வன்முறைகளை எதிர்த்தல் : ‘விகல்ப’ சிங்கள இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்.
காரணம் எதுவாக இருப்பினும், போலீஸ் அதிகாரி ஒருவர் நடுத்தெருவில் வைத்து ஒருவரை மிக மோசமாக மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய காணொளியொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது. (தாக்குதல்களில் மனிதாபிமான முறையொன்றும் இருக்கிறது என்பது இதன் அர்த்தம் அல்ல.) இவ்வாறு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக முகநூலில் பரவலாக பகிரப்பட்ட காணொளிக்கு பலரும் தமது கருத்துக்களை எழுதியிருந்தார்கள்.
அவை அனைத்துமே இலங்கை போலீஸுக்கும், தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிக்கும் எதிரானதாக இருந்ததோடு, போலீஸ் அதிகாரி, போலீஸ் மற்றும் சட்டம் ஆகியவை குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள், கருத்துக்கள், விவாதங்கள் எழுந்தன. அவை அனைத்தின் ஊடாகவும் வலியுறுத்தப்பட்டிருந்தவை போலீஸ் வன்முறைக்கான எதிர்ப்பு, துன்புறுத்தல்களுக்கான எதிர்ப்பு, தாக்குதல்களுக்கான எதிர்ப்பு ஆகியவையே. காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபல்யமான புகைப்படம் அந்த ஒவ்வொரு கருத்துக்களினதும் பிரதான புகைப்படமாக மாறியிருந்தது.
போலீஸ் வன்முறை குறித்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறான கருத்துக்கள் மூலமான எதிர்ப்பு, சமூகத்தின் செயலாற்றலில் காணப்படும் சிறந்த முன்னேற்றமாகும். வன்முறை மிக்க, இழிவான செயற்பாடுகள் தொடர்பாக விரைவாகவும், பகிரங்கமாகவும் நிகழ்நிலை பரப்பில் உதிக்கும் இவ்வாறான எதிர்ப்புகளை, எவ்விதத்திலேனும் நேரடியாகத் தெரிவிக்க முன்வருவதுவும் மிகவும் முக்கியமானது.
காரணம், ஜனநாயகத்தை விரும்பாத, சட்டம் தமக்குரியது என்று எண்ணியிருக்கும் ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எந்தக் கணத்திலும் சமூக வலைத்தளங்களுக்கான அனுமதி நிறுத்தப்படலாம் என்பதோடு, தேவைக்கேற்ப முழு இணையத் தொடர்பாடலும் எக் கணத்திலும் துண்டிக்கப்படலாம்.
மியன்மாரில், கொலைகார இராணுவ ஆட்சியாளர்களால் குறிப்பிட்ட கால அளவுக்குள் இணையத் தொடர்பாடலை முற்றாக நிறுத்தி விட்டுத்தான் ஜனநாயகத்தைக் கோரும் எதிர்ப்பாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவில், சில இடங்களில் கிளர்ந்தெழும் எதிர்ப்புகளை மோடி அரசாங்கம் அவ்விடங்களில் இணையத் தொடர்பாடலுக்கு இடையூறு விளைவித்துத்தான் கட்டுப்படுத்துகிறது. இவை நாம் அறிந்த நாடுகளில் காணப்படும் இரண்டு உதாரணங்கள் மாத்திரமே.
சமூக வலைத்தளங்களின் வலிமையை அறிந்துள்ள இவ்வாறான ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளிடையே சமூக வலைத்தளங்களைத் தடை செய்வதையும், சில சந்தர்ப்பங்களில் இணையத் தொடர்பையே இல்லாமல் செய்வதையும் அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது. இது, அவ்வாறான ஆட்சியாளர்களின் ஒரு செயற்பாடு மாத்திரமே. ஆகவே வன்முறைக்கு, துன்புறுத்தல்களுக்கு, அநீதங்களுக்கு எதிராகக் காண்பிக்கப்படும் எந்தவொரு எதிர்ப்பின் போதும் நிகழ்நிலையைப் போலவே யதார்த்தத்தில் நேரடியாகவும், பகிரங்கமாகவும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பது எவ்வாறு என்பதை இப்போது இலங்கையிலிருக்கும் செயற்பாட்டாளர்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகவும் முக்கியம்.
