பாக் நீரிணை, மன்னார் வளைகுடா, வங்காள விரிகுடா பகுதிகளில் எல்லைகளை வகுப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் 1974-லும் 1976-லும் கையெழுத்தான இந்தியா – இலங்கை கடல் எல்லை ஒப்பந்தங்கள் பாக் நீரிணைப் பகுதியில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்தன. எல்லை வகுத்தபின் மீன்வளம் அதிகமிருக்கும் பகுதிகள், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்தன. இதை முன்னிட்டுத் தமிழக மீனவர்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் தொடர்ந்து மோதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இப்படி மோதல் நடக்கும் போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்ற குரல் தமிழகத்தில் எழுகிறது

இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? கட்டாந்தரையான சிறிய தீவான கச்சத்தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? இந்திய – இலங்கை உறவுகளில் சிக்கல் ஏற்படாமல் இந்தியாவின் நலன்களை, குறிப்பாகத் தமிழக மீனவர்களின் நலன்களை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் முடியுமா? பாக் நீரிணைப் பகுதியைச் சர்ச்சைக்குரிய பிரதேசமாகப் பார்க்காமல், அந்நீரிணையின் இரு புறமும் வசிக்கும் மீனவர்களின் பொதுச் சொத்தாகப் பார்க்க முடியாதா? இந்தப் பகுதியில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் கூட்டு முயற்சியின் மூலம் அதை மேம்படுத்த முடியாதா? இந்தக் கேள்விகளுக்கு விடைதேட முயல்கிறது இந்தப் புத்தகம். (நூலின் முன்னுரையிலிருந்து)

பாக் நீரிணையில் வசிக்கும் மீனவர்களின் பிரச்சினைகளில் இருக்கும் சிக்கலைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் மாறிவரும் இந்திய – இலங்கை உறவுகளின் பின்னணியில் மீன்பிடித் தொழிலைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் அடுத்தடுத்து வந்த மத்திய, மாநில அரசுகள் மீன் பிடித்தல் தொடர்பாக உருவாக்கிய கொள்கைகள் மீன்பிடித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, மீன் பிடித்தல் என்பது உள்ளூர்ச் சந்தையை மட்டுமே மையப்படுத்தியதாக இருந்தது. சென்னை மாகாணம், கொச்சி, திருவாங்கூர் சமஸ்தானங்களிலிருந்து கருவாடு சிறிய அளவில் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

1950-களில் உறைய வைக்கப்பட்ட இறால் மீன் ஏற்றுமதியாக ஆரம்பித்தது. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் இறால் மீனுக்கான கிராக்கி பெருமளவு அதிகரித்ததும் அரசின் கொள்கையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தேசத்தின் இறக்குமதியைச் சமாளிக்கும் அளவுக்கு அந்நியச் செலாவணி இருப்பு கிடையாது. இது தேசத்தின் கொள்கை வகுப்பாளர்களுக்குப் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. இந்தத் தருணத்தில்தான் இறால் மீனுக்கு வெளிநாட்டில் இருக்கும் மவுசு அரசின் கண்ணில் பட்டது. அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது அரசு. “கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை, குறைவான உற்பத்தித்திறனும் அதனால் ஏற்படும் ஏழ்மையும்தான் பாரம்பரிய மீனவர்களின் பிரச்சினை என்று புரிந்து கொண்டனர். இந்த ஏழ்மைக்கு உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் அதிகரிப்பது என்ற வியூகத்தை முன்வைத்தனர். அதாவது பழைய, பாரம்பரிய வள்ளங்களிலிருந்து பிரிட்டன், நார்வே போன்ற தொழில்மயமான நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரப் படகுகளுக்கு மாறுவதுதான் அவர்கள் முன்வைத்த வியூகத்தின் அடிப்படை” என்று குறிப்பிடுகிறார் மீன்வள நிபுணரான ஜான் குரியன். (நூலிலிருந்து பக் 34-35)

பாக் நீரிணையின் இருபகுதியிலும் வசிக்கும் மீனவர்கள் வரலாறு, மொழி, பண்பாடு எனப் பல வகையிலும் பிணைக்கப்பட்டவர்கள். கடந்த காலத்தில் அவர்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தனர். 1974இல் கடல் எல்லை வகுக்கப்பட்டுவிட்டாலும் எல்லையைத் தாண்டி மீன் பிடிப்பதென்பது பொதுவாக நடந்துகொண்டுதான் இருந்தது. இலங்கையில் இனப் போராட்டம் துவங்கியபோது கடும் துயரங்களை அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். தமிழ்நாடு அவர்களுக்குப் புகலிடமாக அமைந்தது. கடந்த காலத்தில் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயல்பட்டதை மனதில் வைத்துப் பார்த்தால், இப்போதும் இரு தரப்பும் தங்களுக்கிடையில் இருக்கும் புரிதலை அதிகரிக்க முடியும். பிரச்சினைகளைக் குறைக்க முடியும். இப்போது ஒரு புதுமையான அணுகுமுறை தேவை. பிராந்திய ஒத்துழைப்பு என்ற விரிந்த பார்வையில் பிரச்சினையைப் பார்க்க வேண்டும். தெற்காசியாவில் மிகப் பெரிய நாடு என்ற வகையில் இந்தியாதான் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தெற்காசியப் பார்வையில் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

படிக்க:
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !
மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

கேரளா ஸ்வதந்திர மலையாள தொழிலாளி ஃபெடரேஷ னுக்கும் கேரளா ட்ரால்நெட் போட் ஆபரேட்டர்ஸ் அசோசி யேஷனுக்கும் இடையில் ட்ராலர்களைப் பயன்படுத்துவது குறித்து ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி, “ஒரு வருடத்தில் பிடிக்கப்பட்ட மீன்களின் அளவை மட்டும் வைத்துப் பொது நலனை அளவிட முடியாது. பாரம்பரிய மீனவர்களின் பொருளாதார நலனைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைந்த வாழ்வாதாரமும் இல்லாமல் போகக்கூடும். அப்படி நடக்காமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டார். (நூலிலிருந்து பக்.131-132)

நூல்:கச்சத்தீவும் இந்திய மீனவரும்
ஆசிரியர்கள்: வி. சூரியநாராயன், கே. முரளிதரன்

வெளியீடு: சென்டர் ஃபார் ஏசியா ஸ்டடீஸ் மற்றும் காலச்சுவடு,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001.
தொலைபேசி: 91-4652 – 278525.
மின்னஞ்சல் : publications@kalachuvadu

பக்கங்கள்: 148
விலை: ரூ 175.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: commonfolks | noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகத்தின் புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க