ம.பி.யில் அதிகரிக்கும் ரத்த சோகை நோய் : உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் கார்ப்பரேட் நல அரசு !
தனியார்மய – தாராளமய - உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
பிறந்து 6 முதல் 59 மாதங்கள் ஆன குழந்தைகளில் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு !
சமீபத்தில் மத்தியப்பிரதேசத்தில் National Family and Health Survey (NFHS) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2019 முதல் 2021 வரையிலான காலத்தில் பிறந்த 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் 73 சதவீதம் பேர் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது முன்பு நடந்த ஆய்வில் வந்த 69 சதவீதத்திலிருந்து உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த ஆய்வில் குறிப்பிடும்போது 27 சதவீதம் பேர் மிதமான பாதிப்புடனும் 42 சதவீதம் பேர் அதைவிட அதிகமாகவும் 3 சதவீதம் பேர் மிகவும் கடுமையாக ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட விஷயங்களை பார்க்கும்போது, இந்திய குழந்தைகள் எந்த அளவுக்கு நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஆய்வைப் பற்றி குறிப்பிடும் மருத்துவர் ஹேமந்த் ஜெயின் (Dr Hemant Jain (retired professor), Mahatma Gandhi Memoria Medical College) பிறந்து 6 முதல் 59 மாதங்கள் வரையிலான குழந்தைகள் ஆரம்பத்தில் தாய்ப்பால் குடித்து வளருகிறார்கள். அப்படி தாயிடமிருந்து குடிக்கும் பால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளது எனக் குறிப்பிடுகிறார் மருத்துவர்.
மேலும் அவர் குறிப்பிடும்போது, 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் பயிறு வகைகள் இன்னும் இதுபோன்ற ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் கொடுக்கப்படுவதில்லை என கூறியுள்ளார்.
இது இரண்டு விஷயங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஒன்று பெண்களே ஆரோக்கியமாக இல்லை; மற்றொன்று குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதில்லை. இந்த இரண்டு விஷயங்களும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிரச்சினை என்பது பார்த்தாலே நமக்குத் தெள்ளத் தெளிவாகப் புரியும்.
உணவு தானியம், பால், பழங்கள், இறைச்சி, முட்டை உற்பத்தி என அனைத்திலும் உலகின் முதல் மூன்று இடங்களில் அல்லது ஐந்து இடங்களில் இருக்கும் இந்தியாவில் ஏன் இந்த நிலை? ஏனென்றால், உழைக்கும் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை, வேலை இல்லை, வருமானம் இல்லை இது ஒருபுறம். இறைச்சி, முட்டை, மீன், கருவாடு போன்றவற்றை சாப்பிட விடாமல் தடுக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் மறுபுறம்.
பள்ளிகளில் உணவு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டிருக்கும் இஸ்கான் என்ற நிறுவனம் உணவு வகைகளில் முட்டை இறைச்சி உணவுகளை புறக்கணிக்கும் வேலையை செய்துள்ளது. இது பல்வேறு இடங்களிலும் விமர்சனத்திற்கு உள்ளானது என்பதை நாமறிவோம். இந்த நிறுவனம் ஆர்.எஸ்.எஸ்.-ன் துணை நிறுவனம் என்பதும் கூடுதல் விஷயம்.
தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளை அமல்படுத்தினால் இந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என பேசியவர்கள் தற்போது இந்த நிலைமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்திய குழந்தைகள் நோஞ்சான்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே கொள்கைகளை அமல்படுத்திய இலங்கைதான் இன்று மாபெரும் நெருக்கடியில் சிக்கி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.
இந்த அரசு பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு திட்டங்கள் வைத்துள்ளதாக பேசுகிறார்கள். நாம் இவர்களிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி; ஏன் போன ஆய்வை காட்டிலும் இந்த ஆய்வில் 73 சதவீதம் என உயர்ந்தது? அப்படியானால் உங்களுடைய திட்டங்கள் பிரச்சினையை தீர்க்கவில்லை. பிரச்சனையை மேலும் தீவிரமாகி உள்ளது. இந்த பிரச்சினையை அரசு சரி செய்யாது என்ற எதார்த்தம் நம் கண்முன்னால் நிற்கிறது.
இலட்சக் கணக்கான கோடி ரூபாய்களை மானியங்களாக கொடுத்து – சலுகைகளாக கொடுத்து – அதானி அம்பானிக்களை உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கிறார்கள் மோடி தலைமையிலான பாசிச கும்பல். மோடி அரசு கொடுக்கும் பணம் எல்லாம் அவருடைய அப்பன் வீட்டு சொத்தா? அது மக்கள் சொத்து அதைத்தான் இந்த கார்ப்பரேட் கும்பலிடம் ஒப்படைக்கிறார்கள். அந்தப் பணத்தை எல்லாம் மக்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தினால் என்ன கேடு இந்த அரசுக்கு. கார்ப்பரேட் பாசம் தடுக்கிறது.
அப்படியானால் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது பெண்களின், குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கூட காப்பாற்ற முடியாது என்பதுதான் யதார்த்தமாக உள்ளது.