மீனவர்கள் மீதான தாக்குதல்: இந்திய – இலங்கை அரசுகளின் கார்ப்பரேட் சேவையே மூலக் காரணம்!

அமெரிக்க-சீன பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கடல்வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே இலங்கை-தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கப்படுகின்றனர்.

ல்லை தாண்டினார்கள்’ என்ற காரணத்தைச் சொல்லி இலங்கை அரசு, தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வது, சுட்டுக் கொல்வது, விசைப்படகுகளை சிறைப்பிடிப்பது-நாட்டுடைமையாக்குவது ஒருபக்கம்; தமது உயிருக்கும், பறிக்கப்படும் படகுகள் – வலைகள், வாழ்வாதாரங்களுக்கு நீதிக் கோரி தமிழ்நாட்டு மீனவர்களின் போராட்டங்கள் மறுபக்கம்; தமிழ்நாட்டு மீனவர்களால் தமது மீன்பிடி வலைகள், மீன்வளம், கடல்வளம் அழிக்கப்படுவதாக சமீபகாலங்களில் இலங்கைத் தமிழ் மீனவர்கள் நடத்தும் போராட்டங்கள் இன்னொரு பக்கம் என சுமார் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பது ஏன்? தாங்களே ஏற்றுக்கொண்ட தீர்வுகளை தமிழ்நாட்டு மீனவர்கள் ஏன் நடைமுறைப்படுத்துவதில்லை? தீர்க்க முயற்சி எடுக்காத இந்திய – இலங்கை அரசுகளின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டிய நேரமிது.

தொடரும் தாக்குதல்கள்:

இவ்வாண்டில் பிப்ரவரி, மார்ச், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்வதையும் தாக்குதல் நடத்துவதையும் இலங்கைக் கடற்படை செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் மட்டும் 324 மீனவர்களைக் கைது செய்திருக்கிறது இலங்கைக் கடற்படை. நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் உட்பட 44 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. ‘‘கடந்த 2018 முதல் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு படகு கூட விடுவிக்கப்படவில்லை.  சிறைப்பிடிக்கப்பட்ட படகுகள் இலங்கை அரசால் நாட்டுடமையாக்கப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 125 மீனவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’‘ என்கின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.

கடந்த பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி 19 மீனவர்களைக் கைது செய்தது இலங்கைக் கடற்படை. இதில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஜான்சன் என்ற ஓட்டுநருக்கு ஆறு மாத சிறைதண்டனை விதித்திருக்கிறது இலங்கை நீதிமன்றம். ஜான்சன் ஏற்கெனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டு விடுதலையானவர் என்றும், மீண்டும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதால் ஆறு மாத சிறைதண்டனை விதித்திருப்பதாகவும் கூறுகிறது இலங்கை நீதிமன்றம். முதல்முறை கைது செய்யப்பட்டால் பிணையில் விடலாம் என்றும், அடுத்தடுத்த முறைகளில் சிறையில் அடைக்கப்படலாம் என்ற சட்டத்தை 2018-ஆம் ஆண்டில் இலங்கை அரசு நிறைவேற்றியுள்ளது.

தங்கள் மீதான இவ்வன்முறைக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு வகைகளில் போராடி வருகின்றனர். இலங்கைச் சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்புக் கொடி கட்டி, கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும், இலங்கை ரோந்துக் கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவரின் மரணத்திற்கு நீதிக் கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டனர் மீனவ மக்கள். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு  ரூ.10 லட்சத்தை இழப்பீடு நிதியும், ஒன்றிய அரசுக்குக் கடிதமும் எழுதிவிட்டு தனது கடமையை முடித்துக் கொண்டது தி.மு.க. அரசு.

தமிழ்நாட்டு மீனவர்கள் தமது பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமை உண்டு என்று பேசுகின்றன தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் இருந்த தி.மு.க-அ.தி.மு.க-வும் சரி, காங்கிரஸ்-பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள இதர கட்சிகளும் தங்களது அரசியல் லாபத்திற்காகவே மீனவர் பிரச்சினைகளைப் பேசுகின்றன. 40 ஆண்டுகளாக நம் மீனவர்கள் அனுபவிக்கும் இன்னல்களைத் தீர்ப்பதற்கு, கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்கு, ஒன்றிய அரசை நிர்பந்திக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதையும் இவர்கள் எடுக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இப்போதுகூட பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள பா.ம.க, கூட்டணிக்கு பங்கம் வராமல் இப்பிரச்சினைக் குறித்து அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறது.

