பங்கு வகிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள, தூய்மையான தண்ணீர் கிடைக்காத, காற்று மாசுபாட்டில் அகப்படும் குழந்தைகளுக்கு விலை குறைவான நுண்ணுயிர் கொல்லிகளால் (antibiotics) எளிதில் சரி செய்யப்படக் கூடிய நிமோனியா எளிதில் தொற்றுகிறது. 2018-ல் நிமோனியாவினால் 1,27,000 குழந்தைகள் மடிந்துள்ளனர்.

2017-ம் ஆண்டில் 90,000 குழந்தைகளை வயிற்றுப்போக்கு பலிவாங்கியிருக்கிறது. வெறுமனே 50.6% குழந்தைகளுக்கு மட்டுமே எளிய தீர்வான வாய்வழி மறுசீரமைப்பு திரவ சிகிச்சையும் (oral rehydration solution), 20.3% குழந்தைகளுக்கு மட்டுமே துத்தநாக மருந்தும் (zinc supplementation) கிடைத்திருக்கிறது. விலை அதிமான மருத்துவம் கூட தேவையில்லை. தூய்மையான தண்ணீருடன் உப்பு சர்க்கரை கரைசலே போதுமானது. ஆனால், எத்தனை குழந்தைகளுக்கு இது கிடைக்கிறது? என்று வினவுகிறார் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் சின்ஹா. 2019-ல் திட்டமிடப்பட்ட 41 விழுக்காட்டினரில் 73 விழுக்காட்டினருக்கு மட்டுமே ரோட்டா வைரஸ் (rotavirus) தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

அதேபோல திட்டமிடப்பட்ட 13% மக்களில் வெறுமனே 44% மட்டுமே நிமோனியா தடுப்பு மருந்து போடப்பட்டதாக 2018-ம் ஆண்டு ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. தற்போதைய நிலையில் 6 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


செய்தி : indiaspend
தமிழாக்கம் :  சுகுமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க