பத்திரிகைச் செய்தி

02-04-2019

ரசியல் சட்டத்திற்கு எதிராகவும் அறிவியலுக்குப் புறம்பாகவும் தமிழக அறநிலையத்துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஒரு ஆணை வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும்; வருணஜபம், நந்தி பூஜையோடு அமிர்த வர்ஷிண, மேக வர்ஷிணி,  கேதாரி, ஆனந்தபைரவி, ரூப கல்யாணி ஆகிய ராகங்களில் பாடல்கள் பாட வேண்டும்; ஓதுவார்களைக் கொண்டு தேவாரப் பதிகங்களைப் பாட வேண்டும் என்பன உள்ளிட்ட விரிவான ஆணை வெளியிட்டுள்ளதோடு, சுந்தரர் பதிகம் பாடி மழை பொழிய வைத்த கதையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மதச்சார்பற்ற அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவியலுக்கு எதிராகச் செயல்படுவதும் அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது. அறநிலையத்துறை உடனடியாக இந்த ஆணையை திரும்பப் பெற வேண்டும்.

யாகம் நடத்தி பாட்டு பாடி மழை பெய்ய வைக்க முடியுமென்றால் வேலையின்மை, வறுமை போன்று ஆயிரக்கணக்கான மக்கள் பிரச்சினைகளையும் இதே போல மிக எளிதாகத் தீர்த்து விடலாமே!

கோடையில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்வது இயல்பான இயற்கை நிகழ்வு. இதைப் பயன்படுத்திக்கொண்டு யாகம் என்ற பெயரில் ஊழல் நடக்குமேயன்றி சொட்டு மழைகூடப் பெய்யாது.

செயற்கைக்கோள்கள் போன்ற அதிநவீன அறிவியல் சாதனங்கள் மூலம் மிகத்துல்லியமாக வானிலையைக் கணிக்கும் இந்தக் காலத்தில், இவ்வாறு மூட நம்பிக்கையின் அடிப்படையில் ஆணை வெளியிடுவது மிகவும் ஆபத்தானதாகும்.

அறிவியல் நெறிகளை வளர்க்க வேண்டிய அரசு இவ்வாறு கட்டுக் கதைகளையும் மூடநம்பிக்கைகளையும் வளர்ப்பது எதிர்காலச் சமுதாயத்தை சீரழிக்கும் செயலாகும். தமிழக அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ், பாஜகதான் இயக்குகிறது என்ற தமிழக மக்கள் கருத்தை மெய்ப்பிப்பதாகவே அறநிலையத்துறை ஆணையரின் செயல் அமைந்துள்ளது. எனவே உடனடியாக இவ்வாணையைத் திரும்பப் பெற வேண்டும். பணிந்தர் ரெட்டி ஆணையர் பொருப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

இவண்
காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.