விசைப்படகு – நாட்டுப்படகு பிரச்சினை:

பாம்பன் – மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியா-இலங்கைக்கிடையேயான கடல் எல்லையின் தூரம் வெறும் 12 கடல்மைல் மட்டுமே. இந்தப் பகுதியில்தான் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டும் பிரச்சினை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. குறிப்பாக, விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களே பெரும்பாலும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதோடு, கடல் வளத்தை அழிக்கும் இழுவை வலைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது இலங்கை அரசு மற்றும் மீனவர்களின் குற்றச்சாட்டாகும்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

இந்திய – இலங்கை மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலேயே நாட்டுப்படகு – விசைப்படகு மீனவர்கள் இடையிலான மோதல்கள் இருந்து வருகின்றன. கரையிலிருந்து ஐந்து கடல்மைல் தொலைவுவரை விசைப்படகுகள் மீன் பிடிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. விசைப்படகுகள் இதை மீறும் நிலையில், நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்படைகின்றனர். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட கடற்பரப்பில் இரண்டுவகைப் படகுகளும் ஒரே சமயத்தில் மீன்பிடித்தாலும் கூட, அதிகத்திறன் கொண்ட எஞ்சின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தீர்மானிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே மீன்பிடித்துத் திரும்புவதால், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளில் மோதி அறுத்துவிடுகின்றன என்ற பிரச்சினை தொடர்ச்சியாக உள்ளது. மேலும், ஐந்து கடல்மைலுக்கு உட்பட்ட கரைக்கடல் பகுதிகளிலும் விசைப்படகுகள் மீன்பிடிப்பதும், அவர்களில் சிலர் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதும் மோதலுக்கான அடிப்படைக் காரணமாக உள்ளன.

பாம்பன், இராமேஸ்வரம் பகுதியிலும் கூட இத்தகைய பிரச்சினைகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. வாரத்தில் நான்கு நாட்கள் நாட்டுப்படகுகளும், மூன்று நாட்கள் விசைப்படகுகளும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டுமென முறைப்படுத்திய பிறகு இப்பிரச்சினை குறைந்துள்ளது என்கின்றனர் மீனவப் பிரதிநிதிகள்.

விசைப்படகுகளும், எல்லைத் தாண்டுதலும்:

1960-களில் இந்திய அரசு, நார்வே நாட்டு உதவியுடன் இழுவை விசைப்படகுகளை அறிமுகம் செய்தது. அதுவரை பாரம்பரியமாகவும், உள்நாட்டுத் தேவைக்காகவும் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சந்தைக்காக மீன்பிடிப்பதை நோக்கித் தள்ளியது ஒன்றிய அரசு. இதற்காக மானியங்களும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மீனவர்களிடையே விசைப்படகு முதலாளிகள், தொழிலாளர்கள், நாட்டுப் படகு மீனவர்கள் என்ற வர்க்க அடிப்படையிலான வேறுபாடு உருவாகியுள்ளது.

இழுவை விசைப்படகுகள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த 50 ஆண்டுகளில் கடல் உணவுக்கான சந்தை மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறால் வகைகள் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, பிரிட்டன், மத்திய ஆசியா, தென்கிழக்காசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒன்றிய அரசு செய்திக்குறிப்பின்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ. 60,523.89 கோடி மதிப்புள்ள 17,81,602 மெட்ரிக் டன் கடல் உணவு  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக வருவாய் ஈட்டக்கூடியது பதப்படுத்தப்பட்ட இறால் ஏற்றுமதியே. 40 சதவிகித இறால் ஏற்றுமதியின் மூலம் 60 சதவிகிதம் வருமானம் ஈட்டப்படுகிறது.

