இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய மாநில அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (நவம்பர் 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நவம்பர் 10 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களின் 2 படகையும் அதிலிருந்த 23 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை அவர்களை இலங்கை சிறையில் அடைத்தது. அதேபோல் நேற்று (12.11.24) மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 12 பேரையும் ஒரு படகையும் சிறைபிடித்தது.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். போராடிய மக்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் இலங்கை சிறையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட மீனவர்களில் குறிப்பாக 6 மாதம், ஒரு ஆண்டு, 3 மாதம் சிறை தண்டனை என 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இந்த போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசை குவித்திருந்தது தமிழ்நாடு அரசு.
படிக்க: மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக் காரணம்!
தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 324 மீனவர்களை கைது செய்திருக்கிறது இலங்கை கடற்படை. ராமேஸ்வரம் மீனவர்கள் 125-க்கும் மேற்பட்டோர் இலங்கை சிறையில் உள்ளனர். நாட்டுப் படகுகள் விசைப்படகுகள் உட்பட 44 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
தங்கள் மீதான இவ்வன்முறைக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு வகைகளில் போராடி வந்தாலும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய ஒன்றிய-மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுப்பதில்லை.
குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்களை காக்கை குருவிகள் போல இலங்கை அரசு சுட்டுக்கொல்வது என்பது தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததிலிருந்தே தொடங்குகிறது. இலங்கையை தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே 1974-இல் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க. என தமிழ்நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் தங்களுடைய அரசியல் லாபத்திற்காகவே மீனவர்களின் பிரச்சனையை பேசுகின்றன. தற்போது கூட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதுடன் தன்னுடைய பணியை முடித்துக் கொண்டார். ஆனால், உண்மையில் கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் வகையிலான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
படிக்க: இலங்கை அரசுடனும் தமிழ்நாடு போலீசுடனும் போராடும் மீனவர்கள்
அதேபோல், தமிழ்நாட்டு மீனவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களின் விசைப்படகுகளால் இலங்கைத் தமிழ் மீனவர்களது வலை அறுத்தெறியப்படுவதும், மீன் குஞ்சுகள், முட்டைகள், பவளப்பாறைகள் என அனைத்தும் அரித்தெடுக்கப்படுவதால் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகுகிறது. அதேபோல், விசைப்படகுகள் பயன்பாடு மூலம் கடலின் தரைப்பகுதியில் உராய்வு ஏற்பட்டு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறுகிறது. இதனால் மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்வு கேள்விக்குள்ளாகிறது.
எனவே, கச்சத்தீவில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏற்ப கச்சத்தீவு பகுதியில், தமிழ்நாட்டு-இலங்கை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிப்பது என்ற வகையில் இருநாட்டு மீனவர்களும் ஓர் ஒப்பந்தத்திற்கு வர முடியும். கடல் சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளை கச்சத்தீவு பகுதியில் தடை விதிக்க வேண்டும். அதேவேளை, விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்திய எல்லைக்குட்பட்ட இதர கடல்பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமையை இந்திய அரசு வழங்க வேண்டும்.
ஆனால் இவற்றையெல்லாம் மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பின்னணியில், அதன் கார்ப்பரேட் சேவையே ஒளிந்துள்ளது. மோடி அரசு நிறைவேற்றியுள்ள கடல்வள மசோதா-2021, சாகர்மாலா திட்டம், கடலுக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்றவை மீனவர்களை கடலிலிருந்து விரட்டியடித்துவிட்டு கடல் வளங்களை கொள்ளையடிப்பதற்கான அத்தகைய திட்டங்களே. எனவேதான், இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொன்றாலும், சிறையிலடைத்தாலும் இந்திய அரசு கண்டுகொள்வதில்லை. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது குறித்தும் மறுபரிசீலனை செய்வதுமில்லை.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் கச்சத்தீவு மீதான பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்பது மற்றும் கடல் வளங்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் திட்டங்களை ரத்து செய்வது என்பதை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும்.
நற்சோணை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
தமிழ்நாடு & இந்தியா இவற்றை ஆளும் கட்சியினர் தனது கடல்எல்லையை சரியாக வகுக்காமல் ஆளுகின்றனர்.திவாலான நாடு
வல்லரசாக மாறும் நிலையிலுள்ள இந்தியாமீதுபடையெடுத்து இங்குள்ள குடிமக்களைகைதுசெய்கிறது.ஆள்வோருக்கு வெட்கமில்லை.இலங்கைமீது படையெடுக்க வேண்டும்.
அகில இந்திய சமூகநீதிபாதுகாப்புக்கூட்டமைப்பு.