பட்டினியால் வாடும் 78.3 கோடி மக்கள் – புழுத்து நாறும் முதலாளித்துவம்!

கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்

0

லகளாவிய பொருளாதார நெருக்கடியால் 2022-ஆம் ஆண்டில் 78.3 கோடி பேர், அதாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமானோர், பட்டினியால் வாடியதாக ”உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை” (State of the Food Security and Nutrition in the World – எஸ்.ஓ.எஃப்.ஐ) என்ற ஐ.நா ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (Food and Agriculture Organization – எஃப்.ஏ.ஓ), விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம் (International Fund for Agricultural Development – ஐ.எஃப்.ஏ.டி), ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நிதியம் (United Nations Children’s Fund – யுனிசெஃப்), உலக சுகாதார அமைப்பு (World Health Organization – டபிள்யூ.எச்.ஓ) மற்றும் உலக உணவு திட்டம் (World Food Programme – டபிள்யூ.எஃப்.பி) ஆகிய ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த ஐந்து சிறப்பு முகமைகள் இணைந்து ஜூலை 12 அன்று இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டன.


படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!


ஏற்கனவே கடந்த ஜனவரியில் வெளியான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உலகம் முழுவதிலும் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை எடுத்துக்காட்டியது. உலகெங்கிலும் 82 கோடி மக்கள் பட்டினியால் வாடுவதாக அவ்வறிக்கை கூறியது. தற்போது வெளியாகியுள்ள ஐ.நா ஆய்வறிக்கையும் இதை உறுதி செய்கிறது.

இந்த ஐ.நா அறிக்கையில், ”கடந்த ஆண்டு (2022) 240 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 29.6 சதவிகிதம் பேர், தங்களுக்கு தேவையான சரியான உணவைப் பெற முடியவில்லை. அதில் 90 கோடி பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 78.3 கோடி பேர் பட்டினி கிடந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. பட்டினி கிடந்தோரின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டைவிட 2022-ஆம் ஆண்டில் 12.2 கோடி அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் 14.8 கோடி குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட கோடிக் கணக்கான குழந்தைகள் தொடர்ந்து ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டில், ஐந்து வயதிற்குட்பட்ட 14.8 கோடி குழந்தைகள் (22.3 சதவீதம்) வளர்ச்சி குன்றியுள்ளனர் (stunted); 4.5 கோடி குழந்தைகள் (6.8 சதவீதம்) வயதுக்கேற்ற எடை அற்றவர்களாக உள்ளனர் (wasted); மேலும் 3.7 கோடி குழந்தைகள் (5.6 சதவீதம்) அதிக எடையுடன் (overweight) இருந்தனர்.


படிக்க: பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !


கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகையான உறுதியற்ற பொருளாதார தன்மையை எதிர்கொண்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்றால் விரைவுபடுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மேற்கு ஆசியா, கரீபியன், ஆப்பிரிக்காவின் பல நாடுகள் இன்னும் மீளவில்லை. மேலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரினால் உணவு தானிய விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. காலநிலை மாற்றத்தின் காரணமாக, பல நாடுகளில் வானிலை சீரற்றதாகவும், சில நேரங்களில் எதிர்மாறாகவும் இருந்தது. இவற்றின் காரணமாக உழைக்கும் மக்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர்.

இலாப வெறியால் உந்தித் தள்ளப்படும் முதலாளித்துவம் தொடர்ந்து நெருக்கடிக்குள் சிக்கி வருகிறது. அதன் விளைவாகத்தான் உழைக்கும் மக்கள் தாங்கள் வாழ்வதற்கான குறைந்தபட்ச உணவைக் கூடப் பெறமுடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி என்பதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு மட்டும்தான். ஆனால், பெருமுதலாளிகளின் சொத்துகளின் மதிப்புகளோ, கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் கூட அதிகரித்துத்தான் உள்ளது. இதை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சுரண்டலால் உயிர்வாழும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பிற்கு முடிவு கட்டாமல் பட்டினியை ஒருபோதும் ஒழிக்க முடியாது.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க