மேலும், இந்திய அளவில் கடல் உணவு ஏற்றுமதியில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இறால்கள் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட 12 கடல்மைல் பரப்பில் அதிகம் கிடைப்பதில்லை. இவை கச்சத்தீவை அடுத்த இலங்கைக் கடற்பரப்பில்தான் பெருமளவில் உள்ளன. எனவே கச்சத்தீவைத் தாண்டாமல் இவற்றைப் பிடிக்க முடியாது. அதேவேளையில், இந்த மிகப்பெரும் மீன்சந்தையை ஒன்றிய அரசும், ஏற்றுமதி நிறுவனங்களும், விசைப்படகு முதலாளிகளும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. இவர்களின் நலனுக்காகவே, அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் தமிழின விரோத இலங்கை அரசின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்திய ஒன்றிய அரசின் துரோகம்

தமிழ்நாட்டு மீனவர்களை காக்கை குருவிகள் போல இலங்கை அரசு சுட்டுக்கொல்வது என்பது  தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததிலிருந்தே தொடங்குகிறது. இலங்கையை தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே 1974-இல் இந்திராகாந்தி- ஸ்ரீமாவோ பண்டாரநாயக ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக மீனவர்களுக்கு ஒன்றிய அரசு செய்த மாபெரும் துரோகமாகும்.

நிறைவேற்றப்பட்ட இவ்வொப்பந்தத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடிக்க உரிமையுண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு 1976-இல், இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையே கச்சத்தீவு குறித்து மற்றொரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் கடல் எல்லைகளை வரையறுத்ததோடு, இவ்விரு நாடுகளும் தத்தம் கடற்பகுதியில் இறையாண்மை உள்ளவர்கள் என்று குறிப்பிட்டது. இவ்வொப்பந்தத்தில் யாத்ரீகர்கள் மற்றும் மீனவர்கள் உரிமை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதன் மூலம், 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட பல சலுகைகள், குறிப்பாக கச்சத்தீவில் மீன்பிடிப்பது போன்றவை மறைமுகமாகப் பறிக்கப்பட்டன. கச்சத்தீவின் மீதான தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை முற்றாகப் பறித்த இந்த ஒப்பந்தத்தை இரகசியமாக வைத்திருக்கிறது ஒன்றிய அரசு.

இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு காங்கிரசும்-தி.மு.க-வும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்ததுதான் காரணம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டு மக்களிடம் ஓட்டுவாங்குவதற்காக  பா.ஜ.க. காவி கும்பல் போட்ட நாடகத்தை தமிழ்நாடே பார்த்தது. தனது பத்தாண்டு ஆட்சிக் காலத்தில், இலங்கையில் கப்பல் கட்டுவது மற்றும் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை தனது எஜமானன் அதானிக்குப் பெற்றுத் தருவதிலேயே குறியாக இருந்தது மோடி அரசு. ஆனால், அதே பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினையைத் தீர்க்க  மோடி அரசு எடுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் என்ன? இதே காலகட்டத்தில், இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான, அதிகாரிகள் மட்ட அளவிலான இந்திய-இலங்கைக் கூட்டுப் பணிக்குழுக்கூட்டம் 2016 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது. இக்கூட்டங்களில், கச்சத்தீவின் மீதான தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை  நிலைநாட்டுவதற்குரிய எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தாமல் தனது பங்கிற்கு தமிழ்நாட்டு மீனவர்களின் முதுகில் குத்தியது மோடி அரசு.

2022-இல் நடைபெற்ற கூட்டத்தில் இருநாட்டு கப்பற்படையும் தத்தம் பகுதிகளில் ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, கடல்பாசி வளர்ப்பு, கடல் சார் உயிரின வளர்ப்பு, பல்வேறு மீன் வளர்ப்பு மற்றும் ஆழ்கடல் மீன்பிடித்தல் போன்ற மாற்று வாழ்வாதாரக் கட்டமைப்புகள் உருவாக்குதல் ஆகியவைகளே தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைத் தாண்டுவதைத் தடுக்க இந்திய அரசு மேற்கொண்ட ‘முயற்சிகளாகும்’. இவை தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிமையுள்ள, பாரம்பரிய கடல்பகுதிகளிலிருந்து விரட்டுகிற நோக்கத்திலானவையாகும்.  2016 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரு கூட்டங்களிலும் கடல்சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளைத் தடைசெய்வது-குறைப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இவை எதுவும் நடைமுறைக்குச் செல்லவில்லை. இதிலிருந்தே தமிழ்நாட்டு மீனவர்களின் மீதான மோடி அரசின்  ‘அக்கறை’யைப் புரிந்துக்கொள்ள முடியும்.

