பட்டினியில் உழலும் ஆஸ்திரேலியா:
20 லட்சம் குடும்பங்களும் 13 லட்சம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

ஃபுட்பேங்க் (Foodbank) என்ற தொண்டு நிறுவனம் தனது வருடாந்திர பசி அறிக்கையை (Hunger Report) கடந்த அக்டோபரில் வெளியிட்டது. இந்த அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன. கடந்த 12 மாதங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவிற்காக செலவழிக்க பணம் இல்லாததால் கடும் பட்டினியில் இருப்பதாகவும், பல நாட்கள் ஒரு வேளை உணவையே தவிர்ப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது; அதிலும் குறிப்பாக 13 லட்சம் குழந்தைகள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 11 முதல் 28 வரை, 18 வயதைக் கடந்த 4,024 ஆஸ்திரேலியர்களிடம் இணையவழியில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் (2021-ல்) 17 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தன; ஆனால் அது தற்போது (2022-ல்) 21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குழந்தைகளைக் கொண்டுள்ள குடும்பங்களின் நிலைமையோ இன்னும் படுமோசமாக இருக்கிறது. குழந்தைகளை உடைய 32 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. இது தேசிய சராசரியான 21 சதவீதத்தை விட அதிகம்.

இதுகுறித்துப் பேட்டியளித்த ஃபுட்பேங்க் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியன்னா கேசி (Brianna Casey) “அதிகரித்த உணவு மற்றும் மளிகைச் செலவுகள், அதிகரித்த எரிசக்தி செலவுகள் – மின்சாரம், பெட்ரோல் அல்லது வாகனத்திற்கான எரிபொருள் – மற்றும் அதிகரித்த வீட்டுச் செலவுகள் அனைத்தும் வாழ்க்கைச் செலவுகளை அதிகரிப்பதில் பங்காற்றுகின்றன. துரதிருஷ்டவசமாக, நிலைமை இன்னும் மோசமடைந்து வருவதாகத் தெரிகிறது” என்று கூறினார்.

படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!

அரசு திட்டங்களின் கீழ் வீட்டு வாடகை மற்றும் குழந்தை பராமரிப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டும் நிதி தனக்கு கொஞ்சம் கூட பற்றவில்லை என்று கூறுகிறார் சார்லோட் என்ற பெண்மணி. இரண்டு பேர் கொண்ட தனது சிறிய வீட்டிற்கே 850 டாலர் மின் கட்டணம் வருவதாக அவர் கூறுகிறார். ஃபோன் பில், மளிகை போன்ற மற்ற செலவினங்களும் கூடியிருப்பதாக அவர் மேலும் கூறுகிறார்.

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் (Australian Bureau of Statistics – ABS) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கடந்த 12 மாதங்களில் (செப்டம்பர் காலாண்டு வரை) 16.2 சதவீத வருடாந்திர விலை உயர்வை சந்தித்திருக்கின்றன. அதே நேரத்தில், இறைச்சி மற்றும் கடல் உணவுகள் 7.3 சதவீதமும், ரொட்டிகள் மற்றும் தானியங்கள் 10 சதவீதமும், பால் பொருட்கள் 12.1 சதவீதமும் விலை ஏற்றம் கண்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள் 11.9 சதவீதமும், வீட்டுவசதி 10.5 சதவீதமும் அதிகரித்துள்ளது.

அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. இந்தியாவின்‌ மோடி அரசாங்கம் எப்படி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கொரோனாவை காரணம் காட்டியதோ, அதுபோலவே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து உலக நாடுகளும் கொரோனாவையே காரணம் காட்டுகின்றன.

படிக்க: நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !

ஆஸ்திரேலியாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அங்கு மாறி மாறி ஆட்சி புரியும் தொழிலாளர் கட்சி (Australian Labor Party) மற்றும் லிபரல் கட்சிகளின் (Liberal Party of Australia) ஏகாதிபத்திய அடிவருடித்தனம்தான். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிற்கு அடியாளாக செயல்பட்டுவரும் ஆஸ்திரேலியா (AUKUS முத்தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை), தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. இந்தக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது என்பதே எதார்த்த உண்மை.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க