தானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய பழங்குடி மக்கள் மீண்டும் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வாங்கன் (Wangan) மற்றும் ஜகாலிங்கோ (Jagalingou) பழங்குடியின மக்கள் வசிக்கக் கூடிய மத்திய குயின்ஸ்லாந்தில் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தமும் நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக ரயில் பாதைகள் அமைக்கவும், துறைமுகங்களைச் சீரமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கடந்த 2010 ஆம் ஆண்டு அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு முதல் சுரங்கம் அமைக்கும் வேலையில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாயத்தையே நம்பி வாழ்கின்ற மக்கள் அதானி நிலக்கரி சுரங்கத்தினால் தங்களின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள டூங்மாபுல்லா நீரூற்றுகள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும், சுரங்கத்திற்காகக் காட்டு விலங்குகள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் மக்கள் போராடி வந்தனர். தங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக “Standing Our Ground” (எங்கள் நிலத்தோடு நிற்பது) என்கிற பரப்புரையைத் தொடங்கினார்கள்.

போராட்டங்களின் தொடர்ச்சியாக 2021 ஆம் ஆண்டு பழங்குடி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து. அதானிக்கு எதிராக கிரிகோரி நெடுஞ்சாலையிலிருந்து அதானியின் கார்மைக்கேல் சுரங்கம் வரை “டூர் டி கார்மைக்கேல்” (Tour de Carmichael) என்ற சைக்கிள் பேரணியை நடத்தியுள்ளனர்.


படிக்க: அதானியை விரட்டியடித்த கென்ய மக்கள் போராட்டம்!


அதானியின் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்கள் கப்பல் வழியாக இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் யுனெஸ்கோவால் பாரம்பரிய தளமாக (World Haritage Site) அறிவிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து அருகே உள்ள டொரெசு தீவு மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பவளக் கடலில் உள்ள பவளப் பாறைகளும் கடலில் உள்ள உயிரினங்களும் அழிந்து வருகின்றன. இதனால் அதானி சுரங்கத்திற்கு எதிராக டொரெசு தீவு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழங்குடி மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க நீதிமன்றம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த ஊழல் வழக்கில் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த பின்பு கென்யா அரசு அதானி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அதேபோன்று தங்கள் நாட்டிலும் சுற்றுச்சூழலை அழித்துக் கொண்டிருக்கும் அதானி நிலக்கரி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடியின மக்கள் மீண்டும் தங்களின் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது போன்ற வீரியமான மக்கள் போராட்டங்களின் மூலம் மட்டுமே அதானி போன்ற கார்ப்பரேட் முதலைகளை நாட்டைவிட்டு விரட்டியடிக்க முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க