சுமார் இருபதாண்டுகளாக, விசைப்படகுகள் – இழுவை வலைகளைக் கைவிட கால அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்களே தவிர, மாற்றம் ஏதுமில்லை என்பதே இலங்கை தமிழ் மீனவர்களின் கோபத்திற்கும் காரணமாக உள்ளது.

தற்போதைய மூன்றாவது ஆட்சிக்காலத்தில்கூட இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையையும் தாமாக முன்னெடுக்கவில்லை மோடி அரசு. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றும், அதற்காகக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து இருநாட்டு மீனவர் தரப்பிலிருந்தும், தமிழ்நாட்டுக் கட்சிகள் சார்பிலிருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இதன்பிறகே, இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

பறிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதார உரிமை:

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் சிங்கள இனவெறி அரசுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தப் பிறகு, இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மீனவர்கள் மீன்பிடித்தலுக்குத் திரும்பினர். இவர்கள் பாரம்பரிய செவுள் வலை கொண்டு மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டு மீனவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். இதிலிருந்தே இலங்கையின் நாட்டுப்படகு மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர்களுக்குமான முரண்பாடு ஏற்படுகிறது.

இருநாட்டு மீனவர்களும் மிகக்குறுகிய மன்னார் வளைகுடா பகுதியில்தான் மீன்பிடிக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்பு வரை தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு, தமிழ்நாட்டு மீனவர்களின் விசைப்படகுகளால் இலங்கைத் தமிழ் மீனவர்களது வலை அறுத்தெறியப்படுவதும், மீன் குஞ்சுகள், முட்டைகள், பவளப்பாறைகள் என அனைத்தும் அரித்தெடுக்கப்படுவதால் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாவது என்ற பிரச்சினையும் முன்னுக்கு வந்தது. இழுவை விசைப்படகுகளின் மூலம் மீன்பிடிப்பதால் ஒரு வாரத்திற்கும் மேலாக அப்பகுதியில் மீன்கள் கிடைப்பதில்லை என்கின்றனர் இலங்கைத் தமிழ் மீனவர்கள். எனவே, விசைப்படகுகளைக் கொண்டு இப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்பதுதான் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மற்றபடி நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை அவர்கள் ஒரு  பிரச்சினையாகக் கருதவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டு விசைப்படகு மீனவர்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று யாழ்ப்பாண மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும், விசைப்படகுகள் மூலம் மன்னார் வளைகுடாப் பகுதியில் 80 அடி ஆழம் வரை – கடல் தரையை ஒட்டி –  மீன்பிடிக்கப்படுகிறது. இதனால் கடலின் தரைப்பகுதியில் உராய்வு ஏற்பட்டு கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறுகிறது. இதனால் மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்வு கேள்விக்குள்ளாகிறது. உலகெங்கிலும் விசைப்படகுகளின் மூலமாக ஆண்டிற்கு 370 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படுகிறது. இது தவிர்க்க முடியாத அளவிற்கு மிகப் பெரியது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 1996-2020 வரை 8.5-9.2 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டுள்ளது என்கிறது ஒரு ஆய்வு. மேலும், விசைப்படகுகள் பயன்படுத்துவதை  ‘‘கடல் காடழிப்பு’‘ (Marine deforestation) என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது சரிசெய்யப்பட முடியாத அளவிற்கான தீங்கை கடல்வாழ் உயிரினங்களுக்கும், பருவகாலத்திற்கும், சமூகத்திற்கும் ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே புவி வெப்பமடைவதால் பருவகால மாற்றங்களும், பெருமழை- அதீத வெப்பம்-வெப்ப அலை வீசுவது என பேரிடர்களே இயல்புநிலையாக மாறியிருக்கிற இந்த சூழலில்,  மேலும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது புவிக்கோளத்தின் இருப்பிற்கே ஆபத்தானதாகும். எனவே, கடல் சூழலியலுக்கும், தமிழ்நாட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளைப் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பது காலத்தின் அவசியமாகும்.

