ர்வதேச அளவில் உணவுப்பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பட்டினிக் குறியீடு வெளியிடப்படுகிறது.இதில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான இடத்தைப் பிடித்துள்ளது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் கடந்த ஆண்டை விட (101) ஆறு இடங்கள் பின்தங்கி தற்போது 107 வது இடத்தைப் பிடித்திருக்கிறது வல்லரசு இந்தியா.

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைகூட 64-வது இடத்தில் உள்ளது. மேலும், நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான்(99), வங்கதேசம் (84), மியான்மர்(71), நேபாளம்(81) ஆகியவை பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளபோதிலும் இந்தியாவை விட முன்னோக்கி இருப்பதை இப்பட்டியல் காட்டுகிறது.

தெற்காசியாவைப் பொறுத்தவரை, இந்தியாவை விட மோசமான இடத்தில் உள்ள நாடாக, தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் (109 வது இடம்) மட்டுமே உள்ளது.  சீனா, குவைத், துருக்கி ஆகிய நாடுகள் பட்டினியே இல்லாத நாடுகளாக முன்னிலையில் உள்ளன.

உலக பட்டினி குறியீடு என்பது குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு (undernourishment), குழந்தையின் வயதுக்கேற்ற உயரம் குன்றிய நிலை (child stunting), குழந்தையின் உயரத்திற்கேற்ற உடல் எடை இல்லாத நிலை (child wasting), குழந்தை இறப்பு (child mortality) ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

குழந்தைகள் உரிய எடையில்லாமல் இருப்பதில் (stunting) மற்ற நாடுகளை விட இந்தியாதான் மிகவும் மோசமான நிலையில் முதலிடத்தில் உள்ளது.  உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். உலக அளவில், 44 நாடுகள் தீவிரமான அல்லது ஆபத்தான நிலையில் உள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 2-வது ஆண்டாக   இடம்பெற்றுள்ளது.

படிக்க: நாட்டில் பட்டினிச் சாவே இல்லையாம் ! மோடி அரசின் பொய்யுரைகள் !

இப்பட்டியலில் கடும் பசி, பட்டினி, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு அருகாமையில் இந்தியா இருக்கிறது. பா.ஜ.க ஆட்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து விட்டதாக பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் நாமோ ஆப்பிரிக்க நாடுகளுடன்   போட்டிபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே இப்பட்டியல் நமக்கு உணர்த்தும் உண்மை.

இந்தியா வளமான இயற்கை, கனிம வளங்களைக் கொண்டபோதிலும் ஏன் இந்த நிலை?

இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டுமெனில் ரேசன் கடைகளில் ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய உணவுப்  பொருட்களை மானிய விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரேசன் விநியோகத்தை விரிவுபடுத்த வேண்டும். ஆனால் இந்த மோடி அரசோ இதற்கு நேர் எதிராக தற்போது பெயரளவேனும் கிடைத்துவரும் மானியங்களையும் இலவசங்கள் எனக் கூறி அவற்றையும் தடுத்து நிறுத்துவதற்கான வேலைகளைச் செய்து வருகிறது. ஆனால் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்கிறது. இந்த ஆட்சியில் பெரும் வளர்ச்சி பெற்றது கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும்தான். அதானியின் சொத்து மதிப்பு மோடியின் ஆட்சியில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அவர் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.

வளர்ச்சியின் நாயகன் மோடியின் எட்டு ஆண்டுகால ஆட்சியில் இந்தியா  தொடர்ந்து பின்னோக்கிச் சென்று படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் மத்திய நிதியமைச்சரோ ருபாயின் மதிப்பு குறையவில்லை, டாலரின் மதிப்பு தான் உயருகிறது என்று நம்மைச் சிரிக்கவைக்கிறார்.

படிக்க: முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

இந்தியா மூன்று டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் அறுபது பில்லியனர்களைக் கொண்ட உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்துள்ளது என்று பெருமைப்பீற்றிக் கொள்கின்றனர். எது வளர்ச்சி? நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சத்தான உணவில்லாமல் பசியால் வாடிக்கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் பணம் கொழித்துக்கொண்டிருப்பதா?

இந்த  பாசிச பா.ஜ.க ஆட்சியில் மக்கள் மேலும் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஆனால் இந்த அரசோ இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமல், மதவெறியையும் பிரிவினைவாதத்தையும் பரப்பி மக்களைத் திசைதிருப்பும் வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. இந்த முதாலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு இருக்கும் வரை ஏழ்மையும், பட்டினியும் அதிகரிக்கவே செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.


கிளாரா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க