பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை !
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், இலங்கையானது கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து மீளமுடியாத வகையில் 1970–ல் அங்கு ஏற்பட்ட பஞ்சத்தைவிட, மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
உயிராதாரமான அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவைகளின் விலையானது விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. ஒரு முட்டை விலை ரூ.35 ஆகவும், ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.250 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.
விலைவாசி உயர்வு ஒருபுறமிருக்க, பொருட்கள் தட்டுப்பாடு என்பது பாரிய அளவில் நீடிக்கிறது. இதனால் உழைக்கும் மக்கள் வாழவழியின்றி தவிக்கின்றனர். பிள்ளைகளுக்கு உணவளிக்க இயலாமல் போவதாலும், பட்டினியாலும் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் அதிக நேரம் பட்டினியால் காத்திருந்து மயங்கி விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மின்சார விநியோகம் தினசரி 7½ மணி நேரம் தடை செய்யப்படுவதால் தொழில்கள், வியாபார நிறுவனங்கள், கணினிகள் இயங்குவது பாதிக்கப்படுகிறது. எரிப்பொருட்கள் இல்லாமல் போக்குவரத்து, விவசாயம், கைத்தொழில் போன்றவைகள் முடக்கப்படுவதோடு, 90% உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. இதனால் இவற்றில் பணிபுரியும் பெருவாரியான தொழிலாளர்களும் வருமானமின்றி அல்லல்படுகின்றனர். வேலைகளையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
இவ்வளவு கொடுமைக்கு மத்தியில் நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் புதல்வரும், அமைச்சருமான நாமல் ராஜபக்ச மாலத்தீவில் கேளிக்கை விளையாட்டில் இலயித்துக் கொண்டிருக்கிறார் எனில் இதைவிட பெரிய வக்கிரம் இருக்க முடியுமா?
இலங்கைக்கு ஏன் இந்த நிலை ?
இலங்கை பொருளாதாரத்தில் அதிகப்பட்ச பங்கைச் செலுத்துவது தேயிலை உற்பத்தி, ஆடை தயாரிப்பு, சுற்றுலா ஆகியவை. தேயிலை – ஆடை உற்பத்தி ஏற்றுமதியை சார்ந்திருந்தது. சுற்றுலா வெளிநாட்டவர் வருகையைச் சார்ந்திருந்தது.
கொரோனா தொற்று தொடங்கியவுடன் குறிப்பாக 2020 மார்ச் முதல் சர்வதேச / உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுற்றுலா வருவதும் நின்றுபோனது. தற்போது கூட ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளன. இதனால் அந்நிய செலவாணி வரவு நின்று விட்டது. உற்பத்தியான தேயிலையையும், ஆடையையும் கூட ஏற்றுமதி செய்ய இயலவில்லை.
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கைவாழ் மக்களும் டாலர் – அந்நிய நாணயங்கள் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டனர். வேறு எந்த வழியிலும் பொருளாதாரத்தை ஈட்ட வழியில்லாமல் உள்நாட்டின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், கோழி, பால்மா, எரிவாயு மற்றும் இதர பொருட்களின் இறக்குமதிக்காக இருப்பிலுள்ள அந்நிய செலாவணியும் இழக்க நேரிட்டது.
இறுதியாக அந்நிய செலாவணி (அமெரிக்க டாலர் – இதர நாட்டு நாணயங்கள்) இருப்பானது தமிழ் இந்து தகவலின்படி, இந்தியா கடனாக வழங்கிய 50 கோடி டாலர்களையும் சேர்த்தே மொத்தமாக அதன் கையிருப்பானது 90 கோடி டாலர்கள்தான் உள்ளது. இது சீனாவின் அந்நிய செலாவணி இருப்பு 3.35 டிரில்லியன் டாலர்களுடன் ஒப்பிடும்போது மிக மிக சொற்பமானது, ஏணி வைத்தாலும் எட்ட முடியாது.
கொரோனாவை ஒட்டி நிறுத்தப்பட்ட ஏற்றுமதியானது மீண்டும் நடந்தாலும் அதன் பழைய நிலையை எட்ட இயலவில்லை. வருடத்திற்கு 1000 கோடி டாலர்கள் மதிப்புள்ள தேயிலை, ஆடை ஏற்றுமதி செய்ததோடு, சுற்றுலா மூலம் கிடைத்த டாலர், வெளிநாட்டில் தொழில் புரிவோர், வேலை செய்வோர் அனுப்பும் டாலர், வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கையில் செலவு செய்யும் அந்நிய செலாவணிகள், பிற நாடுகளிலிருந்து பெறும் கடன்கள், நன்கொடைகள் மூலம், வருவாயை ஈட்டியுள்ளது.
இவற்றில் இறக்குமதிக்காக 2000 டாலர்கள் செலவழித்ததுபோக மீதியை அந்நிய செலவாணி (நாணயங்களை) கையிருப்பாக இருந்துள்ளது. இதன் மூலம் பற்றாக்குறையை ஈடுசெய்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இலங்கையின் இன்றைய அந்நிய செலவாணி தேவையோ 3500 கோடி டாலர்களாகும்.
தற்போது ஏற்றுமதியும் குறைந்து, சுற்றுலா வருவாயும், வெளிநாட்டு இலங்கைவாழ் மக்கள் அனுப்பும் வருவாயும் இல்லாமல் போய்விட்டது. இறக்குமதியும் அதிகரித்துள்ள நிலையில் மேற்கண்ட நிதியைப் பெறவும், இதன் மூலம் குறைந்து வரும் அந்நிய செலவாணியின் இருப்பை உயர்த்தவும் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் இறக்குமதியைக் குறைத்து அந்நிய செலாவணி இருப்பை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.