மீனவர்கள் பிரச்சினைக்கான தீர்வு என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித்தளமான கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டதும்,  தமிழ்நாட்டு மீனவர்களின் விசைப்படகுகளால் கடல் சூழலியலும், இலங்கைத்  தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுமே இருநாட்டு மீனவர்களுக்கிடையேயான பிரச்சினையின் மையமாகும். இப்பிரச்சினையை இருநாட்டு மீனவர்களும் தங்களுக்கிடையே பேசித் தீர்ப்பதன் மூலமே சரிசெய்ய முடியும். கச்சத்தீவில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஏற்ப கச்சத்தீவு பகுதியில், தமிழ்நாட்டு-இலங்கை நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிப்பது என்ற வகையில் இருநாட்டு மீனவர்களும் ஓர் ஒப்பந்தத்திற்கு வர முடியும். கடல் சூழலியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிற விசைப்படகுகளை கச்சத்தீவு பகுதியில் தடை விதிக்க வேண்டும். அதேவேளை, விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இந்திய எல்லைக்குட்பட்ட இதர கடல்பகுதிகளில் மீன் பிடிப்பதற்கான உரிமையை இந்திய அரசு வழங்க வேண்டும். இதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை மீனவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுக்கு வருவதே பொருத்தமாக இருக்கும்.

கடலை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்தியங்கள் – எதிரிகளாக்கப்படும் மீனவர்கள்:

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான கடல்பகுதியானது பல்வேறு வளங்களைக் கொண்டதாகும். புவிசார் அரசியல்ரீதியாக ஏகாதிபத்திய-பிராந்திய மேலாதிக்க நலனுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். எனவேதான், இலங்கையில் மேலாதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்க-சீன ஏகாதிபத்தியங்கள் போட்டி போடுகின்றன. இந்தப் போட்டாபோட்டியின் விளைவே இலங்கையில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களாகும்.

அந்த வகையில், கடல்வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும், மேலாதிக்க நலனிலிருந்தும் பல்வேறு திட்டங்களை இந்திய-இலங்கை அரசுகள் திட்டமிட்டு நிறைவேற்றியுள்ளன. இந்திய அரசு நிறைவேற்றியுள்ள கடல்வள மசோதா-2021, சாகர்மாலா திட்டம், கடலுக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்றவை கடல்வளங்களை கார்ப்பரேட்டுகளின் கட்டற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதற்கானவையே. இந்த நோக்கத்திலிருந்துதான் தமிழ்நாட்டு மீனவர்களைக் கடலிருந்து விரட்டத் துடிக்கிறது இந்திய அரசு. இதற்கு ஒரு கருவியாக இலங்கை அரசையும் பயன்படுத்திக் கொள்கிறது. எனவேதான், இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொன்றாலும், சிறையிலடைத்தாலும் இந்திய அரசு கண்டுகொள்வதில்லை. கச்சத்தீவு  தாரைவார்க்கப்பட்டது குறித்தும் மறுபரிசீலனை செய்வதுமில்லை.

இலங்கையைப் பொறுத்தவரை, தமிழ் மீனவர்கள் அதிகமுள்ள வடமாகாணத்தில் புத்தாளம்-மன்னார் பகுதிகளுக்கிடையேயான மாவட்டங்களில்  5,000 ஏக்கர் கடற்பரப்பில் கடல் அட்டை (Sea cucumber) பண்ணை அமைத்து வளர்ப்பதற்கு குயி லான் என்ற சீன நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது. இந்த கடல் அட்டைப் பண்ணையானது இயல்பான மீன்களின் மறு உற்பத்தியைப் பாதிக்கக்கூடியதாகும். கடல்வளத்தை நாசமாக்கக்கூடிய இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 2022-இல் இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும், இந்த கடல் அட்டை வளர்ப்பானது சீனா கட்டமைக்கவுள்ள கடல்வழியிலான பட்டுப்பாதைத் திட்டத்தின் ஓர் அங்கமாகவும் கருதப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இருநாட்டு மீனவர்களது கடல் உரிமையைப் பறிப்பதாகும்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க-சீன பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கடல்வளங்களை கொள்ளையடிப்பதற்காகவே இலங்கை-தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கப்படுகின்றனர். இந்த கார்ப்பரேட் சூறையாடலிருந்து கடலை மீட்க, கார்ப்பரேட் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிராக இந்திய-இலங்கை மீனவர்கள் ஒன்றுபட்டு போராடுவதே ஒரே தீர்வு.


அப்பு

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க