இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி டிசம்பர் 7 அன்று இராமேசுவரம் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த புதன்கிழமையன்று (டிசம்பர் 4) கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இராமேசுவரத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்ததுடன் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டிசம்பர் 6-ஆம் தேதி அனைத்து விசைப்படகு மீனவர்களும் இணைந்து ஒரு நாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும், மீன் பிடி படகுகளையும் மீட்க வேண்டும்; மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
படிக்க: மீனவர்களின் தொடர் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
அப்போராட்டத்தைத் தொடர்ந்து டிசம்பர் 7-ஆம் தேதி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து தங்கச்சிமடத்தில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கிக் கிளை முன்பு அமர்ந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசு பேச்சுவார்த்தை நடத்திதையடுத்து மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளப்பட்டது. இருப்பினும் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் தமிழ்நாடு மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து சிறையிலடைப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மீனவ மக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் ஒன்றிய மாநில அரசுகள் தங்களின் கார்ப்பரேட் நலன்களுக்காக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை. மாறாக, மக்கள் போராடும்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்கள் போராட்டங்களை கலைத்து விடுகின்றனர்.
எனவே, தமிழ்நாடு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது; கச்சத்தீவு மீதான பாரம்பரிய உரிமையை மீட்டெடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளின் கீழ் தமிழ்நாடு முழுவதுமுள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram