“நான் இந்துத்துவாவை ஒருபோதும் நம்பவில்லை. மாணவர்கள் விரைவில் ஏபிவிபி-யை விட்டு வெளியேறுவார்கள்” என்கிறார் சமீபத்தில் ஏபிவிபி-யில் இருந்து வெளியேறிய முன்னாள் ஏபிவிபி தலைவர் ராம் நிவாஸ்.
டெல்லி பல்கலைக் கழகத்தை சேர்ந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ABVP) உறுப்பினர் ஆவார். இவர் சமீபத்தில் அந்த மாணவர் அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.
டெல்லி பல்கலைக் கழகத்தில் செயல்படும் காங்கிரசின் மாணவர் அமைப்பான National Students Union of India – NSUI நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பிஷ்னோய், ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவையும், அதன் செயல்பாடுகளையும் வெளிப்படையாக விமர்சித்தார். “நான் ஒருபோதும் இந்துத்துவாவை நம்பவில்லை. நான் மக்களுக்கு சேவை செய்யவே விரும்பினேன்” என்றார்.
படிக்க :
ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஓர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் பிஷ்னோய். அவர் குடும்பத்திற்கு எந்தவித அரசியல் பின்னணியும் கிடையாது. ஆனால், அவருக்கு அரசியலில் விருப்பம், அதை அவரது குடும்பமும் ஒருபோதும் எதிர்த்தது இல்லை.
ராம் நிவாஸ் பிஷ்னோய்
24 வயது நிறைந்த பிஷ்னோய், கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்தார். கல்லூரி செல்வதற்காக ஜெய்ப்பூருக்கு குடிபெயர்ந்தார். அவர் கல்லூரி சேர்ந்த நேரத்தில்தான், நரேந்திர மோடியும் பிரதமரானார். அதன் காரணமாக பல்கலைக் கழகத்தில் சொங்கிக் கிடந்த ஏபிவிபி வலுவாக செயல்படத் துவங்கியது. ஏற்கெனவே, ஏதேனும் அரசியலில் இணைந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த பிஷ்னோய் ஆர்.எஸ்.எஸ். காவிக் கும்பலின் மாணவர் அமைப்பான ஏபிவிபி பல்கலைக் கழகத்தில் மாணவர் நலன்களை பற்றியெல்லாம் பேசுகிறது என்று எண்ணி அவ்வமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். பிறகு 2018-ல் முதுகலைப் படிப்புக்காக டெல்லி பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு ஏபிவிபி-யின் பல்கலைக் கழக யூனிட் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
எனினும், அந்த அமைப்பு பின்பற்றிய இந்துத்துவா சித்தாந்தத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் பிஷ்னோய். “நான் எப்போதும் மதச்சார்பின்மை அடிப்படையில் செயல்பட விரும்புகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக நாம் உழைக்க வேண்டும்” என்று பேசிய பிஷ்னோய், “ஆனால் ஏபிவிபி அப்படி செயல்படவில்லை. அவர்கள் மாணவர்களுக்கும், மக்களுக்கும் நல்லது செய்வது போல் பேசுகிறார்களே தவிர, வேறு எதுவும் செய்வதில்லை. குறிப்பாக, கொரோனா காலத்தில் ஏபிவிபி என்ன செய்து கொண்டிருந்தது என்பதில் அவ்வமைப்பில் இருக்கும் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களின் கருத்துக்களை வெளிப்படையாக கூற மிகவும் பயப்படுகிறார்கள். அவர்களை நான் அறிவேன். என்னைப் போலவே அவர்களும் வெளியேறுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
மேலும், “பகத்சிங் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரிடத்தில் சாவர்க்கரை எப்படி வைக்க முடியும். உண்மையில் தற்போதைய சூழலில் சாவர்க்கரை முன்னிறுத்துவது பயனளிப்பதால் மட்டுமே ஏபிவிபி அவரைப் பாராட்டுகிறது என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.
எதேனும் ஒர் இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், மதசார்பின்மையை கடைபிடிக்க என்று விரும்பி, ஏபிவிபி-யில் இணைந்த ராம் நிவாஸ் பிஷ்னோய், இந்துமதவெறியை அடிப்படையாக கொண்ட அமைப்பு என்பதை உணர்ந்து ஏழு ஆண்டுகள் கழித்து வெளியேறியிருக்கிறார். இவர் மட்டுமல்ல இவரை விடவும் தீவிரமாக செயல்பட்ட பலர் சங்கப் பரிவார கும்பலிடமிருந்து வெளியேறி, பாசிஸ்டுகளின் செயல்களை பொது அரசியல் தளத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை உழைக்கும் மக்கள், மாணவர்களிடம் ஆர்.எஸ்.எஸ். – சங்க பரிவாரக் கும்பலின் சதிகளையும், அவர்களது உண்மை நோக்கத்தையும் அம்பலப்படுத்துவதன் மூலம், மட்டுமே ஆர்.எஸ்.எஸ். – ஏபிவிபி போன்ற பாசிச கும்பல்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : edexlive

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க