எதிர்ப்புகளை நீர்த்துப் போகாமல் பேணுதல்
இப்போது இந்த போலீஸ் அதிகாரியின் வன்முறை மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குறிப்பாக சிங்கள மொழியில் எழுந்துள்ள பலத்த எதிர்ப்பை, இலங்கையில் இதை விடவும் மிகவும் மோசமான துன்புறுத்தல்கள் நடைபெற்ற சந்தர்ப்பங்களின் போது நாம் அவ்வளவாகக் கண்டதில்லை.
குறிப்பாக, பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டிருந்த வேளையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிறு பிள்ளையின் புகைப்படம் 2009 ஆம் ஆண்டில் இணையத்தளங்கள் முழுவதும் மிகவும் வேகமாகப் பரவியது. பின்னர், அந்தப் புகைப்படத்திலிருந்த பிள்ளை துப்பாக்கிச் சூடுபட்டு பரிதாபமாக விழுந்து கிடந்த புகைப்படமொன்று அதனை விட வேகமாக இணையம் முழுவதும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியவாறு பரவியது. எனினும் அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் தொடர்பாக பெரும் எதிர்ப்போ, உரையாடலோ சிங்கள மொழியில் குறிப்பிடத்தக்களவு ஏற்படவில்லை.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்த இளம்பெண்ணொருவர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைச் சித்தரிக்கும் புகைப்படமும் அந்தக் காலத்தில் இணையத்தில் வேகமாகப் பரவியது. பின்னர் அந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட புகைப்படமும் இணையத்தில் பரவியது. சர்வதேச அளவில் மிகுந்த எதிர்ப்புகளும், விமர்சனங்களும் இவ்வாறான குரூரமான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளம்பின. எனினும் முன்பு போலவே பெரும்பாலான தெற்கின் சிங்கள மொழியிலான எதிர்ப்பானது, அவற்றின் முன்னிலையில் ஊமையாகிப் போயிருந்தது.
படிக்க :
♦ தூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் !
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !
சிறு குழந்தைகள் உட்பட நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை மிகக் குரூரமாகக் கொலை செய்த இராணுவ அதிகாரியொருவரை, இலங்கை நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரும், அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்த வேளையில் பெரும்பாலானோர் தமது எதிர்ப்பின் எல்லையை வெட்கங்கெட்ட விதத்தில் வரையறுத்துக் கொண்டார்கள். எனினும், அந்த பெரும்பாலானோரின் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள்ளும், சிறுபான்மையினராவது தமது பலத்த எதிர்ப்பை வெளியிட்டதையும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
எவ்வாறாயினும், தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையிலாவது எதிர்ப்புகள் எழுவதுவும், கருத்துகளைத் தெரிவிப்பதுவும் இன்னும் எமது நாட்டில் காணப்படுகிறது. ஆகவே, அவ்வாறான எதிர்ப்புகளை நீர்த்துப் போக விடாமல், மனிதன் என்ற ரீதியிலும், மனித உரிமைகள் அடிப்படையிலும், எதிர்ப்புகளைத் தெரிவிப்பதுவும், பகிரங்கமாக அதைச் செய்ய முன்வருவதும் இப்போது மிகவும் அத்தியாவசியமானவை.