இதனடிப்படையில்தான் இலங்கை மத்திய வங்கியும், நிதி அமைச்சரும் இணைந்து அத்தியாவசியமற்ற 367 பொருட்கள் பட்டியலை தயாரித்து அவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது. இதில் கைபேசியும், கணினியும் அடங்கும். இவை தடை செய்யப்பட்டதால் மாணவர்களின் படிப்பும், இவை சார்ந்த வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் குறிப்பாக விவசாய உற்பத்திக்கான இரசாயன உரத்திற்கும் தடை விதித்துள்ளது. இதனால், ஒரு மூட்டை ரசாயன உரத்தின் விலை ரூ.20,000-ஐ எட்டிவிட்டது. இதற்கான மானியத்தையும் நிறுத்த முடிவு செய்துவிட்டது ராஜபக்ச அரசு.
இதன் காரணமாக 1971, 1989, 1991-களில் நடந்த கிராமப்புற இளைஞர்கள் எழுச்சியைப்போல இன்னும் நடக்கலாம் என்பதை உணர்ந்த ராஜபக்ச அரசு விவசாயத்தை இராணுவமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இரசாயன உரத்தில் ஊறிப்போன விவசாய நிலத்தில் வலுகட்டாயமாக இயற்கை உரத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்துவதோடு, பசுமை வேளாண்மை செயலுக்கான மையத்தை நிறுவி அதற்கு ராணுவ தளபதியை தலைவராக நியமித்துள்ளது. இதன் மூலம் சிவில் நிவாகத்தின்கீழ் உள்ள விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும், இராணுவ துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அனைத்து எதிர்ப்புகளையும் இராணுவ சர்வாதிகாரத்தால் ஒடுக்குவது என்பதை இலக்காக வைத்து செயல்படுகிறது.
இதற்கேற்ப கடுமையான சட்டங்களையும் போடுகிறது. இதன் மூலம் சுகாதார ஊழியர்கள், எறிபொருள் துறை ஊழியர்கள் மத்தியில் வளர்ந்து வரும் போராட்டத்தை ஒடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதனூடே IMF-லும் கடன்பெற முயன்று வருகிறது மகிந்த ராஜபக்ச அரசு. ஆனால் அது வரியை உயர்த்த வேண்டும்; மானியங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கும். அவற்றை ஏற்கும் பட்சத்தில் கடனை வழங்கும்.
சீனா, இந்தியா போன்ற நாடுகள் பிற நாடுகளின் பற்றாக்குறையை, பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடன் வழங்கும். ஆனால், தன் நாட்டின் தேவைப் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் கடன் வழங்கும் நாட்டின் மீதான சுரண்டலையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொள்ளும்.
இந்த வகையில்தான் சீனாவும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் இலங்கையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. இந்தியாவும் தற்போது SBI வங்கி மூலம் வழங்கும் (மக்களின் சேமிப்பிலிருந்து) 50 கோடி டாலர்கள் நீண்டகால கடனுக்கு, உள்நாட்டு கட்டமைப்பு மின்சார உற்பத்தி இன்னும் பிற கட்டுமான பணிகளை தங்களுடைய எஜமானர்களான அதானி, அம்பானி கும்பலுக்கு தாரைவார்ப்பதாக கூறி இருப்பதும்; இன்னும் பல்வேறு பொருளாதார கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளது. மேலும் தான் தரும் கடனுக்கு ஈடாக அத்தியாவசிய பொருள்களை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் கூறி உள்ளது.
IMF-ம் சரி சீனா, இந்தியா போன்ற நாடுகளும் சரி தாங்கள் தரும் கடனுக்காக அவைகள் திணிக்கும் அனைத்து சுமைகளையும் ஏற்கனவே மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்படும் மக்கள்மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்த சுமையிலிருந்து விடுபட, பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்து எழுவது இயல்பே. இவற்றை ஒடுக்கவும், பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான புதிய வழிமுறைகளை தேடாமல் பழைய முறையிலேயே சமூகத்தை வழிநடத்த சிவில் பிரச்சினைகளை – மக்கள் பிரச்சினைகளை இராணுவமயமாக்கலின்கீழ் கொண்டுவர முயல்கிறது. இதன் மூலம் தேர்தல் ஜனநாயகம் ஒத்து வராது; இராணுவ சர்வாதிகாரம் தான் தீர்வு என்பதை நிலைநாட்ட முனைகிறது மகிந்த ராஜபக்ச அரசு.
எனவே இனியும் உழைக்கும் வர்க்கமாகிய இலங்கை விவசாயிகளும், தொழிலாளர்களும் தேர்தல் ஜனநாயகத்தை நம்பி பயனில்லை என்பதை உணர வேண்டும். இலங்கையை இராணுவமயமாக்கலின் கீழ் கொண்டுவரும் ராஜபக்ச அரசை தூக்கியெறியாமல் இலங்கைவாழ் உழைக்கும் மக்களுக்கு விடிவில்லை.
இதற்கு பாட்டாளி வர்க்கம் தலைமையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை கட்டியெழுப்பி நாடு தழுவிய அளவில் ஒரு பேரெழுச்சியை உருவாக்க வேண்டும். இந்த எழுச்சியை தொடர்ந்து இடைவிடாமல் நடத்துவதன் வளர்ச்சி போக்கில் தேச நலனில் உண்மையான, உளப்பூர்வமான அக்கறை கொண்ட உழைக்கும் மக்களுக்கான புதியதொரு அரசை கட்டியமைப்பதே தீர்வாக அமையும்.
இலங்கை:
முலாளித்துவ சுரண்டல் முறை அதை பாதுகாக்கும் பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த அரசு அமைப்பு, புதிய தாராளமயக் கொள்கையை நிராகரிக்காமல் தீர்வில்லை!