ஆஸ்திரேலியாவில் இனவெறி செயல்பாட்டில் ஈடுபட்ட அதானி குழுமம்

"அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை"

ஸ்திரேலியாவில் அதானி குழுமம் சார்பில் கார்மிசெல் (Carmichael) நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இச்சுரங்கத்தில் அதானி குழுமத்தைச் சேர்ந்த பிரேவஸ் மைனிங் மற்றும் ரிசோர்ஸ் (Bravus Mining and Resources) நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குதான் அந்த இனவெறிச் செயல் நடந்தேறி உள்ளது.

அதாவது இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு அருகேயுள்ள நீரூற்றுகளைத்தான் அங்கு வசித்து வரும் வாங்கன் (Wangan) மற்றும் ஜகாலிங்கோ (Jagalingou) ஆகிய பழங்குடியின மக்கள் தங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இவர்களின் கலாச்சார சடங்குகள் மற்றும் கலாச்சார அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இந்த நீரூற்றுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த பழங்குடி மக்களை அதானி குழும பணியாளர்கள் வாய்மொழியாகவும் உடல் ரீதியாகத் தடுத்தும் இந்த நீரூற்றுகளைப் பயன்படுத்த விடாமல் இனவெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் சார்பில் குயின்ன்ஸ்லாந்தில் உள்ள நாகானா யார்பைன் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ கலாச்சார கஸ்டடியன்ஸ் (Nagana Yarrbayn Wangan & Jagalingou Cultural Custodians) ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

அப்புகாரில் அவர்கள் “அதானியிடமிருந்து பல ஆண்டுகளாகப் பாகுபாடு மற்றும் அவதூறுகளை நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். இனி இதை நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை” என்று கூறியுள்ளனர்.

நாகானா யார்ர்பைன் மூத்த கலாச்சார பாதுகாவலர் அட்ரியன் புர்ரகுப்பா, “கடந்த ஆண்டு எங்கள் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டனர். எனவே தற்போது அதானி அவர்களின் நடத்தை குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சட்ட வழிமுறை மூலமே தீர்வுகாண முடியும்” என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் “இந்த சுரங்கமானது இங்குள்ள நீரோடையையும், எங்கள் வாழ்வாதாரமான விவசாயத்தையும் இங்கு வாழும் வனவிலங்குகளையும் அழிக்கும் நோக்கத்திலேயே கொண்டுவரப்பட்டது” எனச் சுரங்கத்துக்கு எதிராக இப்பழங்குடி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அம்மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோம். மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தும் இயற்கையின் கனிம வளங்களைச் சுரண்டியும் இவ்வுலகத்தையும் உலக உயிர்கள் அனைத்தையும் அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இலாப வெறி பிடித்த பாசிச அதானி குழுமத்தைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.


கருப்பன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க