போலீஸ் வன்முறைகள், இல்லாவிட்டால் சில சமயங்களில் முன்னெடுக்கப்படும் அரச வன்முறைகள் வடக்கில் நிகழ்ந்தாலும், தெற்கில் நிகழ்ந்தாலும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். அவற்றை தமிழர்களுக்கு, சிங்களவர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று பிரித்துப் பார்க்காமல் மொத்தமாக ‘மனிதன்’ எனும் பொதுவான எண்ணத்தோடு அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அத்தோடு, வன்முறைக்கோ, துன்புறுத்தல்களுக்கோ எதிர்ப்பு தெரிவிக்கும்போது இனம், மதம், நிறம், ஜாதி, குலம், கோத்திரம் எனப் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டுமாக இருந்தால் அதனால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்ப்பும், அது எவ்வளவுதான் பலத்த எதிர்ப்பாக இருந்தாலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்று பார்க்கும்போது சமூகத்துக்கு எவ்வித நலனையும் அது ஏற்படுத்தாது.
ஆகவே தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் ஊடாக எழக்கூடிய எதிர்ப்புகளை அவ்வாறான நீர்மமாதலுக்கு உட்படுத்தாமல் பரந்தளவிலான ஜனநாயக நோக்கோடு செயற்படுத்தும் பொறுப்பு, இலங்கை சமூகத்தின் முன்னேற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரிடமும் காணப்பட வேண்டும். அவ்வாறே, சில பேரிடமாவது தற்போது காணப்படும் அவ்வாறான ஜனநாயகத்தின் பெறுமதியை மென்மேலும் பலப்படுத்தவும், ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, பரவலான ஜனநாயக வாய்ப்புக்காக முன் வருவதுவும் இன்றைக்குப் போலவே எதிர்காலத்திலும் பயனளிக்கக் கூடியது.
வன்முறைகளுக்கான பிரதான காரணம்
போலீஸ் அதிகாரிகளாலும், இராணுவ அதிகாரிகளாலும் இவ்வாறு எவ்வித அச்சமும் இல்லாமல், நடுத்தெருவில் மனிதர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவது ஏன்? இது நாங்கள் எழுப்ப வேண்டிய அடுத்த கேள்வியாகும். இது பெரியளவில் விவரித்துச் சொல்லப்பட வேண்டிய விடயம் அல்ல.
எனினும், மேலே குறிப்பிட்ட குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை மிகக் குரூரமாகக் கொன்ற இராணுவ அதிகாரி தொடர்பாக யோசித்துப் பாருங்கள். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைத்தது. ரதுபஸ்வல பிரதேசத்தில் குடிதண்ணீர் கேட்டவர்களை துப்பாக்கியால் சுடுமாறு கட்டளையிட்ட இராணுவ அதிகாரியைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது ஜீவனோபாயத்தை நடத்திச் செல்ல மண்ணெண்ணெய் சலுகை கோரி அமைதியான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட ஹலாவதை பிரதேச மீனவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி எனப்படும் மீனவத் தொழிலாளி கொல்லப்பட்டார். அந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு என்ன நடந்தது? யோசித்துப் பாருங்கள். இதுதான் இலங்கை. இவை போல இன்னும் எக்கச்சக்கமான உதாரணங்கள் இருக்கின்றன.
இவ்வாறு குற்றம் செய்து தண்டனை வழங்கப்படாமல் இருக்கும் மிகப் பயங்கரமான கலாசாரத்தை தமது ஆட்சிக் காலத்தின் ஒரு பகுதியாக, இதுவரையில் இலங்கையை ஆண்ட அனைத்து அரசியல்வாதிகளும் பேணி வந்திருக்கிறார்கள். தற்காலத்திலும் நிலைமை அவ்வாறேதான் இருக்கிறது. ஆகவே, அவ்வாறான நிலைமையில் போலீஸோ, இராணுவ அதிகாரிகளோ மனிதர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்க எவ்வித அச்சமும் கொள்வதில்லை. அதனால் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாசாரத்தை அல்லது குற்றவாளியை குற்றத்திலிருந்து விடுவித்தலை தொடர்ச்சியாக செய்து வருதலும், அதற்கு சமூகத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்புகள் ஏதுமற்றிருப்பதும் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒரு பிரதான காரணம் ஆகும்.
எம். ரிஷான் ஷெரிப்
சமூக செயற்பாட்டாளர், இலங்கை 
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க